This article is from Dec 02, 2018

5G சோதனையால் பறவைகள் இறந்ததா ?| Fact check

பரவிய செய்தி

நெதர்லாந்து நாட்டில் 5G நெட்வொர்க் சோதனையின் போது பறவைகள் கொத்துக் கொத்தாய் இறந்து உள்ளன.

 

மதிப்பீடு

சுருக்கம்

  • நெதர்லாந்து நாட்டில் பறவைகள் மர்மமான முறையில் கூட்டம் கூட்டமாய் இறந்ததற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை. அதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
  •  பறவைகள் இறந்ததாகக் கூறும்  hauge நகரில் 5G சோதனை நடந்தது பறவைகள் இறந்த சமயத்தில் அல்ல. அவற்றை பற்றி விரிவாக காண்போம்.

விளக்கம்

சமீபத்தில் வெளியாகிய எந்திரன் 2.0 திரைப்படத்தில் மனிதர்களின் வளர்ச்சியால் அதிகம் உபயோகிக்கும் செல்போன்கள், டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் பறவை உள்ளிட்ட பல உயிரினங்கள் பரிதாபமாக இறக்கின்றன என்ற ஆழமான கருத்தை தெரிவித்து உள்ளனர்.

இதன் விளைவால் மக்கள் அதைப் பற்றி அதிகம் சமூக வலைத்தளங்களில் பேசி வருகையில், நெதர்லாந்து நாட்டில் 5G சோதனையின் போது பறவைகள் கூட்டம் கூட்டமாய் இறந்து கிடப்பதாக மீம்கள், வீடியோக்கள் மற்றும் ஊடகங்களில் கூட செய்திகள் வெளியாகி வருகிறது. அது உண்மையா என்பதை விரிவாக காண்போம்.

நெதர்லாந்தில் பறவைகள் இறப்பு :

நவம்பர் 5, 2018-ல் எரின் எலிசபெத் மெடிக்கல் வலைத்தளத்தில்,  நெதர்லாந்து நாட்டில் ஹாக்(Hague) நகரில் நடைபெற்ற 5G அலைக்கற்றை சோதனையால் ஹுஜ்ஜென்ஸ்(Huijgens park) பூங்காவில் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்ததுள்ளன என முதலில் செய்தி வெளியாகியது. இதையடுத்தே, சோசியல் மீடியாவில் பறவைகளின் இறப்பு பற்றி வைரலாகியது.

2018 அக்டோபர் 19 முதல் நவம்பர் 3-ம் தேதிக்குள் Hague நகரில் உள்ள பூங்கா பகுதியில் 337-க்கும் மேற்பட்ட Starling பறவைகள் மற்றும் இரு புறாக்கள் மர்மமான முறையில் இறந்தன என்பது உண்மை. இதன் விளைவால் சில நாட்களுக்கு பூங்காவில் நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் The Hague-ல் செய்தி வெளியாகி உள்ளது.

பறவைகள் வைரஸ் மற்றும் விஷத்தால் இறந்ததா என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. மேலும், இதற்கான சோதனைகளை Wageningen bio veterinary research, Dutch wildlife health centre, Erasmus university மற்றும் Universiteit Gent மூலம் நடைபெறுகின்றன.

5G சோதனை காரணமா ?

 

நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்ததற்கு 5G அலைக்கற்றை சோதனையே காரணம் என்று நிரூபிக்கப்படவில்லை. ஹுஜ்ஜென்ஸ் பூங்காவை சுற்றி உள்ள பகுதியில் 5G அலைக்கற்றை சோதனை ஏதும் நடைபெறவில்லை என Antennebureau மறுப்பு தெரிவித்து உள்ளதாக The Hague-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

” நெதர்லாந்தில் Huawei நிறுவனம் Hague நகரில் 5G அலைக்கற்றை பயன்பாட்டின் சோதனை செயல்முறையை நிகழ்த்தியதாக ஜூன் 28, 2018-ல் Telecompaper வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. பறவைகள் இறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் மட்டுமே செய்முறை நடைபெற்றுள்ளது “

பறவைகள் இறந்த மாதத்தில் 5G அலைக்கற்றை சோதனை ஏதும் ஹுஜ்ஜென்ஸ் பூங்காவை சுற்றி உள்ள பகுதியில் நடைப்பெறவில்லை என்பது தெளிவாகிறது. மேலும், இதில் இறந்த பறவை இனமானது Starling எனக் கூறப்படுகிறது. 5G சோதனையாக இருந்தால் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு ஏன் எவ்வித பாதிப்பும் நிகழவில்லை என்ற கேள்வி உள்ளது.

அமெரிக்காவில் பறவைகள் இறப்பு :

நெதர்லாந்தில் பறவைகள் மர்மமாக இருந்தது போன்று அமெரிக்காவிலும் பறவைகள் இறந்த சம்பவம் நிகந்துள்ளது. 2011-ல் அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் சாலையில் இறந்து காணப்பட்டன. இதில், starling இனம் உள்ளிட்ட பல பறவை இனங்கள் மர்மமான முறையில் இறந்தன. அவற்றிற்கும் நோய் தொற்றுகள் ஏதுமில்லை.

இதேபோன்று உலகின் ஒரு சில இடங்களில் பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன. அதற்கான காரணங்கள் சரியாகத் தெரியவில்லை.

பறவைகள் இறப்பில் 5G அலைக்கற்றை சோதனையை குறிப்பிட்டு எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. மேலும், கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நெதர்லாந்து பறவைகள் இறப்பிற்கும், 5G அலைக்கற்றைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனலாம்.

ஆகையால், பறவைகள் இறப்பில் பரவும் வீடியோக்கள் மற்றும் செய்திகள் வதந்திகளே என்பது நிரூபணமாகியுள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader