நாக்பூரில் இருந்து 90 கண்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரயில் காணவில்லை என வெளியான தவறானச் செய்தி !

பரவிய செய்தி

சரக்கு ரயிலை காணோம். நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் 13 நாட்களாக காணவில்லை. பிப்ரவரி 1ம் தேதி நாக்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட PJT1040201 எண் கொண்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பொருட்களை நிரப்பிய கண்டெய்னர்களை கொண்ட ரயிலை காணவில்லை. – தினகரன்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீகாரில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையம் அருகில் சுமார் 2 கிலோமீட்டருக்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. 

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி நாக்பூரிலிருந்து சுமார் 90 கண்டெய்னர்களுடன்  PJT1040201 என்ற சரக்கு ரயில் பலகோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அடுத்த 4, 5 நாட்களில் மும்பை சென்று சேர்ந்திருக்க வேண்டிய அந்த ரயில், 14ம் தேதி வரையில் மும்பை செல்லவில்லை. அந்த ரயில் காணவில்லை என தினமலர், தினகரன், கலைஞர் செய்திகள், ஒன் இந்தியா தமிழ் என பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. 

Archive link 

Archive link 

அச்செய்திகளில், சரக்கு போக்குவரத்து ரயில் பெட்டிகளின் இயக்கத்தை கண்காணிக்கும் FOIS (Freight Operations Information System) அமைப்பினால் ரயிலின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியவில்லை என்றும், ரயிலைக் கண்டுபிடிக்க ரயில்வே அதிகாரிகள் கடுமையாக முயன்று வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Archive link 

இந்த செய்தி உண்மையா என்ற கேள்வியுடன் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி.ஆர்.பி.ராஜா டிவீட் செய்துள்ளார். மேலும், இச்செய்தியை மருத்துவரும் நடிகருமான ஷர்மிளா முதற்கொண்டு பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

https://twitter.com/DrSharmila15/status/1625563723997020160

Archive link

உண்மை என்ன ? 

சரக்கு ரயில் காணவில்லை என்ற செய்தி குறித்து இணையத்தில் தேடிய போது, 2023 பிப்ரவரி 14ம் தேதி ‘The Hitavada’ என்ற இணையதளத்தில் “Rake carrying 90 containers from Nagpur to Mumbai goes ‘missing’” எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அச்செய்தியில் உள்ள தகவல்களையே தமிழ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளதை அறிய முடிகிறது.

Archive link

மேற்கொண்டு தேடியதில், சரக்கு ரயில் காணவில்லை என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என மத்திய ரயில்வே தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதைக் காண முடிந்தது. அப்பதிவில், The Hitavada இணையதளத்தில் வெளியான செய்தியின் ஸ்க்ரீன் ஷார்ட் பதிவிட்டு ‘factually incorrect’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/Central_Railway/status/1625546150051995651

Archive link 

மேலும், இந்த நிகழ்வு குறித்து மத்திய ரயில்வே துறை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுடர என்பவர் Hitavada பத்திரிகையின் ஆசிரியருக்கு அனுப்பிய கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. 

அதில், “மேற்கூறிய நிகழ்வு குறித்து வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. பிப்ரவரி 1ம் தேதி நாக்பூர் மிஹான் ஐசிடியில் இருந்து 90 கண்டெய்னர்களுடன் மும்பைக்குச் சென்ற சரக்கு ரயில் பிப்ரவரி, 5ம் தேதி புசாவலில் உள்ள ஷெகான் நிலையத்தை அடைந்தது. ரயில் காணாமல் போனதாக வெளியான செய்திகள் உண்மை அல்ல. தவறானச் செய்தி அளித்த நிருபர் மீது விசாரணை நடத்தப்படும். 

மேலும், இந்த விளக்கத்தினை உங்களது பத்திரிக்கையில் வெளியிட்டு தங்களது வாசகர்களுக்கு உண்மைத் தன்மையினை தெரிவியுங்கள். ரயில்வே தொடர்பான எந்த ஒரு செய்தி குறித்தும் சரியான தகவலை வாசகர்களுக்கு வழங்க, சம்பந்தப்படா ரயில்வே அதிகாரியிடம் அறிக்கை பெற்ற பின்னர் செய்தியை வெளியிடுங்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே போல், கான்கோர் (CONCOR – Container Corporation of India Ltd) வெளியிட்ட கடிதத்திலும் ரயில் காணவில்லை எனத் தவறானச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், தங்கள் துறை அதிகாரிகள் யாரும் இத்தகைய தகவலை அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளது. 

மத்திய ரயில்வே மற்றும் கான்கோர் அதிகாரிகளின் விளக்கத்திலிருந்து சரக்கு ரயில் காணாமல் போனதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

முடிவு : 

நம் தேடலில், நாக்பூரிலிருந்து மும்பைக்கு 90 கண்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரயில் காணாமல் போனதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என மத்திய ரயில்வே அதிகாரியும், கான்கோர் நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader