NEP கமிட்டியில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே இடம்பெற்றாரா?

பரவிய செய்தி

புதிய கல்வி கொள்கை வகுத்தவர்களில் ஒருவரான ஜார்கண்ட் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே எம்பிஏ சான்றிதழ் போலி.. டெல்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு..

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

தேசியக் கல்விக் கொள்கை குறித்து தொடர் விவாதங்கள், விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கிய கமிட்டியில் ஒருவரான பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பெற்ற எம்பிஏ பட்டம் போலியானது என டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தேசியக் கல்விக் கொள்கை கமிட்டியில் இடம்பெற்றாரா என்பது தொடர்பாக தேடிய போது, கமிட்டியில் இடம்பெற்றவர்களின் பெயர்களில் அவர் இடம்பெற்றவில்லை என்பதை அறிய முடிந்தது. 2017-ம் ஆண்டு வெளியான பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தியில்,தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கும் கமிட்டியில் இடம்பெற்ற 9 பேரின் விவரங்கள் வெளியாகி இருந்தது.

அதேபோல், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின் வரைவில் கமிட்டி உறுப்பினர்களின் பெயர்கள், விவரங்கள், கைபொப்பம் உள்ளிட்டவை இடம்பெற்று உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான கமிட்டி தேசியக் கல்விக் கொள்கையின் இறுதி வரைவை உருவாக்கி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே உடைய எம்பிஏ பட்டம் குறித்த சர்ச்சை உருவாகியது உண்மை என்றேக் கூற வேண்டும். 2020 ஜூலை 28-ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில், ஆளும் ஜேஎம்எம் கட்சி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே உடைய தேர்தல் உறுதிப்பத்திரத்தில் அளிக்கப்பட்ட கல்வித்தகுதி குறித்து ஆய்வு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுவதாக இடம்பெற்று இருக்கிறது.

அதில் ஜேஎம்எம் கட்சியின் பொதுச் செயலாளர் பட்டாச்சாரியார் கூறுகையில், துபே முதுகலைப் பட்டம் பெற்றதாகக் கூறப்படும் 1993-ம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் நிஷிகாந்த் துபே எனும் பெயரில் யாரும் படிக்கவில்லை என உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரிஜேந்திர குமார் பாண்டே என்பவரால் பெறப்பட்ட ஆர்டிஐ தகவலை இணைத்து கூறி உள்ளதாக வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், ஜார்கண்ட் மாநில பாஜக எம்பி நிஷிகாந்த் துபே டெல்லி பல்கலைக்கழத்தில் பெற்ற முதுகலைப் பட்டம் போலியானது என்கிற சர்ச்சை எழுந்துள்ளது என்பது உண்மை என்றாலும், அவர் புதிய தேசியக் கல்விக் கொள்கையை வகுத்தவர்களில் ஒருவர் எனக் கூறும் தகவல் தவறானது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button