பிறந்த குழந்தைகளிடம் செயற்கை தாய்ப்பால் ஆய்வு நடத்திய நெஸ்லே நிறுவனம் !

பரவிய செய்தி
நெஸ்லே நிறுவனம் தயாரித்த செயற்கை தாய்ப்பாலை 5 மருத்துவமனைகளின் உதவியுடன் குறை பிரசவத்தில் பிறந்த 75 குழந்தைகளுக்கு மூன்றாம் நாளே தாய்ப்பாலுக்கு பதிலாக செயற்கை தாய்ப்பாலை கொடுத்து ஆய்வு செய்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
நெஸ்லே நிறுவனத்தின் ஆய்வில் , குறை மாதத்தில் பிறந்து கிளினிக்கல் கேரில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக செயற்கை தாய்ப்பாலை அளித்ததாக குற்றச்சாட்டு.
விளக்கம்
” நெஸ்லே இந்தியா ” என்ற நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனத்தின் இந்திய பிரிவு. இந்த நிறுவனம் குழந்தைகளுக்கு தேவையான உணவுகள், பால் பவுடர் மற்றும் பால் பாட்டில்களை தயாரித்து வருகிறது.
சமீபத்தில் நெஸ்லே நிறுவனம் அரசின் விதிமுறைகளை மீறி பிறந்த குழந்தைகளிடம் ஆய்வு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகளுக்கு தேவையான உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் உணவு ஆய்வுகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் குழந்தைகள், ஆய்வு நடத்தப்படும் மருத்துவமனை குறித்த தகவல்களை அரசிற்கு அளித்து முறையான அனுமதி பெற்றே ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என IMS சட்டம் தெரிவிக்கின்றது.
ஆனால், நெஸ்லே நிறுவனம் சட்டத்தை மீறி ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. நெஸ்லே நிறுவனத்தின் ஆய்வில் , குறை மாதத்தில் பிறந்து கிளினிக்கல் கேரில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக செயற்கை தாய்ப்பாலை அளித்ததாக குற்றச்சாட்டு.
முழு உடல் வளர்ச்சி பெற்று பிறகும் குழந்தைக்கும், குறை பிரசவத்தில் இருக்கும் குழந்தைக்கும் இடையே உணவுகளை ஏற்றுக்கொள்ளும் சிக்கல் குறித்த ஆய்வை இந்தியாவில் உள்ள முக்கிய 5 மருத்துவமனைகளில் இருக்கும் 75 குறை பிரசவ குழந்தைகளின் மீது நடத்தியுள்ளனர்.
ஜூலை 17-ம் தேதி பிபிஎன்ஐ நெஸ்லே நிறுவனத்தின் ஆய்வு குறித்து மத்திய அமைச்சரான ஹர்ஷ் வர்தனுக்கு எழுதிய கடிதத்தில், அந்த நிறுவனமானது IMS சட்டத்தின் பிரிவு 9(2)-ஐ மீறி செயல்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு உள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் ஆய்விற்கு உடனிருந்த 5 மருத்துவமனைகளின் பெயர்களும் வெளியாகி உள்ளன. கிளவுட் நைன் மருத்துவமனை(பெங்களூர்), இன்ஸ்ட்டியூட் ஆஃப் சைல்ட் ஹெல்த் (கொல்கத்தா), மணிப்பால் மருத்துவமனை(பெங்களூர்), ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை(டெல்லி) , கொல்கத்தா மெடிக்கல் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் ஆகியவை.
நெஸ்லே நிறுவனத்தின் குழந்தைகளுக்கான உணவு ஆய்வானது Drug Controller General of India (DCGI) உடைய அனுமதியின்றி நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பிறந்த குழந்தைகள் மீது ஆய்வுகள் நடந்தபட்டது குறித்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுகிறது.
குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த நெஸ்லே இந்தியாவின் செய்தித் தொடர்பாளர், நிறுவனம் எப்பொழுதும் ஐஎம்எஸ் சட்டம் உள்பட அனைத்து சட்டங்களுடன், விதிமுறைகளுடன் உடன்படுகிறது என்பதை வலியுறுத்தினார். அறிக்கையில், மருத்துவ ஆய்வின் நோக்கம் அறிவியல் அடிப்படையிலான ஆராய்ச்சியை ஊக்குவிப்பதாகும். மேலும், அனைத்து நிறுவன நெறிமுறை குழு ஒப்புதல்களும் பங்கேற்கும் தளங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன எனத் தெரிவித்து உள்ளார்.
நெஸ்லே நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என காத்திருந்தே அறிய முடியும்.