இந்தியாவிற்கு தேசிய மொழி இருந்தால் தமிழாக தான் இருக்க வேண்டும் என ஆர்.டி.ஐ தகவல் அளிக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அலுவல் மொழிகள் துறை பதில். இந்தியாவுக்கு என்று தேசிய மொழி எதுவும் கிடையாது. அப்படி ஒரு மொழி இருந்தால் அது உலகின் பழமையான மொழி தமிழாக தான் இருக்க வேண்டும் – மத்திய அலுவல் மொழிகள் துறை பதில்
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் தேசிய மொழி எது என்கிற விவாதங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எழுவதுண்டு. தற்போதுவரை இந்தியாவிற்கு தேசிய மொழி என ஒரு குறிப்பிட்ட மொழி இல்லை என்பதே உண்மை.
சமீபத்தில், இந்தியாவின் தேசிய மொழி எதுவென்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அலுவல் மொழிகள் துறை பதில் செய்திகளில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அதேநேரத்தில், அப்படி ஒரு மொழி இருந்தால் அது உலகின் பழமையான மொழி தமிழாக தான் இருக்க வேண்டும் என அலுவல் மொழிகள் துறை பதில் அளித்ததாக செய்தியின் நியூஸ் கார்டு வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஜூலை 15-ம் தேதி நியூஸ் 7 தமிழ் செய்தி சேனல் ” இந்தியாவுக்கு தேசிய மொழி எதுவும் கிடையாது”- மத்திய அலுவல் மொழிகள் துறை ” என செய்தி வெளியிட்டு இருந்தது.
#JUSTIN | “இந்தியாவுக்கு தேசிய மொழி எதுவும் கிடையாது”- மத்திய அலுவல் மொழிகள் துறை.https://t.co/WciCN2AH8n | #India | #Postal | #OfficialLanguage | #UnionGovt pic.twitter.com/12K0yzgC2T
— News7 Tamil (@news7tamil) July 15, 2021
ஆனால், இந்தியாவுக்கு என்று தேசிய மொழி எதுவும் கிடையாது. அப்படி ஒரு மொழி இருந்தால் அது உலகின் பழமையான மொழி தமிழாக தான் இருக்க வேண்டும் எனும் தகவல் உடன் வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு புதிய தலைமுறை செய்தியின் வடிவத்தில் இருக்கிறது.
புதியதலைமுறை செய்தியின் முகநூல் பக்கத்தில் இப்படியொரு நியூஸ் கார்டு இடம்பெறவில்லை. மேலும், வைரல் நியூஸ் கார்டில் புதிய தலைமுறையின் பெயர் மறைக்கப்பட்டு இருக்கிறது, லோகோ இடம்பெறவில்லை.
இதுகுறித்து, புதிய தலைமுறையின் இணையதள பிரிவை தொடர்பு கொண்டு பேசிய போது, ” இது போலி செய்தி, நாங்கள் வெளியிடவில்லை ” என பதில் அளித்து இருந்தனர்.
ஆர்.டி.ஐ :
” தென்காசி மாவட்டதைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் யானைகள் மீது ரயில்கள் மோதல் தொடர்பாக ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளித்து இருந்தனர். மேலும் சிலரது கேள்விகளுக்கு இதே முறையில் பதில் அனுப்பப்பட்டது. இந்நிலையில், சமூக ஆர்வலர் பாண்டியராஜா இந்திய மொழிகள் சம்பந்தமாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.
உள்துறை அமைச்சகம் இக்கேள்விகளை ஒன்றிய அலுவல் மொழிகள் துறைக்கு அனுப்பி இருந்தது. அந்த துறையினர் தந்த பதிலில், ” இந்தியாவிற்கு என தேசிய மொழி எதுவும் கிடையாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால் எந்த மொழியில் பதில் அளிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக ஒன்றிய அலுவல் மொழிகள் துறை சார்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தகவல் தரும் அதிகாரி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதில் அளித்தால் அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது. அலுவல்மொழி விதிகள் 1976 தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கலைஞர் செய்தியில் ஜூலை 17-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், இந்தியாவுக்கு என்று தேசிய மொழி எதுவும் கிடையாது என்று மட்டுமே இந்திய அலுவல் மொழிகள் துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவிற்கு தேசிய மொழி என இருந்தால் அது உலகின் பழமையான மொழி தமிழாக தான் இருக்க வேண்டும் ஆர்.டி.ஐ தகவலில் கூறப்படவில்லை.
மேலும், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட போலியான நியூஸ் கார்டு என அறிய முடிகிறது.