நீட் தேர்வில் தேர்ச்சியான வடநாட்டு கண் மருத்துவர் என ட்ரோலாகும் புகைப்படம்.. உண்மை என்ன ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு எதிரான நிலைப்பாடு இருந்து வருவதால் நீட் தேர்வு தொடர்பான மீம்ஸ் மற்றும் ட்ரோல் பதிவுகள் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதுண்டு. அவற்றில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கண் மருத்துவர் என நோயாளியின் கண்ணில் ஸ்டெதஸ்கோப் வைத்து சோதிக்கும் மருத்துவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்புகைப்படம் கடந்த 2018-ல் இருந்தே வைரல் செய்யப்பட்டு வருகிறது. நீட் தேர்வை ட்ரோல் செய்யும் வகையில் இப்புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள் என அறிய முடிகிறது. எனினும், புகைப்படத்தின் பின்னணியை அறியாமலேயே தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
உண்மை என்ன ?
மருத்துவர் நோயாளியின் கண்ணில் ஸ்டெதஸ்கோப் வைத்து சோதிக்கும் புகைப்படம் இங்கு எப்படி நீட் தேர்வில் தேர்ச்சியான மருத்துவர் என வைரல் ஆகியதோ, அதே புகைப்படம் 2018-ல் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் இடஒதுக்கீட்டால் படித்த மருத்துவர் என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு இருக்கிறது.
இதற்காக 2018-ல் Medical Students Diaries எனும் முகநூல் பக்கத்தில், ” சில நாட்களுக்கு முன்பாக, மருத்துவர் ஒருவர் நோயாளியின் கண்ணில் ஸ்டெதஸ்கோப் வைத்திருக்கும் புகைப்படம் முகநூலில் வைரலானது. “ஆர்பிட்டல் ஆஸ்கல்டேஷன் ” என்று அழைக்கப்படும் இந்த நடைமுறையை அறியாததால், சாதாரண மக்கள் மட்டுமல்ல நமது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட பகிர்ந்து உள்ளனர் மற்றும் அவர்களின் கல்வியறிவின்மை மற்றும் குறைந்த ஆராய்ச்சி திறன்களின் சான்று என புகைப்படத்தை காண்பித்து கேலி செய்தனர் ” எனப் பதிவிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து மருத்துவர் பிரவீன் அவர்களிடம் பேசுகையில், ” இது Orbital auscultation எனும் நடைமுறை. சில ஆண்டுகளாகவே இந்த புகைப்படம் தவறாக பரப்பப்பட்டு வருகிறது ” எனத் தெரிவித்து இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வடநாட்டு கண் டாக்டர் என மருத்துவர் நோயாளியின் கண்ணில் ஸ்டெதஸ்கோப் வைத்து சோதிக்கும் புகைப்படம் தவறாக பரப்பப்பட்டு உள்ளது. இது Orbital auscultation எனும் மருத்துவ நடைமுறை என அறிய முடிகிறது.