நீட் தேர்வில் பின்தங்கிய தமிழகம்.!

பரவிய செய்தி
2018 ஆம் ஆண்டின் மருத்துவப் படிப்பிற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் முதல் 50 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே இடம் பிடித்துள்ளார். தேர்ச்சி சதவீதத்தில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய அளவில் மருத்துவப் படிப்பிற்கான இடங்களை நிரப்ப தேசிய தகுதி நுழைவுத் தேர்வு 2018 மே 6-ல் நடைபெற்றன, இந்திய அளவில் மொத்தம் 13 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எதிர் கொண்டனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 1, 14,602 மாணவர்களும், அதில் தமிழில் 24,720 மாணவர்களும் நீட் தேர்வை எழுதினர்.
2018 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகியுள்ளது. இந்திய அளவில் 7,14,562 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 53.85 ஆக உள்ளது. இதில், தமிழகத்தில் நீட் தேர்வு எழுத பதிவு செய்த 1,20,000 மாணவர்களில் 45, 336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழில் நீட் தேர்வை எழுதிய 24,720 மாணவர்களில் 1.86 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர். நீட் தேர்வில் முதல் 50 இடங்களில் தமிழக மாணவி கீர்த்தனா 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் கீர்த்தனா 676 எடுத்துள்ளார். முதல் 50 இடங்களில் இடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்தவர் இவர் ஒருவர் மட்டுமே.
2018 நீட் தேர்வில் பீகார் மாநிலத்தின் கல்பனா குமரி என்ற மாணவி 691 மதிப்பெண் எடுத்து முதலிடமும், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ரோகன் புரோகித் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஹிமான்ஷு ஷர்மா 690 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளர்கள்.
இந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் நாகலாந்து மாநிலம் மட்டுமே மிகக் குறைந்த தேர்ச்சி சதவீதத்தை பெற்றுள்ளது. 29.3சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதத்தில் ராஜஸ்தான் மாநிலம் 74 % பெற்று முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையும் நீட் தேர்வின் தேர்ச்சி மிகவும் பின்தங்கியுள்ளது. தமிழகத்தில் 39.55 % மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியாகி உள்ளார்கள். மகாராஷ்டிரா மாநிலமும் இதே தேர்ச்சி சதவீதத்தில் உள்ளது.
இரண்டு வருடங்களாக நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வரும் தமிழகத்திற்கு இந்த வருட முடிவுகள் பின்னடைவே. தமிழக மாணவர்கள் 3,500 பேர் நீட் தேர்வை எழுத கேரளாவிற்கு சென்றனர். மேலும், பல மாணவர்களுக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.
” தமிழகத்தில் உள்ள 45 மருத்துவக் கல்லுரிகளில் 5,660 இடங்கள் உள்ளன. சென்ற ஆண்டு 2017-ல் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 83,859 பேரில் 32,570 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது” .
இந்த ஆண்டு பல்வேறு நீட் பயிற்சி மையங்களில் தமிழக மாணவர்கள் பயின்றும் தேர்ச்சி சதவீதம் குறைவாகவே உள்ளது. ஆக, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களே நீட் தேர்வை எதிர்க் கொள்வது கடினமாக உள்ளதால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படுகிறது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.