நீட் தேர்வைத் தடை செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கி.வீரமணி கூறியதாக பரவும் பொய் !

பரவிய செய்தி
தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை. நீட் தடை செய்யவில்லை என்றால் அனிதா போன்று தற்கொலை செய்யவும் நான் தயார் என் உயிர் போனால் தான் நீட் தடை என்றால் அதற்க்கும் தயார் – மாவீரன் வீரமணி
மதிப்பீடு
விளக்கம்
நீட் தேர்வு தடை குறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசுகையில், நீட் தேர்வினை தடை செய்யவில்லை என்றால் அனிதா போன்று தானும் தற்கொலை செய்து கொள்ளத் தயார் என்றும், தூக்கு மேடை தனக்குப் பஞ்சு மெத்தை என்றும் பேசியதாக நியூஸ் கார்டு ஒன்று வலதுசாரிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய நியூஸ் கார்டில் மேல் பக்கம் இடது ஓரத்தில் ‘i NEWS’ என்றுள்ளது. அப்பெயரைக் கொண்டு தேடியதில் அவர்களது பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களைக் காண முடிந்தது. அப்பக்கங்கள் முழுவதும் தெலுங்கு செய்திகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மேலும், யூடியூபிலும் தெலுங்கு செய்தி சேனல் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் தமிழில் எந்த செய்தியையும் வெளியிடுவதில்லை.
அதே போல் ‘www.allennews.com’ என்று அந்த கார்டில் உள்ளதை கொண்டு தேடியதில், அப்பெயரில் எந்த இணையதளமும் இல்லை என்பதை அறிய முடிந்தது. மேலும் அதில் ‘20-aug-2023’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தேதியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நீட் தேர்வு தடை குறித்து பரவக் கூடிய நியூஸ் கார்டில் உள்ளது போல ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என இணையத்தில் தேடினோம். அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
மேலும் பரவக் கூடிய கார்டில் உள்ள படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில், அது 2022, ஏப்ரல் மாதம் 18ம் தேதி ‘நியூஸ் 18’ தளத்தில் வெளியான ஒரு செய்தியில் அப்புகைப்படம் இருப்பதைக் காண முடிந்தது. அச்செய்தியில் கோவை சுந்தராபுரம் பகுதியில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு பிரச்சார பெரும் பயண விளக்கக் கூட்டம் நடைபெற்றது என்றுள்ளது.
இது குறித்து திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியதில், அப்படி எந்த கருத்தையும் ஆசிரியர் (கி.வீரமணி) தெரிவிக்கவில்லை. அது போலியானது எனக் கூறினார். இவற்றில் இருந்து பரவக் கூடிய நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் படிக்க : சூரியகிரகணத்தின் போது உணவு உண்ட கர்ப்பிணி பெண் இறந்ததாக வதந்தி !
இதற்கு முன்னதாக திராவிடர் கழகம் குறித்தும், பெரியார் குறித்தும் பரப்பப்பட்ட போலி செய்திகள் பற்றிய உண்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : தமிழ், தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் எனப் பெரியார் பேசினாரா ?
முடிவு :
நம் தேடலில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நீட் ரத்து செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அவர் அப்படி எந்த கருத்தையும் கூறவில்லை.