முஸ்லீம்களையும், இந்துக்களையும் பிரிக்கும் முடிவை நானே எடுத்தேன் என நேரு ஒப்புக்கொண்டதாகப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
வெடிப்பு ஆதாரம். “நானே பிரிவினை முடிவை எடுத்தேன்” – ஜவஹர்லால் நேரு. 1964 மே மாதம் தனது கடைசி நேர்காணலில், முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரிக்கும் முடிவை எடுத்ததாக நேரு ஒப்புக்கொண்டார். கஷ்டப்பட்டு சம்பாதித்த இந்த வீடியோவை நாடு முழுவதும் பரப்புங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
1947 மார்ச் 24 அன்று மவுண்ட் பேட்டன் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவியேற்றதும், அதே ஆண்டில் ஜூன் 03 அன்று ‘இந்தியா பாகிஸ்தான் பிரிவினை திட்டத்தை’ முன்மொழிந்தார். இதனையடுத்து 1947 ஆகஸ்ட் 14 அன்று தற்போதைய வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தான் என்றும், மேற்கே இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட பகுதிகள் மேற்கு பாகிஸ்தான் என்றும் ஒரு புதிய நாடாக பாகிஸ்தான் உருவானது.
இந்த பிரிவினை தொடர்பாக, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மீதும், மகாத்மா காந்தி மீதும் ஆரம்ப காலத்திலிருந்தே பாஜகவினரால் பல்வேறு அரசியல் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், முஸ்லீம்களையும் இந்துக்களையும் பிரிக்கும் பிரிவினை முடிவை நானே எடுத்தேன் என்று நேரு ஒப்புக்கொண்டதாகக் கூறி அவரின் நேர்காணல் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வெடிப்பு ஆதாரம்”*
*”நானே பிரிவினை முடிவை எடுத்தேன்” – ஜவஹர்லால் நேரு*
1964 மே மாதம் தனது கடைசி நேர்காணலில், முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரிக்கும் முடிவை எடுத்ததாக நேரு ஒப்புக்கொண்டார். கஷ்டப்பட்டு சம்பாதித்த இந்த வீடியோவை நாடு முழுவதும் பரப்புங்கள். pic.twitter.com/WWirKlSYyW— anantham (@ananthamharshi) July 3, 2023
வெடிப்பு ஆதாரம்”*
*”நானே பிரிவினை முடிவை எடுத்தேன்” – ஜவஹர்லால் நேரு*
1964 மே மாதம் தனது கடைசி நேர்காணலில், முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரிக்கும் முடிவை எடுத்ததாக நேரு ஒப்புக்கொண்டார். கஷ்டப்பட்டு சம்பாதித்த இந்த வீடியோவை நாடு முழுவதும் பரப்புங்கள். pic.twitter.com/kmUQlkGsmG— Srirangam Sundar (@sundar19711) July 3, 2023
மேலும் பரவி வரும் இந்த வீடியோவை முகநூலிலும் அதிகமாக காண முடிந்தது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2019-இல் இருந்தே பரவி வருவதைக் காண முடிந்தது.
“धमाकेदार सबूत”
“विभाजन का निर्णय
मैंने ही लिया था” – नेहरूमई 1964 में दिए गए अपने अंतिम साक्षात्कार (Interview) में नेहरु ने स्वीकारा कि विभाजन का निर्णय उन्होंने ही लिया था। देख लो अपनी आंखों से चमचो🤔🤔 pic.twitter.com/E4AbaH68GJ
— 🇭🇮🇳🇩🇺🚩 (@indiangujarati1) December 19, 2019
மேலும் பரவி வரும் வீடியோவின் முழு பகுதி குறித்து தேடியதில், இந்த வீடியோவை Prasar Bharati Archives என்னும் யூடியூப் செய்தி சேனல் தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் கடந்த 2019 மே 14 அன்று பதிவு செய்துள்ளதை காண முடிந்தது.
45:31 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ 1964 மே 18 அன்று எடுக்கப்பட்டு நியூயார்க்கில் ஒளிபரப்பப்பட்டது என்பதையும், இதை தொகுத்து வழங்கியவர் அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான அர்னால்ட் மைக்கேலிஸ் (Arnold Michaelis) என்பதையையும் நமது ஆய்வின் மூலம் அறிய முடிந்தது.
மேலும் அந்த வீடியோவின் 14:34 நிமிடத்தில், தொகுப்பாளர் மைக்கேலிஸ் “சரி, இப்போது நீங்கள், திரு.காந்தி மற்றும் திரு.ஜின்னா ஆகிய மூவரும், இந்த தருணத்தில், சுதந்திரம் அடைவதற்கு முன்பும், பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் அடைவதற்கான போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தீர்களா?” என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு பதிலளித்து பேசிய நேரு சரியாக 14:51 நிமிடத்தில், “திரு.ஜின்னா சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. உண்மையில், அவர் சுதந்திரத்தை எதிர்த்தார். முஸ்லீம் லீக் 1911ல் தொடங்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன், அது உண்மையில் எங்களிடையே பிரிவுகளை மீண்டும் உருவாக்குவதற்காக ஆங்கிலேயர்களால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு அமைப்பு. அவர்கள் ஓரளவு வெற்றியடைந்தனர். ஆம், இறுதியில், பிரிவினையும் வந்தது.” என்று கூறியுள்ளார்.
மேலும் வீடியோவின் 15:23 நிமிடத்தில், நீங்களும் காந்தியும் அந்த பிரிவினைக்கு ஆதரவாக இருந்தீர்களா? என்ற மைக்கேலிஸின் கேள்விக்கு பதிலளித்த நேரு, “திரு.காந்தி இறுதிவரை அதற்கு ஆதரவாக இல்லை. அந்த முடிவு வந்தபோதும் கூட அவர் அதற்கு ஆதரவாக இல்லை. நானும் அதற்கு ஆதரவாக இல்லை, ஆனால் இறுதியில் தான் நான் அப்படி முடிவு செய்தேன் மற்றவர்கள் முடிவு செய்ததைப் போல.
தொடர்ச்சியாக ஏற்படும் பிரச்சனைகளை விட பிரிவினை செய்வது நல்லது என நினைத்தேன். நீங்களே பார்த்திருப்பீர்கள், முஸ்லீம் லீக் தலைவர்கள் அனைவரும் நில சீர்திருத்தத்தை விரும்பாத பெரிய நிலப்பிரபுக்கள். ஆனால் நாங்கள் நில சீர்திருத்தம் வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தோம். அவர்கள் அதை விரும்பவில்லை. நாங்கள் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
இந்த பிரச்சனையை தொடராமல் அவர்கள் எங்களுடன் இருந்திருந்தாலும், அவர்கள் எங்களின் பல நடவடிக்கைகளை எதிர்ப்பார்கள் என்று நாங்கள் நினைத்தோம், மேலும் இந்தியாவின் ஒரு பகுதியை மட்டும் வைத்திருப்பது நல்லது என்றும் நாங்கள் நினைத்தோம். இந்த தலைவர்களுடன் இணைந்திருப்பதை விட, சீர்திருத்தங்கள் மற்றும் எங்கள் திட்டங்கள் பலவற்றுடன் முன்னேறுவது சிறந்தது.” என்று அவர் அந்த நேர்காணலில் பதிலளித்துள்ளார்.
தொடர்ச்சியான பல பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வரவும், சீர்திருத்தத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் மற்ற தலைவர்களை போல் அவரும் இந்திய பாகிஸ்தான் பிரிவினை முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்பதையும் அறிய முடிந்தது.
மேலும் படிக்க: நேரு கையில் வாளியுடன் இருப்பதாகப் பரப்பப்படும் போலியாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!
மேலும் படிக்க: சாவர்க்கரின் சிறை அறை, நேருவின் சிறை வசதி எனப் பரப்பப்படும் தவறான ஒப்பீடு !
முடிவு:
நம் தேடலில், ஜவஹர்லால் நேருவின் 45 நிமிட நேர்காணல் வீடியோவில், ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்து, இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு நான் தான் காரணம் என்று அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறி தவறாக பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.