நெதர்லாந்து பல்கலைக்கழகத்தில் சோழர்களின் செப்பேடுகள் !

பரவிய செய்தி

ஆலந்து நாட்டின் பொருட்காட்சியில் சோழர்களின் செப்பேடுகள்.

மதிப்பீடு

சுருக்கம்

2009-ல் ஹிந்து பத்திரிகையில் லெய்டன் சோழர் செப்பேடுகள் ஆலந்து அருங்காட்சியகத்தில் வைக்கபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். 2013-14-ல் Leiden special collection blog -ல் தற்போது செப்பேடுகள் நெதர்லாந்து பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ளதாகக் கூறியுள்ளனர்.

விளக்கம்

நெதர்லாந்து (Holland- நெதர்லாந்தின் இரு மாகாணத்தைக் குறிக்கும்) நாட்டில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் சோழர்களின் பெருமைப் பேசும் 30 கிலோ எடை கொண்ட செப்பேடுகள் இருப்பதை இங்குள்ள பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை.

30 கிலோ எடை, 31 தகடுகள், தகடுகளை இணைக்கும் வளையத்தில் ஈர்க்கக்கூடிய வகையில் சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திரச் சோழனின்(1012-1042) முத்திரை இடப்பட்டுள்ளது. சோழர்கள் காலத்தில் செப்பேடுகள் அதிகம் பயன்பாட்டில் இருந்துள்ளன.

லெய்டன் செப்பேடுகளில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. சோழ சாம்ராஜ்ஜியத்தில் வழி வந்தவர்களைப் பற்றியும், மூதாதையர்கள் புராணங்கள் பற்றியும், இந்து கடவுள் விஷ்ணு பற்றியும் சில தகடுகளில் சமஸ்கிருத மொழியில் இடம்பெற்று இருக்கும்.

“ மீதமுள்ள தமிழ் மொழி பொறித்த தகடுகளில் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய முதலாம் ராஜராஜச் சோழனின்(985-1014) சாதனைகள் இடம்பெற்று இருக்கும் “ 

Leiden plates என அழைக்கப்படும் சோழர் கால செப்பேட்டில், “ ஸ்ரீ விஜயம் என அழைக்கப்பட்ட மலேசியா, இந்தோனேசியாவை ஆண்ட புத்த மத அரசர் ஸ்ரீ மாறா விஜயதுங்கா வர்மன் தன் தந்தை சுடாமணி வர்மன் பெயரில் புத்த மத மடத்தை அமைப்பதற்கு நாகப்பட்டினம் அருகே ஆணைமங்கலக் கிராமத்தை முதலாம் ராஜராஜச் சோழர் நன்கொடையாக வழங்கியது “ இடம்பெற்றுள்ளது.

ஒரு சைவ மன்னர் புத்த மதத்தின் மடம் அமைய உதவியது நெகிழ்ச்சியடையச் செய்கிறது. மதப் பிரச்சனைகள் மேலோங்கி இருக்கும் இன்றையவர்கள் இதனை கவனிக்க வேண்டியது அவசியம்.

சோழர்கள் காலத்தில் கடல் கடந்து இன்றைய மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் நட்புறவு இருந்து வந்துள்ளது. அப்பகுதிகளை தங்களின் ஆளுகைக்கு கீழும் கொண்டு வந்துள்ளனர்.

” 1856 ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்தில் இருந்து 11-15-ம் நூற்றாண்டை சேர்ந்த புத்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு கோபுர வடிவ புத்த கோயில் பல நூற்றாண்டுகள் கடந்து இருந்துள்ளது. எனினும் 1867-க்கு பிறகு எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது ”

2009-ல் The Hindu பத்திரிகையில் லெய்டன் சோழர் செப்பேடுகள் ஆலந்து அருங்காட்சியகத்தில் வைக்கபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். 2013-14-ல் Leiden special collection blog -ல் செப்பேடுகள் நெதர்லாந்து பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ளதாகக் கூறியுள்ளனர்.

செப்பேடுகள் பண்டைய அரசர்களின் வீரம், ஆட்சி, கொடை உள்ளிட்ட பல வரலாற்றுத் தகவல்களை கொண்டுள்ளன. அதில் ஒன்றான லெய்டன் செப்பேடுகள் கடல் கடந்து சோழப் பேரரசின் புகழைப் பரவச் செய்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button