நீட் வந்த பிறகு 25% இடங்களுக்கு மட்டுமே தனியார் கல்லூரிகளால் கட்டணம் நிர்ணயிக்க முடிகிறதா ?

பரவிய செய்தி

தனியார் மருத்துவக் கல்லூரிகள் 75 சதவீதம் மாணவர் சேர்க்கையை நிர்வாகம் வைத்துக் கொண்டு, 25 சதவீதம் மட்டுமே அரசு கோட்டா ஒதுக்கப்படும். நீட் வந்ததினால் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் அடிப்படையில் தான் நிரப்ப வேண்டும். 25 சதவீதம் மட்டுமே அந்தந்த கல்லூரி வைத்துக் கொண்டு சம்பாதிக்க முடியும்.

Instagram link

மதிப்பீடு

விளக்கம்

2017ம் ஆண்டு ஒன்றிய அரசு மருத்துவ இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வைக் கட்டாயமாக்கியது. இத்தேர்வினால் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகளும், சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Twitter link | Archive link 

இந்நிலையில் சாமானியர் ஒருவர் நீட் தேர்வு மூலம் தனியார் கல்லூரிகளின் வருமானம் குறைந்து விட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் 75 சதவீதம் இடங்களை நீட் மூலம் மட்டுமே நிரப்ப முடியும். 25 சதவீத இடத்தினைதான் தாங்களாக நிரப்பிக் கொள்ள முடியும். இதன் காரணமாகவே நிர்வாகத்தின் வருமானம் குறைந்து விட்டது. எனவே, தமிழ்நாட்டில் நீட் தேர்வினை எதிர்க்கிறார்கள் என அந்நபர் பேசியுள்ளார்.

உண்மை என்ன ?

நீட் தேர்வின் மூலம் மருத்துவ கல்விக் கட்டணம் குறைவு என்ற தகவல்கள் பரவியபோதே, அது குறித்து ‘யூடர்ன்’ கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. 

ஒரு தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் (NMC) 2019ம் ஆண்டு அறிக்கை ஒன்று வெளியிட்டது. மருத்துவக் கல்லூரிகளுக்கான பல்வேறு விதிமுறைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்களில் உள்ள 50 சதவீத இடங்களுக்கு இவ்வாணையம் கட்டணம் நிர்ணயிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கான கட்டணத்தை மட்டுமே இவ்வாணையம் முடிவு செய்யும். மீதமுள்ள 50 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கட்டணம் நிர்ணயிக்கப்படும். 

2018ம் ஆண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில்(Self Financing Medical College) அரசு மற்றும் நிர்வாக இடங்களுக்கான கட்டணம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு ஒதுக்கும் இடங்களுக்கு ஆண்டுக்கு அதிக பட்சமாக ரூ.4 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் நிர்வாக ஒதுக்கீடான மேனேஜ்மென்ட் இடங்களுக்கு ரூ.12.50 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 

2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் உயர்வு தொடர்பாக ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நீதிபதி வெங்கட்ராமன் கமிட்டியின் நடவடிக்கைகளின்படி, அனைத்துப் பிரிவினருக்கும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் ரூ.35,000 முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி மருத்துவப் படிப்பு நிர்வாக இடங்களுக்கு ஆண்டுக்கு 13.50 லட்சம் ரூபாய் வீதம், மாணவர் ஒரு தான் கல்வி பயிலும் 5 ஆண்டுகளில் மொத்தம் 67.50 லட்சம் கட்டணமாகச் செலுத்துகிறார். நீட் தேர்வின் மூலம் மருத்துவ கல்விக் கட்டணம் குறைந்து விட்டது என்பது நீட் ஆதரவாளர்களால் பல காலமாகச் சொல்லப்பட்டுவரும் ஒரு தவறான தகவல்.

இது மட்டுமின்றி, தனியார் கல்லூரிகளில் நீட் அடிப்படையிலான மாணவர் சேர்கையில் இயற்பியல், வேதியல் பாடங்களில் குறைந்த மதிப்பெண்கள், பூஜ்ஜியம், நெகடீவ் மார்க் வாங்கியவர்களுக்கு கூட இடம் கிடைத்த சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது. இப்படி இருக்கையில், மேனேஜ்மெண்ட் கோட்டாவில் நன்கொடை(Donation) இல்லாமல் சீட் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதெளிவாகிறது.

2022ல் புதுச்சேரியின் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 450 மருத்துவ இடங்களில் 225 இடங்கள் அரசு கோட்டாவின்படி நிரப்ப வேண்டும், ஆனால் 170 இடங்களை மட்டுமே அரசு கோட்டாவில் ஒதுக்கி உள்ளதாக புதுச்சேரி எம்.பி வி.வைத்தியலிங்கம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

தனியார் கல்லூரிகளில் அரசு கோட்டாவில் உள்ள 50% இடங்களில் மெரிட் முறையில் தான் இடங்கள் நிரப்பப்படுகிறதா, அனைத்தும் கண்காணிக்கப்படுகிறதா என உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

மேலும் படிக்க : நீட் ரிட் மனு குறித்து தவறாக செய்தி வெளியிட்ட தந்தி டிவி.. அதை சமூக வலைத்தளங்களில் பரப்பும் பாஜகவினர் !

இதே போன்று, நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ரிட் மனு திரும்பப் பெறப்பட்டு, ஒரிஜினல் சூட் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. அது குறித்து தவறாகப் பொருள் கொள்ளும்படி தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றினை வெளியிட்டது. அதன் உண்மைத் தன்மை குறித்து ‘யூடர்ன்’ கட்டுரை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : “நீட்” சரியான புள்ளிவிவரங்கள் !

முடிவு : 

நம் தேடலில், நீட் தேர்வினால் 25 சதவீதம் மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கை செய்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 75 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணமே வசூல் செய்யப்படுகிறது என்பது ஒரு தவறான தகவல். 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் மேனேஜ்மென்ட் கோட்டா எனப்படும் நிர்வாக கட்டணத்தின் அடிப்படையிலேயே சேர்க்கைகள் நடைபெறுகிறது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader