This article is from Jul 05, 2019

நாகாலாந்திற்கு தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்-க்கு மத்திய அரசு ஒப்புதலா ?

பரவிய செய்தி

நாகாலாந்து மாநிலத்திற்கு தனிக் கொடி, தனி பாஸ்போர்ட், தனி அரசியல் சாசனம் ஆகியவற்றிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

இந்திய யூனியனில் அங்கமாக இருக்கும் நாகாலாந்து மாநிலத்திற்கு தனி அரசியல் சாசனம், தனிக் கொடி, தனி பாஸ்போர்ட் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாக செய்தித்தாள் ஒன்றில் வெளியான கட்டுரையை ஆராய்ந்து உண்மை செய்தியை கூறுமாறு Youturn ஃபாலோயர் ஒருவர் நம்மிடம் அனுப்பி இருந்தார்.

இதே தலைப்பில், ” நாகலாந்துக்கு தனிக் கொடி, தனி பாஸ்போர்ட்.. ஒப்புக் கொண்டது மத்திய அரசு ? என ஜூன் 30-ம் தேதி 2019-ல் ” ஒன் இந்தியா தமிழ் ” -வில் செய்தி வெளியாகி இருந்தது. அதில்,

நாகாலிம் அல்லது அகன்ற நாகலாந்து கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய நாகலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் பிரிவுடன் மத்திய அரசு 2015-ம் ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் 4 ஆண்டுகளாக இறுதி செய்யப்படாமலேயே இருந்து வந்தது. இதனிடையே, நாகலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிலோ கிலோன்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போழுது, இந்தியா-நாகலாந்து இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. 1. நாகாலாந்துக்கு தனி அரசியல் சாசனம் 2. நாகாலாந்து தனிக்கொடி 3.நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட் 4.ஐநாவில் நிரந்தர பிரதிநிதி 5.கூட்டான வெளியுறவுக் கொள்கை 6.கூட்டான ராணுவ பயிற்சி நடவடிக்கை 7.நாகா ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவது 8.நாகா இன மக்கள் வசிக்கும் பகுதியை நிர்வகிக்கும் அரசு ஆகியவற்றை மத்திய அரசு ஒப்புக் கொண்டு உள்ளது என்றார் என ஒன் இந்தியா தமிழ் மற்றும் செய்தித்தாளில் வெளியாகி இருக்கிறது.

செய்திகளில் வெளியான தகவல் உண்மையான என ஆய்வு செய்த பொழுது, 2019-ல் ஜூன் 25-ம் தேதி இம்பால்டைம்ஸ் எனும் செய்தியில் நாகாலாந்திற்கு தனிக் கொடி மற்றும் பாஸ்போர்ட் வழங்க இந்திய அரசு ஏற்றுக் கொண்டதாக தமிழில் வெளியான செய்தியையே வெளியிட்டு இருந்தனர். இதே தகவல்களே அங்கு வெளியாகும் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பான கூடுதல் தேடுதலில், 2016 ஜனவரி 30-ல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தியில், இந்திய அரசிற்கும் – நாகாலாந்து சோஷிலியலிஸ்ட் கவுன்சில் இடையேயான பேச்சுவார்த்தையின் முடிவில் நாகாலாந்துக்கு தனிக் கொடி கிடைக்க வாய்ப்புள்ளது என்றே குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், தனி பாஸ்போர்ட், அரசியல் சாசனம் மற்றும் நாகா ரூபாய் போன்ற கோரிக்கை ஏற்கப்பட்டது குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

இந்திய யூனியன் அரசிற்கும், நாகாலாந்து சோஷிலியலிஸ்ட் கவுன்சில் இடையேயான அமைதி ஒப்பந்தம் 2015-ல் ஆகஸ்ட் 3-ம் தேதி கையெழுத்தானது. காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக் கொடி இருக்கும் பொழுது நாகாலாந்திற்கும் தனிக் கொடி ஏன் இருக்கக்கூடாது என நாகா ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிக் கொடி வழங்கும் முடிவை மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை.

இறுதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. எனினும், அதில் என்னென்ன நிபந்தனைகள் இடம்பெற்று உள்ளன என தெரியவில்லை. நாகாலாந்திற்கு தனிக் கொடி தவிர்த்து தனி பாஸ்போர்ட், அரசியல் சாசனம், நாகா ரூபாய் ஆகியவற்றிக்கு இந்திய யூனியன் அரசு ஒப்புதல் அளித்து உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. அதைப் பற்றி பல ஆண்டுகளாக வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவிக் கிடந்தன.

அப்படி வதந்திகள் பரவிய தருணத்தில் 2016-ல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சகராக இருந்த கிரண் ரிஜூஜூ பரவி வரும் செய்திகள் தவறானவை என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.


” இந்திய அரசானது தனித்துவமான நாகா வரலாற்றை அங்கீகரிக்கிறது. NSCN-IM இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தனிக்கொடி , பாஸ்போர்ட் வழங்குவதாக வெளியாகும் செய்திகள் உண்மை இல்லை ” என பதிவிட்டு இருந்தார்.

2019-ல் இந்திய அரசு நாகாலாந்திற்கு தனிக்கொடி , தனி பாஸ்போர்ட் வழங்குவதாக எங்கும் அறிவிக்கவில்லை. 2015-ல் இந்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசு மற்றும் நாகாலாந்து சோஷிலியலிஸ்ட் கவுன்சில் இடையே இறுதி ஒப்பந்தம் கையெழுதாவது குறித்து சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தளத்திலும் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

முடிவு :

இந்திய அரசு மற்றும் நாகாலாந்து சோஷிலியலிஸ்ட் கவுன்சில் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது உண்மையே ! ஆனால், நாகாலாந்திற்கு தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் வழங்க இந்திய அரசு ஒப்புதல் அளித்ததாக ஆதாரங்கள் இல்லை. ஒரே நாடு, ஒரே கொள்கை கொண்டு இயங்கும் மத்திய ஆட்சியாளர்கள் ஒரு மாநிலம் தனித்து செல்ல எப்படி அனுமதி அளிப்பார்கள்.

கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் பரவிய செய்தியில் உண்மை இல்லை என நிரூபிக்கப்பட்டு உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader