1 லட்சம் பேரின் பார்வையை மீட்டெடுத்த நேபாள மருத்துவர்!

பரவிய செய்தி
டாக்டர் சன்துக் ருய்ட் நேபாள நாட்டைச் சேர்ந்த கண் அறுவைச்சிகிச்சை மருத்துவர். இந்த கண் மருத்துவர் 1,00,000 பேருக்கு அவர்களின் பார்வையை இலவசமாக மீட்டுக் கொடுத்துள்ளார்.ஆனால, இவரை பற்றிய யாரும் அறியவில்லை.
மதிப்பீடு
சுருக்கம்
1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மலிவான மற்றும் எளிதான அறுவைச்சிகிச்சை மூலம் கண்புரையை நீக்கி அவர்களுக்கு பார்வையை மீட்டுக் கொடுத்த நேபாள மருத்துவர் சன்துக் ருய்ட் சேவைக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்து உள்ளது.
விளக்கம்
கண்ணில் ஏற்படும் குறைபாடுகளுக்கு சிகிச்சை பெறமுடியாத நிலையில் இன்றும் ஓர் ஏழ்மை கூட்டம் இருந்து வருகிறது. அப்படி வாழ்ந்த மக்களுக்கு கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி அவர்களுக்கு பார்வையை அளித்த மருத்துவர் பற்றி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. எனினும், இங்குள்ளவர்கள் அவரைப் பற்றி அறிந்து இருக்க வாய்ப்பில்லை.
நேபாள நாட்டில் வசித்து வரும் கண் அறுவைச்சிகிச்சை மருத்துவரான சன்துக் ருய்ட் சில நிமிடத்தில் ஒருவரின் வாழ்க்கையை மாற்றாக கூடியவர். தன் நோயாளிகளின் கண் பார்வையை சேதப்படுத்தும் கண்புரையை நீக்கி, அதிக மதிப்பு இல்லாத செயற்கை லென்ஸ்-ஐ வைத்து பார்வை குறைபாட்டை சரி செய்து விடுகிறார்.
கடந்த 30 ஆண்டுகளில், சன்துக் ருய்ட் தனிப்பட்ட முறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் மொத்தம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பார்வையை மீட்டு தந்துள்ளார். இவரால் பயனடையும் மக்களுக்கு குணப்படுத்தக் கூடிய நிலையில் குறைபாடுகள் இருக்கின்றன. எனினும், வறுமை மற்றும் வரம்புக்குட்பட்ட பொது சுகாதார சேவைகள் மட்டுமே இருப்பதால் மக்கள் சிகிச்சை பெற முடியாமல் இருந்துள்ளனர்.
2006-ல் சன்துக் ருய்ட் நேபாள நாட்டில் இருந்து வட கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டு அறுவைச்கிச்சை மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்தி உள்ளார். சன்துக் ருய்ட் நேபாளம் தவிர பூட்டான், சீனா, மியான்மர், வட கொரியா, இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உள்ளார்.
சிறு வயதில் ஹிமாலயா பகுதியில் வாழ்ந்து வந்த மருத்துவர் சன்துக் ருய்ட் தன் 17 வயதில் சகோதரியை இழந்தார். அவருக்கு டியூபர்குளோசிஸ் சிகிச்சை அளிக்கக் கூடிய நிலையில் இருந்தும் இறந்தார். அந்த நிலையில் இருந்து சன்துக் ருய்ட் பிறருக்கு நன்மை அளிக்கும் பாதையை தொடர வேண்டும் என தீர்மானித்தார். அந்த முடிவை அவர் இலக்காக கருதவில்லை.
இன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கண் குறைபாடுகளை நீக்கி பார்வையை மீட்டுக் கொடுத்து வருகிறார். அவரின் சேவையால் குணமாகிய மக்கள் சன்துக் ருய்ட்-ஐ ” கண் பார்வையின் கடவுள் ” என அழைக்கின்றனர்.
2018 ஆம் ஆண்டில் நேபாள நாட்டின் சிறந்த கண் அறுவைச்சிகிச்சை மருத்துவர் சன்துக் அவர்களின் சேவையை பாராட்டி இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்கி உள்ளனர்.
மக்களுக்காக சேவையாற்றும் நல் உள்ளங்கள் உலகம் முழுவதிலும் இருக்கின்றனர். அவர்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்குமானது.