நேரு மற்றும் இந்திரா காந்தி தனக்கு தானே பாரத ரத்னா விருது வழங்கிக்கொண்டார்களா?

பரவிய செய்தி
நேரு 1955 இல் மற்றும் இந்திரா காந்தி 1971 இல் பிரதமர்களாக இருந்த போது தனக்கு தானே பாரத ரத்னா விருது வழங்கிக்கொண்டார்கள்.
மதிப்பீடு
சுருக்கம்
“நேரு மற்றும் இந்திரா காந்தி அவர்களது பாணியில் பாரத ரத்னா விருதை அவர்களுக்கே அளித்துக்கொண்டார்கள். காங்கிரஸ் கட்சி எப்போதுமே இந்தியர்களுக்கு அவமானமாக இருந்து வருகிறது. அவர்கள் சரிந்து வருவது நல்லது”, என ஒரு புகைப்படத்தையும் ட்வீட் செய்துள்ளார் பிஜேபி செய்தி தொடர்பாளர் S G சூர்யா. இதேப்போன்று தற்போதைய இந்திய ஒன்றிய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியும் இதே கருத்தையொத்த ஒரு ட்வீட் ஒன்றை தனது பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
விளக்கம்
இந்த குழப்பத்திற்கான காரணம் பாரத ரத்னா விருதுக்கான பரிந்துரை வழிமுறையாக இருக்கலாம். விருதுக்கான பெயர்களை பிரதமர் ஜனாதிபதியிடம் பரிந்துரைப்பது நடைமுறையில் உள்ளது. 1955ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பாரத ரத்னா விருது வாங்கும்போதும், 1971ஆம் ஆண்டு இந்திரா காந்தி விருது வாங்கும்போதும் அவர்களே பிரதமர்களாக இருந்துள்ளனர்.
ஆனால் ஜனவரி 2, 1954, வெளியிடப்பட்ட பாரத ரத்னா விருதுக்கான அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பிலும் ஜனவரி 15, 1955 இல் மறைந்தவர்களுக்கும் விருது வழங்கலாம் என்பதற்கான அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பிலும் விருதுக்கான பரிந்துரை வழிமுறைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. டிசம்பர் 7, 2011 இல் பதிவேற்றம் செய்யப்பட்ட பாரத ரத்னா ஆவணம் ஒன்றில், “பாரத ரத்னா விருதுக்கான பெயர்களை பிரதமரே ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்கிறார். இதற்கு முறையான பரிந்துரைகள் தேவையில்லை”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையே அரசின் ‘பத்ம அவார்ட்ஸ்’ இணையதளத்திலும் காணலாம்.
27 மே, 2020 தேதியில் வெளியான தி வயர் செய்தியில், “பாரத ரத்னா விருது வழங்கும் விழாவில், நேருவுக்கு மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், மனித குலத்தின் அமைதிக்காக அவர் ஆற்றிய மாபெரும் வீரமுயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் இதுவென்றும் நம் காலத்தில் ‘அமைதியின் சிறந்த சிற்பிக்கு’ ஒட்டுமொத்த தேசத்தின் நன்றியின் அடையாளமாக, நேருவுக்கு இந்த மரியாதையை வழங்குவதாக அவர் கூறினார் என்று ஜூலை 15, 1955 தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் இடம்பெற்றுள்ளது.
விழா நடைபெறும் வரை இந்த விருது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. உண்மையில், பிரதமர் அல்லது அமைச்சரவையின் சிபாரிசு அல்லது ஆலோசனையின்றி இந்த கௌரவத்தை வழங்கத் தீர்மானித்ததால், அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட்டதாக ஜனாதிபதியே ஒப்புக்கொண்டார்”, என்று வெளியாகி உள்ளது.
இதிலிருந்து நேரு அவருக்கான விருதை அவரே பரிந்துரைக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.
15 ஜனவரி, 2019 தேதியன்று ‘தி க்வின்ட்’ தளத்தில் வெளியான செய்தியில், “தற்போதைய வங்கதேசத்தில் 14 நாட்கள் நீடித்த போரில் இந்தியாவை வெற்றிபெறச் செய்ததற்காக இந்திரா காந்திக்கு விருது வழங்கப்பட்டது. ஏபிபி நியூஸ் தளத்துக்கு மூத்த பத்திரிகையாளர் ‘ரஷீத் கித்வாய்’ எழுதிய கட்டுரையில், அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, இந்திரா காந்திக்கு கவுரவத்தை வழங்குவதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார் என்று குறிப்பிடுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு
நம் தேடலில் இருந்து 1955 இல் ஜவஹர்லால் நேருவுக்கும் 1971 இல் இந்திரா காந்திக்கும் அந்தந்த காலகட்டத்தில் ஜனாதிபதியாக பணியாற்றிய ராஜேந்திர பிரசாத் மற்றும் வி.வி.கிரி அவர்களே விருதை பரிந்துரை செய்து வழங்கியதாக அறிய முடிகிறது.
ஆதாரம்
https://egazette.nic.in/WriteReadData/1954/E-2233-1954-0001-103507.pdf
https://egazette.nic.in/WriteReadData/1955/O-2196-1955-0003-100533.pdf
https://www.mha.gov.in/sites/default/files/Scheme-BR_1.pdf
https://thewire.in/history/bharat-ratna-jawaharlal-nehru