வாஜ்பாய் கடற்படை கொடியில் நீக்கிய செயின்ட் ஜார்ஜ் சிலுவை மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதா ?

பரவிய செய்தி

அடல்ஜி நமது கடற்படையின் கொடியை மாற்றிய பிறகும் காங்கிரஸ் சிலுவையை மீண்டும் கொடியில் கொண்டு வந்தது.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

செப்டம்பர் 2-ம் தேதி கேரளாவின் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிய கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்பணித்ததோடு, இந்தியக் கடற்படைக்கான புதிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இதையடுத்து, இந்திய கடற்படையின் பழைய கொடியில் இருந்த சிவப்பு நிற செயின்ட் ஜார்ஜ் சிலுவையை நீக்கி கடந்த கால காலனித்துவத்தை அகற்றியதாக கூறப்பட்டது. அதேநேரத்தில், கடந்த காலங்களில் இந்திய கடற்படையின் கொடியின் வடிவங்கள் பகிரத் தொடங்கின.

1950 முதல் 2001 வரை இந்தியக் கடற்படையின் வெள்ளை நிற கொடியில் சிவப்பு நிற செயின்ட் ஜார்ஜ் சிலுவையும், அதற்கு மேலே இந்தியக் கொடியும் இருந்து வந்தது. ஆனால், அதை வாஜ்பாய் அவர்கள் 2001ல் மாற்றினார். ஆனால், 2004ல் காங்கிரஸ் அரசு மீண்டும் செயின்ட் ஜார்ஜ் சிலுவை கொடியில் கொண்டு வந்தது என இப்படம் சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.

Twitter link 

facebook link 

உண்மை என்ன ?  

” ஜனவரி 26 , 195௦ முதல் 2001 வரை, செயின்ட் ஜார்ஜ் சிலுவையைக் கொண்டிருந்த பிரிட்டிஷ் கடற்படை கொடியின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பில் இந்திய மூவர்ணக் கொடியுடன் பயன்படுத்தப்பட்டு வந்தது. 2001ம் ஆண்டு அடல் பீகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, சிவப்பு நிற செயின்ட் ஜார்ஜ் சிலுவை நீக்கப்பட்டு வெள்ளை கொடியில் தேசியக் கொடி மற்றும்  இந்தியக் கடற்படை சின்னம் மாற்றப்பட்டது.

ஆனால், 2004ல் கடற்படை தலைமையகத்தின் பரிந்துரையின் பேரில், கொடியில் இருந்த நீல நிற சின்னம் வானம் மற்றும் கடலுடன் எளிதில் ஒன்றிணைத்ததால், அந்த கொடியை பிரித்தறிய முடியவில்லை என கூறி மீண்டும் சிவப்பு நிற செயின்ட் ஜார்ஜ் கொண்டு வரப்பட்டது ” என இந்தியா டுடே உள்ளிட்ட செய்திகள் பலவற்றில் இந்திய கடற்படை கொடியின் மாற்றம் குறித்து வெளியிட்டு இருக்கின்றனர்.

ஆனால், செய்திகளில் 2004ல் கடற்படை கொடியில் மீண்டும் சிவப்பு நிற சிலுவையை கொண்டு வந்தது காங்கிரஸ் அரசா எனக் குறிப்பிடவில்லை. மேலும், எந்த மாதத்தில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது என்றும் குறிப்பிடவில்லை. அந்த ஆண்டில் தான் காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆகையால், காங்கிரஸ் ஆட்சியில் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் சிலுவை கடற்படை கொடியில் மீண்டும் கொண்டு வந்ததாக பாஜகவினர் பரப்பி வருகிறார்கள்.

ஆனால், 2004ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி rediff இணையதளம் ” Indian Navy to change its ensign” எனும் தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில், ” ஏப்ரல் 25ம் தேதி முதல் இந்திய கடற்படை கொடியில் மீண்டும் சிலுவை கொண்டு வருவதாக ” வெளியாகி இருக்கிறது.

2004 ஏப்ரல் 18-24ம் தேதி இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் வெளியான அரசாணையில் புதிய கொடி அதிகாரப்பூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளதில், ” வெள்ளை கொடியின் மையத்தில் கிடைமட்டமாக சிவப்பு பட்டைக் கோடு மற்றும் செங்குத்தாக சிவப்பு பட்டைக் கோடும் வெட்டும் இடத்தில் தங்க நிறத்தில் இந்திய சின்னம் (தர்ம சக்கரம்) மற்றும் அதற்கு மேல் இந்திய தேசியக் கொடி இடம்பெறும் ” எனக் கூறப்பட்டு உள்ளது.

2004 ஏப்ரல் 20 முதல் மே 1௦ம் தேதி வரையில் இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற்றது. மே 13ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு காங்கிரஸ் தலைமையிலான கூட்டனி அரசின் பிரதமராக மன்மோகன் சிங் மே 22ம் தேதி பதவியேற்றுக் கொன்றார்.

2004ல் வாஜ்பாய் அரசில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது கடற்படையின் பரிந்துரையின்படியே கொடியில் சிவப்பு நிறக் கோடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

2014 ஆகஸ்ட் மாதம், இந்தியக் கடற்படை கொடியில் உள்ள அசோக சின்னத்திற்கு கீழே ” சத்யமேவ் ஜெயதே ” என தேவநாகிரி எழுத்துருவில் வாசகம் இணைக்கப்பட்டு மற்றொரு மாற்றம் கொண்டு வரப்பட்டது.

முடிவு :

நம் தேடலில், 2004ல் வாஜ்பாய் ஆட்சியில் இந்தியக் கடற்படை கொடியில் இருந்து நீக்கப்பட்ட சிவப்பு நிற செயின்ட் ஜார்ஜ் சிலுவை கோடுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் கொண்டு வந்ததாக பாஜகவினர் பரப்பு தகவல் வதந்தியே.

2004 இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக பாஜக ஆட்சியிலேயே கடற்படையின் பரிந்துரையின்படி கொடியில் மீண்டும் சிவப்பு நிறக் கோடுகள் கொண்டு வரப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader