This article is from Jun 26, 2019

நீட் தொடர்பாக தவறான தகவலை மக்களவையில் பேசிய டி.ஆர்.பாலு !

பரவிய செய்தி

நீட் நுழைவுத் தேர்வால் வெற்றி; முன்னேறிய வகுப்பினர் 7,04,335 பேர். பிற்படுத்தப்பட்டோர் 63,749 பேர், பட்டியல் இனத்தினர் 28,464 பேர் என மக்களவையில் டி.ஆர்.பாலு தெரிவித்த தகவல்.

மதிப்பீடு

சுருக்கம்

நீட் 2019 தேர்வின் முடிவு குறித்து எம்.பி டி.ஆர்.பாலு பேசிய தகவலில் குறிப்பிடப்பட்ட 7 லட்சம் பேர் பொது பிரிவினர் மட்டும் அல்ல. அது, 701-134 மதிப்பெண் அடிப்படையில் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும்.

விளக்கம்

பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு பிறகு பேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, பாஜகவின் முந்தைய தேர்தல் வாக்குறுதிகள், வேலைவாய்ப்பு, நீட் உள்ளிட்ட பல விஷயங்களில் கேள்வி எழுப்பி இருந்தார். அதில், குறிப்பாக நீட் குறித்த தகவல் ஒன்றை அளித்தார்.

கடந்த 2,3 ஆண்டுகளாக சொல்ல இயலாத துயரத்திற்கு மாணவர்கள் ஆளாகிறார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் முன்னேறிய வகுப்பினர் 7,04,335 பேர், பிற்படுத்தப்பட்டோர் 63,749 பேர், ஆதிதிராவிட வகுப்பினர் 20,009 பேர், பழங்குடியினர் 8,455 பேர். முன்னேறிய வகுப்பினரை சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதில் எந்த அளவிற்கு வாய்ப்பு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதும், மற்றவர்கள் சேர முடியாமல் இருக்கிறார்கள் என்பதும் உங்களால் புரிந்து கொள்ள முடியும் என கூறி இருந்தார்.

திமுக எம்.பி டி.ஆர்.பாலு அளித்த தகவல், நீட் தேர்வின் முடிவுகள் வெளியான போது சன் நியூஸ் செய்தியில் வெளியிடப்பட்ட விவரங்களாகும். ஆனால், அப்போழுதே அதனை தவறான தகவல் என நாம் ஆதார விளக்கத்துடன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

2019 நீட் தேர்வின் முடிவுகளில் தேர்ச்சியானவர்களின் மதிப்பெண் அடிப்படையில் பிரித்து பார்க்கையில், 50th Percentile எனும் 701-134-க்கு இடைப்பட்ட மதிப்பெண் பெற்றவர்கள் மொத்தம் 7,04,335 பேர். 40th Percentile எனும் 133-107-க்கு இடைப்பட்ட மதிப்பெண்ணை பெற்றவர்களில் ஒ.பி.சி பிரிவினர் 63,789 பேர், எஸ்.சி பிரிவினர் 20,009, எஸ்.டி பிரிவினர் 8,455 பேர் இடம்பெற்றுள்ளனர்.

விரிவாக படிக்க : நீட் 2019 தேர்ச்சியில் வகுப்பு வாரியான தேர்ச்சி எண்ணிக்கை!

Percentile எனும் மதிப்பெண் அடிப்படையில் பிரிக்கப்பட்ட தேர்ச்சியான மாணவர்களில் பிற(others) எனும் பிரிவில் 7,04,335 பேர் உள்ளனர். இந்த பிரிவில், பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி,எஸ்.டி உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் அடங்கி உள்ளனர், முன்னேறிய வகுப்பினர் மட்டும் அல்ல.

வகுப்பு வாரியாக நீட் மாணவர்களின் விவரங்களை பார்க்கும் பொழுது, பொது பிரிவினரில்(UR) தேர்வு எழுதிய 4,99,884 பேரில் 2,86,245 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒ.பி.சி பிரிவில் தேர்வு எழுதிய 6,31,473 பேரில் 3,75,635 பேரும், எஸ்.சி பிரிவில் 99,890 பேரும், எஸ்.டி பிரிவில் 35,272 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதனை அறியாமல், முன்னேறிய வகுப்பினர் மட்டுமே 7 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளதாக சன் நியூஸ் செய்தியில் தவறாக வெளியிடப்பட்டது. சன் நியூஸ் செய்தியில் வெளியான தவறான தகவலை மக்களவையில் பேசி இருக்கிறார் எம்.பி டி.ஆர்.பாலு. முன்னேறிய வகுப்பினர் மட்டுமே 7 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்து இருப்பதாக கூறிய டி.ஆர்.பாலுவின் தகவல் தவறானது.

நீட் தேர்வால் மாணவர்கள் பிரச்சனையில் இருக்கிறார்கள் என எடுத்துரைத்து இருந்தாலும், தவறான தகவலை முன்னிறுத்தி பேசி உள்ளார் டி.ஆர்.பாலு.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader