தேசியக் கல்விக் கொள்கை: தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என ஒன்றிய அமைச்சர் கூறிய பொய்

பரவிய செய்தி

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, எழுத்துப்பூர்வமான எந்த ஒரு கருத்தையும் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை; இக்கல்விக் கொள்கையின் அம்சங்களைத் தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது – ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சித்தூர் ஸ்ரீ சிட்டியில் அமைந்துள்ள IITல் கடந்த 27-ம் தேதி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் ஒன்றிய கல்வி இணையமைச்சர் சுபாஷ் சர்கார் பங்கென்று பேசுகையில், ” தேசியக் கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாடு அரசு சில முரண்பாடுகளைத் தெரிவித்துள்ளது. இக்கொள்கை குறித்து தமிழக அரசு புரிந்துகொள்ள துவங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம். புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை” எனப் பேசியிருந்தார்.

உண்மை என்ன ? 

ஒன்றிய இணையமைச்சர் பேசியது தொடர்பாக உண்மைத் தன்மையினை தேடுகையில், 2021, ஜூன் 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுடெல்லியில் பிரதமரைச் சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பற்றிய விவரப் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து பக்கங்கள் கொண்ட இப்பட்டியலில், வரிசை எண் 9-ல் (பக்கம் 3) பள்ளிக்கல்வி என்ற தலைப்பில் “The National Education Policy should be revoked” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் உள்ளபடி பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் அளித்த கோரிக்கை மனுவில், பள்ளிக் கல்வி குறித்து அதாவது தேசியக் கல்விக் கொள்கைபற்றி பக்க எண் 64 முதல் 67 வரை குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலும் “ தேசியக் கல்விக் கொள்கை 2020, ரத்து செய்ய வேண்டும் ” எனக் குறிப்பிட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாகத் தமிழக அரசு எழுத்துப் பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என ஒன்றிய இணையமைச்சர் பேசியது பொய்யானது. 2௦21ம் ஆண்டே தமிழக முதல்வர் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற எழுத்துப்பூர்வமான கோரிக்கையை பிரதமரிடம் வழங்கி இருக்கிறார் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader