நீட்-க்கு எதிராக 100% எம்பிபிஎஸ் சீட்களும் தெலங்கானாவிற்கே என சட்டம் இயற்றியதாகப் பரவும் தவறான செய்தி !

பரவிய செய்தி
நீட்டிற்கு எதிராக தெலுங்கானா புதிய சட்டம் : 100% MBBS சீட்டுகளும் தெலுங்கானாவிற்கே நிறைவேற்றம்
மதிப்பீடு
விளக்கம்
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு 2016ம் ஆண்டு அறிவித்தது. இத்தேர்வினால் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகளும், சட்ட நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். சமீபத்தில் ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டதும் நீட் குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியது.
நீட்டிற்கு எதிராக தெலுங்கானா புதிய சட்டம் : 100% MBBS சீட்டுகளும் தெலுங்கானாவிற்கே நிறைவேற்றம்#neet #telngana #lawAmendment #100percentage #telunganaStudent pic.twitter.com/vKi6N3Utpu
— TNMedia24 (@tnmedia24) July 6, 2023
இந்நிலையில் ‘நீட்: தெலுங்கானா புதிய சட்டம் : 100% MBBS சீட்டுகளும் தெலுங்கானாவிற்கே’ என்ற தலைப்பில் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், ‘AP மறுசீரமைப்பு சட்டம் 371D பிரிவின் படி.. முன்னதாக, தெலுங்கானா மாணவர்களுக்கு 85% இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன, மீதமுள்ள 15% இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை, தற்போதைய சட்டபடி 100% சீட்டுகளும் தெலுங்கானா மாணவர்களுக்கே ஒதுக்கப்படும்’ என்றுள்ளது.
உண்மை என்ன ?
தெலங்கானா எம்.பி.பி.எஸ் இடங்கள் தொடர்பாகத் தேடியதில், ‘தி இந்து’, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ போன்ற இணையதளங்களில் கடந்த ஜூலை மாதம் வெளியான செய்திகள் கிடைக்கப்பெற்றது. அச்செய்திகளின் மூலம் தெலங்கானா அரசு நீட் தேர்வுக்கு எதிராக எந்த புதிய சட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்பதை அறிய முடிந்தது.
ஆந்திரப் பிரதேச மாநிலமானது கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானா என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அவ்வாறு பிரிக்கப்பட்டபோது தெலங்கானாவில் 20 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. அக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் மாநிலங்களுக்காக ஒதுக்கப்படும் 85 சதவீதத்தில் 15 சதவீத இடமானது தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய 2 மாநில மாணவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. (85 சதவீதம் மாநிலத்திற்கான இடங்கள், 15 சதவீதம் ஒன்றியத்துக்கான இடங்கள்).
தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு தற்போது வரை அம்மாநிலத்தில் புதிதாக 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 10 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என 36 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. புதிதாகத் திறக்கப்பட்ட இக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையிலும் 15 சதவீத இடமானது 2 மாநில மாணவர்களும் சேரும் விதத்தில் சேர்க்கை நடைபெற்று வந்தது.
அந்த 15 சதவீத இடங்களில் பெரும்பாலும் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் நிரப்புவதால் தெலங்கானா மாணவர்கள் பாதிக்கப்படுகிறார் என இதனை மாற்றி அமைக்கும் வகையில் அரசாணை ஒன்றினை (அரசாணை எண் 72) தெலங்கானா அரசு பிறப்பித்துள்ளது.
அதன்படி 2014, ஜூன் 2ம் தேதிக்குப் பிறகு தெலங்கானாவில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாநிலத்திற்காக ஒதுக்கப்படும் 85 சதவீத இடங்களுக்கு தெலங்கானா மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதே அந்த மாற்றம். இது தொடர்பான செய்தியைதான் ‘நீட்: தெலுங்கானா புதிய சட்டம்’ எனத் தவறாக குறிப்பிட்டுள்ளனர். தெலங்கானா அரசு வெளியிட்ட அரசாணைக்கும் நீட் தேர்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இத்தகைய அரசாணையினை எதிர்த்து ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டத்தைச் சேர்ந்த பொட்டபத்துனி சந்திர சேகர் என்பவர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவும் விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், நீட் குறித்து தெலங்கானா அரசு புதிய சட்டம் இயற்றியதாகப் பரவும் தகவல் தவறானது. எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் மாநிலத்திற்காக ஒதுக்கப்படும் 85 சதவீத இடங்கள் அனைத்தும் தெலங்கானா மாணவர்களுக்கு மட்டும் பயன்பெறும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணை குறித்த செய்தியினை தவறாக வெளியிட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.