This article is from Aug 05, 2019

உபி-யில் ரயிலை மறித்து தொழுகை செய்ததால் நீட் மாணவர்கள் தாமதமா ?

பரவிய செய்தி

உபி-யில் ரயிலை மறித்து தொழுகை ! தாமதமாக சென்ற ரயிலில் பயணித்த மாணவிகள் நீட் எழுத முடியாமல் வீட்டுக்கு திரும்பி வந்த சோகம்.

மதிப்பீடு

விளக்கம்

ரயில்வே ட்ராக்களில் முஸ்லீம்கள் கூட்டமாய் நமாஸ்(தொழுகை) செய்து கொண்டிருக்கும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்துடன், “ரயிலை மறித்து தொழுகை செய்துள்ளனர், இதனால் நீட் தேர்விற்கு சென்ற மாணவிகள் தேர்வை எழுத முடியாமல் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர் ” என்ற தமிழ் வாசகமும் இடம்பெற்று இருக்கிறது.


சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இப்புகைப்படத்தைக் குறித்து தேடுகையில் 2018 மே மாதத்தில் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் வைரலாகியது. தற்பொழுதும், அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. சில பதிவுகளில் எங்கு நடந்தது என்று குறிப்பிடவில்லை, ஓர் பதிவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டு இருந்தனர்.



உண்மை என்ன ?

சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய்ந்த பொழுது, இந்த நிகழ்வு தமிழ்நாட்டிலோ, சமீபத்திய நீட் தேர்வின் பொழுதோ நிகழவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த புகைப்படம் 2017 ஜூன் மாதம் ரம்ஜான் சமயத்தில் புது டெல்லியில் எடுக்கப்பட்டவையாகும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் புகைப்பட பத்திரிகையாளரான அனிந்தய சட்டோபாத்யாய் என்பவர் இப்புகைப்படங்களை எடுத்துள்ளார். 2017 ஜூன் 23-ம் தேதி வெளியான செய்தியில், ” Alvida Namaz (ரம்ஜானின் கடைசி தொழுகை) ” டெல்லி ரயில்வே நிலையத்தில் நடைபெற்றதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தியாக வெளியிட்டு உள்ளனர்.

ரயில்வே நிலைய ட்ராக்களில் தொழுகை செய்வது பிறருக்கு இடையூறாக இருப்பதாக வலதுசாரி பக்கங்கள் தங்களின் தளங்களில் பதிவிட்டு வந்தனர். அப்பகுதியில் முஸ்லீம் மக்கள் தொழுகை செய்வது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் உள்ளது. ரயில்வே ட்ராக் அருகே அமைந்து இருக்கும் பகுதியில் பிரபல மசூதியான Achchan Miya மசூதியில் தொழுகை செய்ய ரயில்வே துறையின் முஸ்லீம் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். பின்னர் அங்குள்ள மக்களுக்கும் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளனர் ஒவ்வொரு வருடமும் அந்த இடத்தில் தொழுகை செய்யும் பொழுது ரயில் ஆனது 15-20 நிமிடங்கள் காத்திருக்கும் என்கிறார் அனிந்தய சட்டோபாத்யாய்.

Achchan Miya மசூதியின் பகுதியில் முஸ்லீம் மக்கள் தொழுகை செய்யும் வீடியோவையும் டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டு இருக்கிறது.

முடிவு :

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் படி, உபி-யில் ரயிலை மறித்து தொழுகை செய்ததால் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகள் பாதிக்கப்பட்டனர் எனக் கூறுவது தவறான தகவல் என நிரூபிக்க முடிந்தது.

ரயில்வே ட்ராக்கில் தொழுகை செய்த பொழுது எடுத்த புகைப்படங்கள் 2017 ஜூனில் டெல்லியில் எடுக்கப்பட்டவை. மேலும், அவை ரம்ஜான் சமயத்தில் எடுக்கப்பட்டவையாகும். இதற்கும் நீட் தேர்விற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மக்கள் தவறான தகவல்களை பகிர வேண்டாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader