நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என நையாண்டியாகப் பரப்பப்படும் வீடியோ| யார் இவர்?

பரவிய செய்தி
நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ள வட மாநில மாணவர் இவர் தான். இவர் திறமையை நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா.
மதிப்பீடு
விளக்கம்
வடநாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர் ஆங்கிலத்தில் பேசும் வீடியோ என்றும், எவ்வளவு அறிவுஜீவியாக உள்ளார் என்றும் இவ்வீடியோ சமூக வலைதளங்களில் நையாண்டியாக . வீடியோவில், ” பிகாஸ், பிகாஸ் ” எனும் வார்த்தையை திணறி திணறிக் கூறும் 22 நொடிகள் கொண்ட வீடியோ ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்ட வருகிறது.
இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. வைரல் செய்யப்படும் இவ்வீடியோவில் நிஜத்தின் நிழல் எனும் முகநூல் பக்கத்தின் லோகோ இடம்பெற்று உள்ளதை வைத்து தேடிய போது செப்டம்பர் 24-ம் தேதி அப்பக்கத்தில் வீடியோ வெளியாகி இருப்பதை காண முடிந்தது.
உண்மை என்ன ?
சில மாதங்களாகவே இந்த நபரின் வீடியோ தமிழில் ட்ரோல் செய்யப்பட்டு வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேவீடியோவில், லாக்டவுன், புவர் பீபுள் உள்ளிட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி இருக்கிறார். இதன் அடிப்படையில், இவ்வீடியோ நையாண்டிக்காக நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர் எனத் தலைப்பிட்டு பரப்பி வருகிறார்கள் என அறிய முடிந்தது.
எனினும், வீடியோவில் ஆங்கிலத்தில் பேச முயற்சித்து ட்ரோல் செய்யப்படும் நபர் யார் என அறிந்து கொள்ளத் தீர்மானித்தோம். வீடியோவில் இருந்து புகைப்படத்தை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் ” சுகுர் அலி ” என்பவரின் ஆங்கில பேச்சு என யூடியூப் உள்ளிட்டவையில் முழு வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
அசாம் மாநிலத்தின் மொடாடி கிராமத்தைச் சேர்ந்த சுகுர் அலி என்பவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கு நிதியுதவி இல்லை என்பதால் சிறுநீரகத்தை விற்பனை செய்வதாகவும் அறிவித்தார். இதையடுத்து, மக்களிடம் இருந்து லட்சங்களில் நிதியுதவி கிடைத்த உடன் துப்பிரி தொகுதியில் தேர்தலை சந்தித்து இருக்கிறார். ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார்.
முடிவு :
நம் தேடலில், அசாம் மாநிலத்தில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய சுகுர் அலி என்பவர் ஆங்கிலத்தில் திணறி திணறிப் பேசும் வீடியோவை வடநாட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் பேசும் வீடியோ என நையாண்டியாகப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.