நீட் தமிழ் கேள்வித்தாளில் 49 கேள்விகளில் பிழை..!

பரவிய செய்தி
நீட் தேர்வின் தமிழ் கேள்வித்தாளில் இடம் பெற்ற 180 கேள்விகளில் 49 கேள்விகளில் பிழை.
மதிப்பீடு
சுருக்கம்
2018 நீட் தேர்வில் ஆங்கில மொழியில் இருந்து தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்த கேள்வித்தாளில் 49 கேள்விகளில் பிழைகள் இருப்பதாக மே 9-ம் தேதி சென்னையை சேர்ந்த tech for all பயிற்சி மையம் ஊடகத்தில் தெரிவித்துள்ளனர்.
விளக்கம்
மே 6, 2018 மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வுகள் நடைபெற்றன. ஜூன் 4-ம் தேதி வெளியாகிய தேர்வு முடிவுகளில் குறைந்தபட்ச தேர்ச்சி சதவீதத்தை பெற்று தமிழகம் பின் தங்கியுள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதிய 24,000 மாணவர்களில் 1.8 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று அதிர்ச்சியை அளித்தது.
இந்நிலையில், நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு அநீதி அளிக்கப்பட்டதாகவும், ஆங்கில மொழியில் இருந்து தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்த கேள்வித்தாளில் 49 கேள்விகள் தவறானவை என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் எழுந்துள்ளன.
சென்னையைச் சேர்ந்த என்.ஜி.ஒ ஆன Tech For All தமிழகத்தில் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர். தேர்வுக்கு பின்னர் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், “ 2018 நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்ப்பு செய்ததில் 180 கேள்விகளில் 49 கேள்விகளில் பிழைகள் இருப்பதாக தெரிவித்தனர்”.
அதில், 75-வது கேள்வியில் “ cheetah “ என்ற ஆங்கில வார்த்தை தமிழில் சிறுத்தை என்று குறிப்பிடாமல் “ சீத்தா “ என்று இடம்பெற்றுள்ளது. அதேபோல் 77-வது கேள்வியில் “ multiple allele “ ( உயிரியல் வார்த்தை) தமிழில் “ பல கூட்டு அல்லேல்கள் “ என்று தவறாக அச்சிட்டுள்ளனர். இதேபோன்று தான் மீதமுள்ள 47 கேள்விகளிலும் பிழைகள் உள்ளன. ஆகையால், சிபிஎஸ்இ தமிழில் தேர்வு எழுதிய ஒவ்வொரு மாணவருக்கும் போனஸ் மதிப்பெண்ணாக 196 வழங்க வேண்டும் என்று Tech For All-ன் நிறுவனர் ஜி.பி.ராம் பிரகாஷ் தெரிவித்து இருந்தார்.
சென்ற ஆண்டு கேள்வித்தாளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்று சிபிஎஸ்இ தெரிவித்து இருந்தது. ஒரு சில கேள்விகளில் பிழைகள் இருந்தால் ஆங்கிலத்தில் இருக்கும் வார்த்தைகளை பார்த்து புரிந்து கொள்ளலாம், ஆனால் 49 கேள்விகளில் பிழை என்றால் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த நேரத்தில் சாத்தியமா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
தமிழில் மொழி மாற்ற பிழை மட்டுமின்றி நீட் தேர்வின் 12 கேள்விகள் விடை அளிக்க குழப்பமாக இருந்ததாகவும், தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று வெளிமாநில பயிற்சி மையங்களும் புகார்கள் அளித்தனர். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களான kota like allen, Resonance, career point , Rao IIT தீர்க்கப்பட்ட விடைகளையும், நீட் பதில்களையும் வெளியிட்டனர். இந்த ஆண்டு வெளியான கேள்வித்தாளில் இயற்பியலில் 6 , வேதியியலில் 4, உயிரியலில் 2 கேள்விகள் தவறு என தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து சிபிஎஸ்இ அலுவலகத்தின் ரீஜினல் அதிகாரி கூறுகையில், “ அதிக பயிற்சி மையங்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து கோரிக்கை வருவதை எங்களால் பார்க்க முடிகிறது. ஆனால், இதுவரை நீட் சம்பந்தப்பட்டவை அனைத்தும் மாணவர்களை சேர்ந்தது. ஆகையால், தேர்வுகள் குறித்து குழப்பங்கள் இருந்தால் மாணவர்கள் மட்டும் புகார்களை அளித்தால் அதை டெல்லி தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப இயலும். இதற்கு அப்புறம் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது” என்று தெரிவித்து இருந்தார்.
இவையெல்லாம் நடந்து பல நாட்கள் ஆகியுள்ளன. தற்போது நீட் தேர்வின் முடிவுகள் வந்து விட்டன. தமிழில் பிழைகள் இருந்தும் அதற்கு எந்தவித கூடுதல் மதிப்பெண்ணும் சிபிஎஸ்இ வழங்கவில்லை. 2017-ம் ஆண்டின் நீட் தேர்வில் தவறான 2 கேள்விக்காக 8 மதிப்பெண்களை சிபிஎஸ்இ வழங்கியது. 2018 நீட் தேர்வில் தமிழகம் பட்டியலில் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.