உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு செய்த பாலாபிஷேகம் நீல நிறமாக மாறியதாகப் பரவும் வதந்தி!

பரவிய செய்தி

உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு பாலாபிஷேகம், பாலின் நிறம் என்னமாய் மரகதத்தின் கதிர்வீச்சால் நிறம்மாறி ஒளிர்கிறது. இதை பார்த்தவர்களின் மனதிலும் இதே அதிர்வலைகள் தோன்றி வாழ்வை மேன்மையாக்கும். இதனை அதிகம் பகிரவும். சிவாயநம.

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

மிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ளது பிரசிபெற்ற திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி சிவன் கோயில். நடராஜர் திருத்தலங்களில் சிதம்பரத்துக்கு அடுத்து முக்கியமான தலங்களில் ஒன்றாக இக்கோவில் உள்ளது. மேலும் இக்கோவிலின் ஐந்தரை அடி உயர நடராசர் சிலையானது மரகதத் திருமேனியைக் கொண்டது.

இங்கு நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் திருவாதிரை நாளன்று சந்தனக்காப்பு கலைந்து வெறும் திருமேனியோடும் காட்சியளிக்கிறார். மேலும் இவ்வாண்டுக்கான திருவாதிரை திருவிழா 2023 ஜனவரி 5 அன்று இக்கோவிலில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

இவ்வாறு மரகத நடராஜருக்கு சந்தன அலங்காரம் கலைக்கப்பட்டு பாலாபிஷேகம் செய்த போது மரகதத்தின் கதிர்வீச்சால் பால் நீல நிறமாக மாறி ஒளிர்வதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகிறது. 

Twitter Link | Archive Link

Archive link

உண்மை என்ன?

உத்திரகோசமங்கை கோவிலில் மரகத நடராஜருக்கு செய்த அபிஷேகங்களின் முழு வீடியோவை QMAX TV 4k தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தொடர் நேரலையாக 2023 ஜனவரி 5 அன்று வெளியிட்டுள்ளது.

இவ்வீடியோவில் மரகத நடராஜருக்கு சந்தன அலங்காரம் கலைக்கப்பட்டு ஒவ்வொரு அபிஷேகமாக வரிசையாகச் செய்யப்படுகிறது. சரியாக 05:45 மணி நேரத்தில் தயிர் அபிஷேகமும், 05:57 மணி நேரத்தில் பாலாபிஷேகமும் செய்யப்படுகிறது. அப்போது பாலின் நிறம் மாறாததை நேரலை வீடியோவின் மூலம் அறிய முடிகிறது. 

இதேபோன்று 2021 டிசம்பர் 20 அன்று News7TamilBakthi தன்னுடைய யூடியூப் பக்கத்தில் மரகத நடராஜரின் அபிஷேக வீடியோவை நேரலையாக வெளியிட்டுள்ளது. இதையும் ஆய்வு செய்து பார்த்ததில், பாலின் நிறம் நீலநிறமாக மாறாததை உறுதி செய்ய முடிகிறது.

மேலும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் வீடியோவில், ஸ்க்ரீனுக்கு வெளியே ஆங்காங்கே மனிதர்கள் எழுந்து நடப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் இது நேரலை வீடியோ இல்லை என்பதையும், இந்த வீடியோவானது Digital Intermediate (DI) தொழில்நுட்பத்தின் மூலம் color correction செய்து எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதையும் கீழே உள்ள படத்தின் மூலம் அறிய முடிகிறது.

மேலும் படிக்க : அருப்புக்கோட்டை கோவிலில் முருகன் சிலை கண் திறந்ததா ?

மேலும் படிக்க :  ஜெர்மனியில் கிடைத்தது 40,000 ஆண்டுகள் பழமையான நரசிம்மர் சிலையா ?

இதற்கு முன்பாக, கோவிலில் முருகன் சிலை கண் திறந்ததாகவும், தண்ணீரில் விஷ்ணு சிலை மிதப்பதாகவும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக கிடைத்த சாமி சிலைகள் என பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு இருக்கின்றன. அதுகுறித்தும், நாம் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : 1300 ஆண்டுகளாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலையா ?| உண்மை என்ன ?

முடிவு: 

நம் தேடலில், உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு செய்த பாலாபிஷேகத்தில் நீலநிறமாக மாறிய பால் எனப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது. உண்மையான நேரலை வீடியோவில் பால் நிறம் மாறவில்லை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni is working as a Sub-Editor in You Turn. She completed her Masters in History from Madras university. She holds her Bachelor’s degree in Engineering and holds a Bachelor’s degree in Tamil Literature. She is the former employee of IT Company. She currently finds the fake news in social media in order to verify the factual accuracy.
Back to top button