புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா ?| வைரலாகும் புகைப்படங்கள் !

பரவிய செய்தி
புதிய 1000 ரூபாய் நோட்டுகள் ! 2000 ரூபாய் நோட்டு அச்சிடும் பணியை மத்திய அரசு நிறுத்திவிட்ட நிலையில், தற்போது புதிய 1000 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. தற்போது புதிய 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் இரு படங்கள் வைரலாகி வருகிறது.
முகநூல் , ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் புதிய 1000 ரூபாய் நோட்டுகள் குறித்து தேடினோம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, ரிசர்வ் வங்கி 2000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தி உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
எனினும், புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடுவது குறித்து எந்தவொரு செய்திகளும் வெளியாகவில்லை என்பதை அறிய முடிந்தது. இதையடுத்து, வைரலாகும் 1000 ரூபாய் நோட்டுகள் குறித்து முகநூலில் தேடிய பொழுது ஜனவரி மாதத்திலேயே இப்படங்கள் பதிவாகி இருந்துள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தி மொழியில் 2019 பிப்ரவரியில் வெளியான யூட்யூப் வீடியோவில் புதிய 1000 ரூபாய் என அந்த நோட்டின் தெளிவான புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. ஆக, புதிய 1000 ரூபாய் நோட்டுகள் என இந்தியா முழுவதிலும் பரவி இருக்கிறது .
புகைப்படத்தில் இருப்பவை ?
மற்ற இந்திய ரூபாய் நோட்டுகளுக்கும், இந்த நோட்டிற்கும் வித்தியாசமும், பொருந்தாத வடிவமைப்பும் இருப்பதை எளிதாக குறிப்பிட்டு பார்க்க முடியும்.
- வைரலாகி வரும் புதிய 1000 ரூபாய் நோட்டில் வலதுபுறத்தில் மேலே ” Artistic Imagination ” என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது.
- அதற்கு கீழே ” MK GANDHI ” என்று இடம்பெற்று இருக்கிறது.
மேற்காணும் புகைப்படங்கள் கடந்த பல மாதங்களாக ரிசர்வ் வங்கி வெளியிடும் புதிய 1000 ரூபாய் நோட்டுகள் என இந்திய முழுவதிலும் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், புதிய 1000 ரூபாய் நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோ அல்லது செய்திகளோ இல்லை.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து , புதிய 1000 ரூபாய் நோட்டு என இந்திய அளவில் பரவி வரும் பணப் புகைப்படம் ஆர்ட்டிஸ்ட் ஒருவரால் கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒன்று. அதை அந்த நோட்டிலேயே குறிப்பிட்டு இருக்கிறார்கள். இனி இதுபோன்ற தவறான தகவல்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.