அரை டவுசருடன் நேரு : இது ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அல்ல

பரவிய செய்தி

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி உடையில் இருப்பது போன்ற புகைப்படங்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வினர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

மதிப்பீடு

விளக்கம்

ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 3570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் செப்டம்பர் 12ம் தேதி ஒரு கேலி சித்திரத்தை பதிவிட்டுள்ளது. அதில் கவி நிற அரைக்கால் சட்டை எறிவது போலவும், இன்னும் 145 நாட்கள் இருக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக-வினர் விதைத்துள்ள வெறுப்பில் இருந்து நாட்டினை விடுவிப்போம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கு எதிராக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆர்.எஸ்.எஸ். சீருடையில் இருப்பதாக இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நேரு ஆர்எஸ்எஸ் உடையில் இருப்பதாக இப்புகைப்படம் கடந்த பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. 

 

உண்மை என்ன ?

முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆர்.எஸ்.எஸ். சீருடையில் இருப்பதாக பகிரப்படும் புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். அந்த புகைப்படத்தில் இருப்பது  ஜவஹர்லால் நேருவே. ஆனால் அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை அல்ல. 

அப்புகைப்படத்தில் ஜவஹர்லால் நேரு வெள்ளை தொப்பி அணிந்திருப்பதை படத்தில் காணலாம். 1925ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடையில் வெள்ளை தொப்பி கிடையாது. கருப்பு நிற தொப்பியே ஆர்.எஸ்.எஸ் சீருடையில் ஒரு அங்கமாக பயன்படுத்தப்படுகிறது.

நேரு அணிந்திருப்பது சேவா தளம் என்ற அமைப்பின் சீருடையாகும். அவ்வமைப்பின் கூட்டம் 1939ம் ஆண்டு உத்தர பிரதேசத்திலுள்ள நைனி என்ற பகுதியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமே இது.

இப்புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து 2017, டிசம்பரில் நியூஸ் 18 இந்தியா என்ற இந்தி செய்தி தொலைக்காட்சி வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவிலும், நேரு சேவா தளத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அது ஆர்.எஸ்.எஸ்.-ன் சீருடை அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சேவா தளம் என்பது இந்திய தேசிய காங்கிரசின் ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பு 1924ம் ஆண்டு இந்துஸ்தானி சேவா தளம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு, அதன் உறுப்பினர்களுக்கு உடற் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இவ்வமைப்பு 1931ம் ஆண்டு  காங்கிரசின் தொண்டர் அணியாக மாறியது. தற்போது காங்கிரஸ் சேவா தளம் என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடு குறித்து ஜவஹர்லால் நேரு 1947ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி அன்றைய முதலமைச்சர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதனை இந்திய தேசிய காங்கிரஸ் 2015, ஜூலை 22ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாஜிக் கொள்கை வழியில் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க : “நேரு” பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள்| படங்களில் இருப்பவர்கள் யார் ?

இதேபோல், நேரு பெண்களுடன் இருப்பது போன்றும், புகைப்பிடிப்பது போன்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களின் பகிரப்பட்டன. அப்புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்தும் யூடர்ன் இதற்கு முன்னதாக கட்டுரை வெளியிட்டுள்ளது. 

முடிவு :

நம் தேடலில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆர்.எஸ்.எஸ். சீருடையில் இருப்பதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையல்ல என்பது தெளிவாகிறது. அப்புகைப்படம் உத்தர பிரதேசத்தில் நைனி பகுதியில் நடைபெற்ற சேவா தளம் என்ற காங்கிரஸ் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader