This article is from May 30, 2018

தமிழகத்தில் புதிய நீட் மையங்கள் இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு.

பரவிய செய்தி

நீட் தேர்விற்கு தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தான் தேர்வு எழுத வேண்டும். புதிதாக தேர்வு மையங்கள் ஏற்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6-ம் தேதி நாடு முழுவதும் உள்ள நீட் தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. இதில், தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு கேரளாவில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக மாணவர்களுக்கு உள்ளூர் தேர்வு மையங்களை ஒதுக்காமல் பல மாணவர்களுக்கு மட்டும் வெளி மாநிலத்தில் தேர்வு எழுத ஒதுக்கியுள்ளது சி.பி.எஸ்.இ.

வெளி மாநிலங்களுக்கு சென்று தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ வெளி மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ-க்கு ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது“.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக மாணவர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. இதை செயல்படுத்த கால அவகாசம் இருந்தபோதிலும், அதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் இருந்துள்ளது நீட் தேர்வை நடத்தும் நிர்வாகம். உத்தரவை நிறைவேற்றுவதற்கு பதிலாக கடைசி நேரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது சி.பி.எஸ்.இ.

மே 3-ம் தேதியன்று சி.பி.எஸ்.இ தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழக மாணவர்களுக்கு எதிராக அமைந்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், “ வெளி மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு செல்ல தமிழக மாணவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டில் இருந்து மாணவர்களுக்கு சிரமம் ஏதுமின்றி தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது”.

தடை உத்தரவை பெறுவதற்காக சி.பி.எஸ்.இ உச்ச நீதிமன்றத்தில் கூறிய காரணங்கள் ஏதும் ஏற்புடையதாக இல்லை. தமிழகத்தில் புதிய தேர்வு மையங்களை அமைக்க போதுமான கால அவகாசம் இல்லை என்று கூறியுள்ளது. மேலும், சரியான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் சில மாவட்டங்களில் வரைமுறைகள் செய்ய அதற்கான தரவுகளை திரட்ட முடியவில்லை. ஆகையால், சில குறிப்பிட்ட மையங்கள் மட்டும் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டன என்று தெரிவித்துள்ளது. எனினும், இக்காரணத்தை எதிர்த்து எந்தவொரு கேள்வியையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பவில்லை.

21 நாட்களுக்கு முன்னரே தேர்விற்கான ஏற்பாடுகளை செய்தாக வேண்டும். 17.04.2018-இல் இணையத்தளத்தில் ரோல் நம்பர்கள் பதிவிடப்பட்டது. மேற்கொண்டு அதிக மையங்களை அமைக்க நேரமில்லை. தமிழகத்தில் இருந்து மிகத் தொலைவிலிருக்கும் ராஜஸ்தானில் தேர்வு மையம் அமைக்கப்படவில்லை. அவ்வாறு அமைக்கப்பட்டிருந்தால் அது மாணவரின் விருப்பத்தின் பேரில் தெரிவு செய்யப்பட்டதாக தான் இருக்கும் என்று சி.பி.எஸ்.இ தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

சென்ற ஆண்டில் இருந்தே நீட் தேர்வு விவகாரத்தில் பல பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில், ஓராண்டாக கால அவகாசம் இருந்த போதும் தமிழக மாணவர்களுக்கு மட்டும் முறையான தகுந்த தேர்வு மையங்களை அமைக்க முடியாமல் போனது மட்டும் ஏன். இந்தியாவில் நீட் தேர்வு முறையில் தமிழக மாணவர்கள் மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தமிழக மாணவர்கள் மருத்துவ துறையில் இருக்க கூடாது என அதிகாரத்தில் உள்ளவர்களின் எண்ணமா என்று தமிழக மக்கள் குரல் எழுப்பியுள்ளனர். இதை வலியுறுத்தி தமிழகத்தில் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலத்தில் நீட் மையங்கள் ஒதுக்கியது குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ” சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு மட்டுமே வெளி மாநில மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு இங்குள்ள மையங்களே ஒதுக்கப்பட்டுள்ளதற்கு உறுதி அளிப்பதாக கூறியுள்ளார்”.

தமிழக மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வெளி மாநில தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என கூறியது,  தமிழக மாணவர்களுக்கு சாதமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது தேர்விற்கு 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கிராமப்புற, ஏழை, நடுத்தரக் குடும்பத்தில் இருந்து மருத்துவராக ஆசை கொள்ளும் மாணவர்களுக்கு இந்த தீர்ப்பு பாதமாக அமைந்துள்ளது. வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதுவது, தங்கும் வசதி, உணவு, பயண செலவு என பல பிரச்சனைகள் உள்ளன. இத்தனை பிரச்சனையுடன் மாணவர்களால் எவ்வாறு நன்றாக தேர்வுகளை எதிர் கொள்ள முடியும். இதற்கு தமிழக அரசின் சார்பில் என்ன உதவிகள் செய்யப்படும்.

சென்ற ஆண்டில் நீட் தேர்வு கட்டாயம் எனக் கூறியதன் விளைவால் எவ்வாறு பல மாணவர்களின் மருத்துவக் கனவு அழிந்ததோ, அதைபோலவே இந்த வருடமும் பல மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader