This article is from Mar 31, 2019

தற்செயலாக, பிறப்பால் மட்டுமே நான் ஒரு ஹிந்து- நேருவின் கருத்தா ?

பரவிய செய்தி

கல்வியால் நான் ஒரு ஆங்கிலேயன், பார்வையில் நான் ஒரு சர்வதேசியன்,

கலாச்சாரத்தால் நான் ஒரு முஸ்லீம் ,

தற்செயலாக, பிறப்பால் மட்டுமே நான் ஒரு ஹிந்து – நேருவின் கருத்து

மதிப்பீடு

சுருக்கம்

ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், ” நான் பிறப்பால் மட்டுமே ஹிந்து என நேரு கூறியதாக எங்கும் இடம் பெறவில்லை. அதனை கூறியவர் யார் ? என்பதை தொடர்ந்து காணலாம்.

விளக்கம்

இந்தியாவின் முதல் பிரதம அமைச்சர் ஜவஹர்லால் நேரு தன்னைப் பற்றி கூறிய கருத்தில்,

” By, Education I’m a Englishman ,  by views an Internationalist,

by culture a Muslim and a Hindu only by a accident birth “

-எனக் கூறியதாக செய்தித்தாள்களில் கூட அச்சிடப்பட்டு வெளியாகி வருகிறது.

இதே கூற்றை 2018-ல் Republic Tv நிகழ்ச்சியில் பிஜேபி ஆதரவாளர் கூறியதாக சர்ச்சை எழுந்தது. நேரு கூறியதாக பேசப்படும் இக்கருத்தை சிலர் மதச்சார்பற்ற கருத்தாக பார்க்கின்றனர், சிலர் ஹிந்துக்களுக்கு எதிரான கருத்தாக பேசி வருகின்றனர். வலதுசாரி ஆதரவாளர்களால் நேரு கூறியதாக இக்கருத்து அதிகம் பகிரப்படுகிறது. Post Card உள்ளிட்ட பல வலதுசாரி ஆதரவு இணைய செய்திகள், முகநூல் பக்கங்கள் இதனை பகிரச் செய்கின்றனர்.

ஜவஹர்லால் நேரு மற்றும் மோதிலால் நேரு புத்தகங்களை தவிர மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான பி.ஆர்.நந்தா எழுதிய ” The Nehrus: motilal and jawaharlal “  புத்தகத்தை குறிப்பாக எடுத்துப் பார்க்கையில் நேரு கூறியதாக பேசப்படும் கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

” இந்து மகாசபையின் தலைவரான N.B.Khare ஒருமுறை ஜவஹர்லால் நேரு படிப்பால் ஒரு ஆங்கிலேயன், கலச்சாரத்தால் ஒரு முஸ்லீம், தற்செயலாக பிறப்பால் ஒரு ஹிந்து என விவரித்தார் ” என The Nehrus: motilal and jawaharla என்ற புத்தகத்தில் நந்தா குறிப்பிட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி சசி தரூர் எழுதிய  ” Nehru : The Invention of India “ என்ற புத்தகத்தில், 1950 ஆம் ஆண்டுகளில் ஹிந்து மகாசபையின் தலைவராக இருந்த N.B.Khare, “நேரு படிப்பால் ஒரு ஆங்கிலேயன், கலச்சாரத்தால் ஒரு முஸ்லீம், தற்செயலாக பிறப்பால் ஒரு ஹிந்து ” என கூறினார் என இடம்பெற்றுள்ளது.

இரு குறிப்புகளும் N.B.Khare கூறியதாகவும், ஜவஹர்லால் நேரு கூறவில்லை என எடுத்துரைக்கின்றன. N.B.Khare வின் அரசியல் தொடக்கம் காங்கிரஸில் இருந்து துவங்கி பிறகு 1949-ல் ஹிந்து மகாசபையில் இணைந்தார். 1951-ஆம் ஆண்டு வரையில் ஹிந்து மகாசபையின் தலைவராக இருந்தார். 1950-களில் N.B.Khare அதிக முறை இக்கருத்தை கூறியதன் விளைவாக புத்தகங்களில் இடம்பெற்று பின் திரிந்து மாறியுள்ளது.

இதைத் தவிர, நேரு தன்னை பற்றி இப்படி ஒரு கருத்தை கூறியதாக எங்கும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. சில இடங்களில் நேருவின் கருத்து எனக் கூறிவிட்டு, அதற்கு அருகில் வலுவான ஆதாரம் இல்லை என மேற்கோள்காட்டி செல்கின்றனர்.

Jawaharlal Nehru தன் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இக்கருத்தை கூறியதாக 1959 ஆம் ஆண்டு வெளியான ” The Study of Nehru ” என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நேருவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் “கல்வியால் நான் ஒரு ஆங்கிலேயன், பார்வையில் நான் ஒரு சர்வதேசியன், கலாச்சாரத்தால் நான் ஒரு முஸ்லீம் , தற்செயலாக பிறப்பால் மட்டுமே நான் ஒரு ஹிந்து ” என்றக் கருத்தைக் கூறியதாக இடம்பெறவில்லை என தெரிந்துள்ளது.

இவற்றின் அடிப்படையில், நேரு கூறியதாக பரவி வரும் கருத்து அவர் கூறவில்லை 1950-ல் N.B.Khare கூறியது என்பது தெளிவாகி இருக்கிறது. 1959-க்கு பிறகே அக்கருத்து நேருவால் கூறப்பட்டது என மாற்றப்பட்டுள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader