சந்திரயான்-3 திட்டத்திற்காகப் பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
சந்திராயன் 3 வெற்றிக்காக நேர்ச்சை. சந்திராயன் 3 வெற்றிக்காக ஃப்ரான்ஸ் பயணம் முழுவதும் பிரதமர் மோடி நேர்ச்சை. உப்பு, வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்குகள் சேர்க்காத உணவுகள் உட்கொண்டு விரதம் இருப்பதாகத் தகவல்
மதிப்பீடு
விளக்கம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி பிரான்சில் இருக்கும் இந்நேரத்தில், ரூ.615 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. மேலும் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
இந்நிலையில் சந்திரயான்-3 வெற்றிக்காக மோடி தனது பிரான்ஸ் பயணம் முழுவதும் விரதம் இருப்பதாகத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில், ‘சந்திராயன் 3 வெற்றிக்காக பிரதமர் மோடி உப்பு, வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்குகள் சேர்க்காத உணவுகள் உட்கொண்டு விரதம் இருப்பதாகத் தகவல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டினை மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரண்டு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
கடைசிவரை அந்த விஞ்ஞானிகளோட திறமை ன்னு சொல்லவே மாட்டானுக போல..
விஞ்ஞானத்தை தோற்கடிக்க முடியாத ஆரிய கூட்டம்..
அதை தன்னுள்ளே சேர்த்து கொள்ள போராடுகிறது…💦💦
கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி டா.ஓடும்🤪🤦🤦 pic.twitter.com/jNq8ZLihuZ— தென்குமரி தென்றல் (@Stalinkumari) July 14, 2023
உண்மை என்ன ?
பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு குறித்து வேறு ஏதேனும் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளதா என இணையத்தில் தேடினோம். அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
பரவக் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டில் ‘13 ஜூலை 2023’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தேதியில் தந்தி டிவி சமூக வலைத்தளங்களில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்படி எந்த நியூஸ் கார்டையும் அவர்கள் பதிவிடவில்லை.
#JUSTIN || பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரான்ஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்கிறார்
பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் 3 நாட்கள் பயணம்#france | #PMModi | #NarendraModi pic.twitter.com/wWOSoqX5EW
— Thanthi TV (@ThanthiTV) July 13, 2023
ஆனால், ‘பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி’ என்ற தலைப்பில் நியூஸ் கார்டினை தந்தி டிவி அத்தேதியில் பதிவிட்டுள்ளது. அதில், ‘பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி. பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் 3 நாட்கள் பயணம். பிரான்ஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்கிறார்’ என்று உள்ளது.
இதில் இருந்து பிரதமர் மோடி சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விரதம் இருக்கிறார் எனப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : எகிப்தில் இஸ்லாமியர்கள் அணியக்கூடிய தொப்பியை பிரதமர் மோடி அணிந்ததாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !
இதற்கு முன்னர் பிரதமர் மோடி குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகள் பற்றிய உண்மைத் தன்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி கேமராவை பார்க்காமல் பாடகி ரிஹானாவைப் பார்ப்பதாகப் பரவும் ஃபோட்டோஷாப் படம் !
முடிவு :
நம் தேடலில், சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற வேண்டுமெனப் பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு உண்மையானது அல்ல. அது போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.