This article is from May 06, 2022

நாசா நிலவில் மோனாலிசா ஏலியனை கண்டுபிடித்ததாக ஆர்.ஜே ஷா வெளியிட்ட வீடியோ.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

நாசா 50 வருடமாக மறைத்த மர்மம் உடைந்தது. முதல் ஏலியன் மோனாலிசா, வெளிவந்த உண்மை.

Youtube link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நிலவிற்கு மனிதர்களை அனுப்பி மேற்கொண்ட ஆய்வு செய்த போது பெண் வடிவில் மோனாலிசா எனும் ஏலியனை கண்டுபிடித்ததாகவும், அதை 50 ஆண்டுகளுக்கு மேலாக மறைத்து வருவதாகவும் என ஷாபூத்ரி யூடியூப் சேனலில் ஆர்ஜே ஷா  என்பவர் பேசிய வீடியோ 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையைப் பெற்று வருகிறது.

மேற்காணும் வீடியோவில், ” 1969-ல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிற்கு சென்ற போது, நிலவிற்கு நாம் வந்தது போல், நாம் வந்த பகுதிக்கு எதிர் பகுதியில் ஒரு விண்தட்டு வந்துருக்கு, அவர்கள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார் என பேசிய ஆடியோவை ஹக்கர்ஸ் வெளியிட்டு இருக்கிறார்கள். இதை அவரும் தன்னுடைய டைரியில் எழுதி இருக்கிறார். ஆனால், அதை நாசா மறைத்து உள்ளது.

1972-க்கு பிறகு நிலவிற்கு எந்த மிஷனையும் அனுப்பவில்லை எனக் கூறினார்கள். ஆனால், அப்பல்லோ 18, 19, 20 அனுப்பப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, அப்பல்லோ 20 அனுப்பிய போது நிலவில் மோனாலிசா எனும் பெண் ஏலியன் உடல் கிடைத்துள்ளது. இந்த ஃபோட்டோ, வீடியோக்களை வெளியிட்டவரே நேரடியாக பேட்டி அளிக்கிறார். அவர் தான் அப்பல்லோ 20 விண்கலத்தில் பயணம் செய்த விண்வெளி வீரர் வில்லியம் ரூத்லேட்ஜ் ” எனத் தொடர்ச்சியாக பேசி இருக்கிறார்.

உண்மை என்ன ?  

1969-ம் ஆண்டு அப்பல்லோ 11 மூலம் மனிதர்களை நிலவில் அனுப்பி பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிக் கொண்டு வரும் இலக்கை அமெரிக்க அரசாங்கம் நிறைவேற்றிய பிறகும் 1972 வரை தொடர் பயணங்களை மேற்கொண்டது. அதில், அப்பல்லோ 17 என்பதே நிலவிற்கு இறுதியாக சென்று திரும்பும் பயணமாக இருந்தது.

எனினும், நிலவிற்கு செல்ல நாசா அப்பல்லோ 18, 19, 20 என மூன்று பயணங்களை நாசா திட்டமிட்டு பட்ஜெட் காரணமாக திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக நாசாவின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

1969-ல் நிலவில் தரையிறங்கிய அப்பல்லோ 11 பயணத்தின் போது விண்வெளி வீரர்களுக்கும், பணிகளை மேற்கொள்ளும் பிற குழுக்களும் இடையேயான நூற்றுக்கணக்கான ஆடியோ உரையாடல்களை பதிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட, 19,000 மணி நேர முழுமையான உரையாடலை ஆடியோவாக நாசா இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது.

வீடியோவில் குறிப்பிட்டது போல், அப்பல்லோ 11 விண்கல பயணத்தின் போது நீல் ஆம்ஸ்ட்ராங் ஏலியன், வேறு வின் தட்டை பார்த்தது பற்றி கூறியதாக எந்த வீடியோ காட்சியோ, ஆடியோ பதிவோ பற்றி நாசா மட்டுமின்றி சர்வதேச விண்வெளி ஆராய்சியாளர்கள், செய்திகள் என யாரும் வெளியிடவில்லை.

மேலும் படிக்க : நிலவில் கால் பதித்த ஃபஸ் அல்ட்ரின் ஏலியனைக் கண்டதாக கூறினாரா ?

நீல் ஆம்ஸ்ட்ராங் போல் சில ஆண்டுகளுக்கு முன்பாக கூட, அப்பல்லோ 11 விண்கலத்தில் பயணித்த ஃபஸ் அல்டர் என்ற விண்வெளி வீரர், நிலவில் ஏலியன் இருப்பதை பார்த்ததாகவும், அது உண்மை கண்டறிதல் சோதனையில் நிரூபிக்கப்பட்டதாகவும் வதந்திகள் பரவியது. இப்படி பரவிய தகவலை ஃபஸ் அல்டர் மறுத்து இருந்தார் என நாம் கட்டுரையே வெளியிட்டு இருந்தோம்.

வில்லியன் ரூத்லேட்ஜ் & மோனாலிசா ஏலியன் : 

முன்னாள் விண்வெளி வீரர் எனத் தன்னைக் கூறிக் கொண்ட வில்லியன் ரூத்லேட்ஜ் என்பவர் 1976-லிருந்து அப்பல்லோ 20 பயணத்தின் போது எடுக்கப்பட்டதாக பல வீடியோக்களை Retiredafb எனும் பெயரில் 2007-ல் பதிவிட்டு இருக்கிறார். எனினும், அவை நீக்கப்பட்டு இருக்கிறது. அவற்றில், நிலவில் உயரமான கட்டிடங்கள் இருப்பது போன்றும், மோனாலிசா எனும் ஏலியன், நிலவில் அப்பல்லோ 20 தரையிறங்கும் வீடியோக்கள் என அவரது பெயரில் பல்வேறு வீடியோக்களை பலரும் பகிர்ந்து இருக்கிறார்கள்.

இந்த வில்லியன் ரூத்லேட்ஜ் பேட்டியை எந்த ஊடகங்களும் நேரடியாக வெளியிடவில்லை. ஏன், வில்லியன் ரூத்லேட்ஜ் பற்றி பரப்பும் பதிவுகளில் கூட அவரின் புகைப்படம் ஏதும் இடம்பெற்றவிலை. வில்லியன் ரூத்லேட்ஜ் பேட்டியை இணையதளத்தில் வெளியிட்ட Scantamburlo என்பவரும் அவரை சந்தித்தது இல்லை, யாஹூ மெசெஞ்சர் மூலமே பேசி இருக்கிறார்.

வில்லியன் ரூத்லேட்ஜ் குறித்து தேடிய போது, தியரி ஸ்பெத் என்பவர் வில்லியன் ரூத்லேட்ஜ் அப்பல்லோ 19, 20 மற்றும் 21 பயணம் பற்றிய அறிவியல் புனைவு நாவலை வெளியிட்டு இருக்கிறார் என்பதை காண முடிந்தது.

ஏலியன் மோனாலிசா, அப்பல்லோ 20, வில்லியன் ரூத்லேட்ஜை உருவாக்கிய தியரி ஸ்பெத் உடனான முதல் நேர்காணல் ” என்ற தலைப்பில் இந்த தியரி ஸ்பெத் என்பவர் அளித்த பேட்டியை வெளியிட்டு இருந்தனர்.

அவருடைய பேட்டியில், 2007-ல் முதன் முதலில் Retiredafb எனும் பெயரில் வீடியோக்களை வெளியிட்டது, வில்லியன் ரூத்லேட்ஜ், மோனாலிசா ஏலியன் குறித்து பேசப்பட்டு உள்ளது. இந்த பேட்டியில் அந்த மோனாலிசா ஏலியனின் மாஸ்க்கை அவர் காண்பிப்பதை பார்க்கலாம். ஆக, நிலவில் ஏலியன் உள்ளிட்ட வீடியோக்கள் மற்றும் கதைகள் அனைத்தும் இவரால் உருவாக்கபட்டது என தெளிவாகிறது.

முடிவு : 

நம் தேடலில், 1969-ல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிற்கு சென்ற போது அங்கு ஏலியனை கண்டதாகவும், அப்பல்லோ 20 விண்கலம் மூலம் நாசா ரகசியமாக மேற்கொண்ட பயணத்தில் மோனாலிசா எனும் ஏலியனை கண்டுபிடித்ததை 50 ஆண்டுகளாக மறைத்து வருவதாகவும் பேசிய வீடியோ தகவல் தவறானது, அது வதந்தியே என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader