#நாசா_வியந்தது என வைரலாகும் மீனாட்சி அம்மன் கோவில் பதிவு|உண்மை என்ன ?

பரவிய செய்தி
#நாசா-வியந்தது
ஆம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த பொழுது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
மதிப்பீடு
விளக்கம்
சில நாட்களாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்த அற்புதங்களை விஞ்ஞானிகள் கண்டு ஆச்சரியம் அடைந்ததாகக் கூறி #நாசா_வியந்தது என்ற ஹாஷ்டாக்கை வைரலாக்கி வருகின்றனர்.
1984 ஆம் ஆண்டில் மைக்கேல் கெப்ளர் என்ற ஜெர்மனி ஆராய்ச்சியாளர் மீனாட்சி அம்மன் கோவிலை பற்றி ஆராய சதுரவடிவ சாட்டிலைட்டை பயன்படுத்தி அங்குள்ள அற்புதங்களை வெளியிட்டதாக ஓர் நீண்ட பதிவை ஆன்மீகம் சார்ந்த பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.அத்தகைய பதிவை காணாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் அதனை காணலாம்.
முதன் முதலில் இப்பதிவை யார் பதிவிட்டார் என்பதை அறிய முகநூலில் ஆராய்ந்த பொழுது மே 31-ம் தேதி பதிவை பதிவிட்டவரை காண முடிந்தது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கட்டிடக்கலை அமைப்பு சதுர வடிவில் அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது உண்மை. அதனை சுற்றி இருக்கும் வீதிகளும் அவ்வாறே அமைந்து உள்ளன.
பதிவுகளில் கூறியது போன்று மீனாட்சி அம்மன் கோவிலில் ஆராய்ச்சிகள் நிகழ்ந்ததா ? ஜெர்மனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இங்கு ஆராய்ச்சியை மேற்கொண்டாரா என அறிய மேற்கண்ட பதிவில் குறிப்பிட்ட ஜெர்மன் விஞ்ஞானி மைக்கேல் கெப்ளர் பற்றி கூகுளில் தேடுகையில் அப்படியொரு பெயரே காண்பிக்கவில்லை. கெப்ளர் மீனாட்சி அம்மன் கோவில் என்ற தேடலிலும் விவரங்கள் கிடைக்கவில்லை.
இதனை பதிவிட்ட வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவரின் பதிவில் உள்ள கமன்ட்களில் பார்க்கையில், பெரும்பாலான கமன்ட்கள் உண்மை இல்லை, வழக்கமாக கிண்டலுக்கு எழுதுவது போன்று எழுதி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். இதனைப் பதிவிட்ட வெங்கடேஷ் ஆறுமுகம் நகைச்சுவை நடிகர் ஆவார்.
முகநூலில் Sarcasm எனும் நகைச்சுவை, கேலி, கிண்டல் பதிவுகளையும் பதிவிடுவது வழக்கம். கற்பனையுடன் நையாண்டித்தனமான கதையை எழுதி பதிவிடுகின்றனர். அதனை உண்மை என நினைத்து சிலர் பகிர்ந்து விடுகின்றனர். அவ்வாறான பதிவுகள் வைரல் ஆகவும் செய்கிறது. உதாரணமாக, கனடா பிரதமர் குறித்து பகிரும் பதிவுகள்.
மீனாட்சி அம்மன் கோவில் குறித்து #நாசா_வியந்தது எனும் பதிவுகள் முழுவதும் நையாண்டித்தனமான பதிவே. உண்மையாக நிகழ்ந்தவை அல்ல. அதில், கூறும் கதைக்கு ஆதாரங்கள் எங்குமில்லை. முடிந்தவரை இவ்வாறான பதிவுகளை பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.