கைதிகள் இல்லை சிறைகளை மூடும் நெதர்லாந்து தேசம் !

பரவிய செய்தி
நெதர்லாந்து மிகவும் பாதுகாப்பானது, அங்குள்ள சிறைக்கு வெளிநாட்டில் இருந்து கைதிகளை இறக்குமதி செய்கின்றனர். சமீபத்தில் குற்றவாளிகள் இல்லை என்ற காரணத்தினால் நெதர்லாந்தில் உள்ள 19 சிறைகள் மூடப்பட்டன.
மதிப்பீடு
விளக்கம்
அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் குற்றவாளிகளால் சிறைகள் நிரம்பி போதிய இடமில்லாமல் உண்டாகும் பிரச்சனைகளுக்கு மத்தியில் நெதர்லாந்து நாட்டில் பிரச்சனை வேறுவிதமாக இருக்கிறது.
17 மில்லியன் மக்கள் தொகை நெதர்லாந்து நாட்டில் உள்ள சிறை கைதிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. சிறைகளில் போதிய கைதிகள் இல்லை என்ற காரணத்தினால் 19 சிறைகளை அந்நாட்டு அரசு இழுத்து மூடியுள்ளது. 2004-ம் ஆண்டில் இருந்து குற்றங்களை குறைக்க மேற்கொன்டு வந்த நடவடிக்கைகளால் இம்மாற்றம் உருவாகியுள்ளது.
ஒருகாலத்தில் சிறை கைதிகள் விகிதத்தில் ஐரோப்பாவிலேயே அதிக விகிதத்தை கொண்ட நாடுகளில் நெதர்லாந்து தேசமும் இருந்தது. ஆனால், தற்பொழுது அவர்களின் கூற்றின்படி, 1,00,000 மக்களுக்கு 57 கைதிகள் என்ற விகிதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதே 1,00,000 பேருக்கு இங்கிலாந்து நாட்டில் 148 கைதிகள் இருப்பதாக பிபிசியில் 2016 நவம்பரில் தகவல் வெளியாகி இருக்கிறது.
2005-ம் ஆண்டில் நெதர்லாந்து சிறைகளில் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 14,468 ஆக இருந்தது. 2015-ல் சிறை கைதிகளின் எண்ணிக்கை 8,245 ஆக குறைந்துள்ளது. நீதிமன்றங்களில் குற்றவாளியாக நிரூபணமாகும் நபருக்கு தண்டனையாக சிறை வாசத்தை அளிப்பதற்கு பதிலாக சமூக சேவை செய்வது, அபராதம் விதிப்பது, குற்றவாளிகளுக்கு எலெக்ட்ரானிக் குறியீடு உள்ளிட்ட நடைமுறைகளையும் மேற்கொண்டு உள்ளனர்.
குற்றத்திற்கு காரணம் என்ன என்பதை அறிந்து அதன் அடிப்படையில் அவர்களுக்கான தீர்வு அளிக்கப்பட்டு, மீண்டும் அவர்கள் குற்றங்கள் செய்யாத நிலைக்கு மாற்றவும் செய்கின்றனர். கைதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது மட்டும் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை. போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தொடர்ந்து கண்காணித்து குற்றங்கள் நிகழா வண்ணம் செயல்பட்டு வருகின்றனர்.
எனினும், சிறைகள் மூடப்படுவதால் 2,000 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். போதிய கைதிகள் இல்லாத காரணத்தினால் சிறைகளுக்கு தேவையில்லாமல் செலவு செய்வதை விரும்பாத அரசாங்கம் சிறைகளை மூடி வருகிறது. தற்பொழுது நெதர்லாந்து மிகவும் பாதுகாப்பான தேசம் என அதன் ஆட்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.