தேசிய விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைப்பட கலைஞர்கள்.

பரவிய செய்தி
டெல்லியில் நடைபெற்ற திரைப்பட கலைஞர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழாவை புறக்கணித்த 60-க்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள். தேசிய விருதை புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய திரைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு அவர்களின் படைப்பாற்றல், திறமையைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இவ்விழாவில் விருதுகளை குடியரசுத்தலைவர் தன் கரங்களால் கலைஞர்களுக்கு வழங்கி வருவது மரபு.
மே 3, 2018-ல் டெல்லியில் 65-வது தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் பெரும் எதிர்பார்ப்பை அளிக்கும் தேசிய விருது வழங்கும் விழா இந்த ஆண்டு சர்ச்சையில் முடிந்துள்ளது. இந்த விழாவில் 11 பேருக்கு மட்டும் குடியரசுத்தலைவர் விருதுகளை வழங்கியுள்ளார். மீதமுள்ள கலைஞர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை ஸ்மிருதி இராணி மற்றும் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராதோர் வழங்குவர் என்று அறிவிக்கப்பட்டது. சிறந்த கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்குவதற்கு பதிலாக அமைச்சர் ஸ்மிருதி இராணி வழங்கியதை கலைஞர்கள் ஏற்க மறுத்து புறக்கணித்தனர்.
சுமார் 60-க்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் தேசிய விருதுகளை பெறாமல் விழாவை பங்கேற்க விருப்பமில்லை என கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டு வெளியிட்டனர். தேசிய விருது தங்களுக்கு அளிக்கப்படும் கௌரவம் என்றும், அதை குடியரசுத்தலைவர் வழங்குவதே மரபு என விழாவில் பங்கேற்காத கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், விழாவில் பங்கேற்காத 60-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் இருக்கையில் இருந்த பெயர் பலகை உடனடியாக அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விருது வழங்கும் விழா இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்றன. மாலை 4 மணிக்கு நடைபெற்ற முதல் பகுதியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராதோர் விருதுகளை வழங்குவர். இரண்டாம் பகுதியான 5.30 மணிக்கு குடியரசுத்தலைவர் விருதுகளை வழங்குவார் என press information bureau-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் பங்கேற்கும் அனைத்து விருது வழங்கும் விழா மற்றும் பட்டமளிப்பு விழாக்களில் அதிகபட்சம் 1 மணி நேரம் மட்டுமே பங்கேற்பார். இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்துக்கு பல வாரங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாக குடியரசுத்தலைவரின் செய்தி பிரிவு செயலாளர் அசோக் மாலிக் தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், ” தாதா சாகிப் பால்கே விருது- வினோத் கண்ணா, மாம் திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது, சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான்( காற்று வெளியிடை&மாம்) ஆகிய 11 பேருக்கு விருதுகளை வழங்கியுள்ளார்” . இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் விழாவில் பங்குபெற்று விருதினை பெற்றுக்கொண்டார்.
கடைசி நேரத்தில் 11 பேருக்கு மட்டுமே தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்க இருப்பதாக கூறியது திரைப்படக் கலைஞர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. விருதை ஏற்க மனம் இன்றி விழாவில் பங்கேற்காமல் வெளியேறிய கலைஞர்கள் குடியரசுத்தலைவர் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டவர்களின் கையெழுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சிறந்த தமிழ் மொழி திரைப்படமான டூலெட் திரைப்பட இயக்குனர் செழியன் விழாவை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.
சர்ச்சைக் குறித்து பேசிய ராஷ்ட்ரபதி பவன் செய்தி தொடர்பாளர், “ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பாகவே, குடியரசுத்தலைவர் குறிப்பட்ட நேரம் மட்டுமே கலந்து கொண்டு விருதுகளை வழங்குவார் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கு சேர்ந்து குரூப் போட்டோ எடுத்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வருடமும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சரின் முன்னிலையில் குடியரசுத்தலைவர் விருது வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்”.
திரைப்பட கலைஞர்களுக்கு உயரிய விருதான தேசிய விருது விழாவில் குடியரசுத்தலைவர் அடையாளமாக கலந்து கொண்டது விருது பெறும் கலைஞர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.