3,000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன் : சீமான்.. துறைமுகம் மற்றும் தளி தொகுதி !

பரவிய செய்தி
3000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன் என்று சொல்லுங்கள். நான் தீ குளிக்கிறேன். – சீமான்
மதிப்பீடு
விளக்கம்
நேற்றைய தினம் (செப், 28) நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கும்பகோணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது ‘என்னுடன் கூடுகின்ற கூட்டம் இரண்டு கட்சிகளும் வேண்டாம் என வெறுத்து தான் கூடுகிறது. என்னுடைய செல்வாக்கு என்பதை, இந்த திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்கிற மக்கள், 60 ஆண்டுகளாக எங்களை ஆண்டு எங்களை இந்த நிலைக்குத் தள்ளி விட்டு விட்டார்களே என்று வெறுக்கின்ற மக்கள் தான் என் பின்னால் திரள்கிறார்கள்’ எனக் கூறினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் ‘ஒரு தொகுதிக்கு 3000 ஓட்டு மட்டும் வாங்கினால் போதுமா சார்’ எனக் கேட்கிறார். ‘ஒரு தொகுதிக்கு 25,000 ஓட்டுகள் வாங்கி இருக்கிறேனே நீங்கள் தூக்கில் தொங்குகிறீர்களா? 37,000 ஓட்டு வாங்கி இருக்கிறேனே தூத்துக்குடியில், விஷம் குடிக்கிறீர்களா? 3,000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன் என்று சொல்லுங்கள் நான் தீக்குளிக்கிறேன்’ எனச் சீமான் பதிலளித்தார்.
உண்மை என்ன ?
நாம் தமிழர் கட்சி கடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அத்தேர்தலில் எந்தெந்த தொகுதியில் எவ்வளவு வாக்கு வாங்கியது என்கிற விவரம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளது.
அத்தரவினை ஆய்வு செய்ததில், நாம் தமிழர் கட்சி 3,000-க்கு குறைவாக எந்த தொகுதியிலும் வாக்கு பெறவில்லை என்பதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் 3,000 முதல் 4,000-க்கு இடைப்பட்ட வாக்குகள் இரண்டு தொகுதிகளில் பெற்றுள்ளது.
அதன்படி நாம் தமிழர் கட்சி சென்னையில் உள்ள துறைமுக தொகுதியில் 3,357 வாக்குகள் பெற்றுள்ளது. அடுத்ததாகக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி என்னும் தொகுதியில் 3,776 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அடுத்தபடியாக தூத்துக்குடியில் 37,000 வாக்குகள் பெற்றதாகச் சீமான் கூறுகிறார். அதுவும் தவறான தகவல். அத்தொகுதியில் 30,937 வாக்குகளைத்தான் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி அதிகபட்சமாக திருவெற்றியூர் தொகுதியில் 48,597 வாக்குகளைப் பெற்றுள்ளது. அத்தொகுதியில் சீமான் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில் தன்னை கேள்வி கேட்ட பத்திரிகையாளரை எந்த ஊடகம் எனச் சீமான் கேள்வி கேட்டார். மாலை மலர் என்றதும், உங்கள் பெயர் என்ன என்று அடுத்த கேள்வியை முன்வைத்தார். அவர் ‘சிராஜுதீன்’ என்றதும் “அப்போ நீ பேசுவ” எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முடிவு :
நம் தேடலில், 3000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன் என்று சொல்லுங்கள் என சீமான் பேசி இருக்கிறார். ஆனால், நாம் தமிழர் கட்சி துறைமுகம் மற்றும் தளி தொகுதிகளில் முறையே 3,357 மற்றும் 3,776 வாக்குகளைப் பெற்றுள்ளது என்பதை அறிய முடிகிறது.