10ம் வகுப்பு தேர்வில் ஆசிரியரே ஏமாற்ற உதவும் வீடியோ| நீட் தேர்வு என தவறாக வைரல் !

பரவிய செய்தி
தமிழ்நாடு (vs) வட மாநிலம். நீட் தேர்வு மையத்தின் பாரபட்சம். தமிழகத்தில் தாலி கழட்டும் கட்டுப்பாடு வடமாநிலத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பிட் அடிக்க சுதந்திரம். தமிழக மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் இதுவே.
மதிப்பீடு
விளக்கம்
44 நொடிகள் கொண்ட வீடியோவில், தேர்வு அறையில் மாணவர்கள் அமர்ந்து இருக்க ஆசிரியர் ஒருவர் கையில் விடைத்தாள் ஒன்றுடன் வந்து மாணவர் ஒருவருக்கு விடையைக் கூறிக் கொண்டு இருக்கிறார். மற்றொரு மாணவரும் அதை பார்க்க முயல்வதை தடுக்கிறார். இறுதியாக, ஜன்னல் வழியாக வீடியோ எடுக்கப்படுவதை பார்த்த பிறகு கையில் இருந்த தாளை மறைக்கிறார். அந்த மாணவர் ஜன்னலை மூடுவது இடம்பெற்று இருக்கிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் 44 நொடிகள் கொண்ட வீடியோவின் தொடக்கத்திலேயே, ஹரியானா மாநிலம் ஜாஜ்ஜர் பகுதியில் ஆசிரியர் பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு ஏமாற்ற உதவுவதாக இடம்பெற்று இருக்கிறது.
இதுகுறித்து தேடிய போது, 2017-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஹரியானா ஆசிரியர் மாணவர்களுக்கு ஏமாற்ற உதவிய வீடியோ வைரலாகுவதாக இந்தியா.காம் எனும் இணையதள செய்தியில் வெளியாகி இருக்கிறது.
2017 மார்ச் 22-ம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியான 44 நொடிகள் கொண்ட வீடியோவே தற்போது நீட் தேர்வு என தவறாக வைரலாகி வருகிறது. ஜாஜ்ஜர் மாவட்ட கல்வி அலுவலர், வீடியோவில் இடம்பெற்ற ஆசிரியர் பணியில் இருந்து மாற்றப்பட்டதாகவும், அவரின் மீது விசாரணை நடைபெறும் எனக் கூறியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், வடமாநிலத்தில் நீட் தேர்வு மையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பிட் அடிப்பதாக வைரல் செய்யப்படும் வீடியோ 2017-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது மாணவர்களுக்கு ஆசிரியரே ஏமாற்ற உதவிய காட்சி என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.