பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என நாகர்கோவில் கிராம சபையில் தீர்மானம் எனப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் -கிராம மக்கள்; நாகர்கோயிலுள்ள கல்குளம் பகுதிய சேர்ந்த கிராம மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று தேசியக்கொடி மீது சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்துள்ளனர். பாஜக விற்கும் அதன் கூட்டணி கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.
மதிப்பீடு
விளக்கம்
தற்போதைய 17வது மக்களவையின் பதவிக்காலம் வருகின்ற 2024 ஜூன் 16 அன்றோடு முடிவடைய உள்ள நிலையில், 2024 மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பல்வேறு கட்சிகளும் தற்போது தொடங்கியுள்ளதைப் பார்க்க முடிகிறது.
இந்நிலையில், நாகர்கோவிலில் உள்ள கல்குளம் கிராம மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று தேசியக்கொடி மீது சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்துள்ளனர். மேலும், கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
*இப்படி ஒரு முடிவை நாடேய் எடுத்தால் எப்புடி இருக்கும் 🤪* pic.twitter.com/lZwox8XkyI
— சிந்தனை (@mdunis59) August 17, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் தேடியதில், அவர்கள் இந்த நியூஸ் கார்டை வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் அந்த நியூஸ் கார்டில், ‘நாகர்கோயிலுள்ள‘, ‘பகுதிய‘ போன்ற வார்த்தைகள் எழுத்துப்பிழைகளுடன் தவறாக குறிப்பிடப்பட்டு இருப்பதையும் காண முடிந்தது.
இதில் குறிப்பிட்டுள்ள தேதியின் படி, புதியதலைமுறையின் நியூஸ் கார்டு குறித்தும் தேடினோம். சரியாக 16|08|2023 – 01:00 பிற்பகல் மணிக்கு “ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை” என்னும் தலைப்பில் வேறு நியூஸ் கார்டு தான் வெளியிடப்பட்டிருந்தது. பரவி வருவது போன்ற நியூஸ் கார்டு அங்கு இல்லை.
மேலும் அதில் “காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்ததால் நீர் வெளியேற்றமும் அதிகரிப்பு.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் “பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் – கிராம மக்கள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: நீட்-க்கு எதிராக 100% எம்பிபிஎஸ் சீட்களும் தெலங்கானாவிற்கே என சட்டம் இயற்றியதாகப் பரவும் தவறான செய்தி !
இதற்கு முன்பும் ஊடகங்கள் வெளியிட்டதாகக் கூறி பல்வேறு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பபட்டன. அதனையும் ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: அண்ணாமலையின் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
முடிவு:
நம் தேடலில், பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என நாகர்கோவில் கல்குளம் கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியதாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மையானது அல்ல, ஃபோட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.