நெதர்லாந்தின் பொது போக்குவரத்து வாகனம் எனப் பரவும் தனியார் சுற்றுலா வாகனத்தின் வீடியோ !

பரவிய செய்தி
கடலிலும் நிலத்திலும் செல்லக்கூடிய வாகனம், நெதர்லாந்தில் பொது போக்குவரத்தாக உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
நெதர்லாந்தில் பொது போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் வாகனம் எனச் சாலையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய பேருந்து வாகனம் ஒன்றின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
Hem denizde hem de karada giden toplu taşıma aracı. Yer Hollanda/ Rotterdam. Sizin Türkçe isim önerileriniz nedir ? pic.twitter.com/hvWAypVBaq
— İyi ki Öğrendim (@iyikiogrendim) January 26, 2021
உண்மை என்ன ?
பொது போக்குவரத்து வாகனம் எனப் பரப்பப்படும் வீடியோவில் ‘SPLASHTOURS’ என இருப்பதைக் காண முடிந்தது. அந்த வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடினோம்.
‘P-Netherlands’ எனும் இணையதளத்தில் அப்பேருந்து குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமை தொடர்ந்து ரோட்டர்டாம் எனும் பகுதி முக்கிய இடமாக மட்டும் இல்லாமல், சுற்றுலா தளமாகவும் உள்ளது.
மேலும் அந்த இணையதளத்தில் பரவக் கூடிய வாகனத்தின் புகைப்படம் உள்ளது. அப்படத்திற்குக் கீழே ‘சுற்றுலா பேருந்து’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பேருந்து குறித்த வீடியோ ஒன்று ‘Unimedien’ என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் ‘SPLASH TOURS ROTTERDAM’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொண்டு தேடியதில் ‘Splashtours’ எனும் இணையதளத்திலும் அவ்வாகனம் குறித்த தகவல்கள் உள்ளதைக் காண முடிந்தது. ரோட்டர்டாம் எனும் பகுதியில் முதன் முதலில் 2010ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி இப்பேருந்து இயக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்தால் இயக்கப்படும் பேருந்தின் கட்டணம் விவரங்கள் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
மற்ற பேருந்துகளில் இருக்கும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இப்பேருந்தில் இல்லை என்றும், சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பேருந்தின் வேறு சில புகைப்படங்களும் அப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் அதன் கட்டண விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘Trip Advisor’ போன்ற சுற்றுலா இணையதளங்களிலும் இந்த பேருந்து பற்றிய தகவல்கள் உள்ளன.
முடிவு :
நம் தேடலில், நெதர்லாந்தில் சாலையிலும், தண்ணீரிலும் செல்லும் பொது போக்குவரத்து பேருந்து வாகனம் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது தனியார் சுற்றுலா வாகனம் என்பதை அறிய முடிகிறது.