கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளதா ? | வைரலாகும் பதிவுகள்.

பரவிய செய்தி
புதிதாக மாற்றியமைத்து அமைக்கப்பட உள்ள டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதன் பிரிவுகள்.
மதிப்பீடு
விளக்கம்
மகாமகம் மற்றும் கோவில்களுக்கு பெயர் பெற்ற கும்பகோணம் தஞ்சை மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்குகிறது. கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை முன் வைத்து வந்துள்ளனர். எனினும், நீண்டகாலமாக அவர்களின் கோரிக்கை கோரிக்கையாகவே இருந்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்பும் கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்கப்படுமா என எதிர்நோக்கி இருந்தது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களை மாற்றியமைத்து, கும்பகோணம் தலைமையில் பாபநாசம், திருவிடைமருதூர், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய மாவட்டம் அமைய உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது.
ஆனால், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பதால் கும்பகோணத்தை மையமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படுவது குறித்த செய்திகள் முதன்மை ஊடகங்களில் வெளியாகவில்லை.
எனினும், கும்பகோணத்தின் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன்(திமுக) தி ஹிந்து-க்கு அளித்த பதிலில், ” நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை வருகிற 17-ம் தேதி நடக்க உள்ளது. ஆனால், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கும் திட்டம் தற்பொழுது இல்லை என்றே தெரிகிறது. அப்படி புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்கப்பட்டால் மகிழ்ச்சி ” எனக் கூறியுள்ளார்.
கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட இருந்தால் கும்பகோணம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நிச்சயம் தகவலை அறிந்து இருப்பார். ஆனால், அன்பழகன் அவர்களோ அப்படியான திட்டம் இருப்பதாக தெரியவில்லை என்கிறார். அரசு தரப்பிலும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
நகரத்தின் சிறப்புகள் :
சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து, தூய்மை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் 2019 விருதின் மூன்றாம் பரிசு கும்பகோணம் நகராட்சிக்கு அளிக்கப்பட்டது. ஓர் மாவட்டத்தில் இருப்பது போன்று கும்பகோண நகராட்சியில் தலைமை குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம் உள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியும், டெல்டா மாவட்டத்திற்கான பி.எஸ்.என்.எல் உடைய தலைமை அலுவலகமும் செயல்படுகிறது.
குறிப்பாக, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம் தமிழகத்தில் உள்ள 8 பேருந்து கோட்டங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது. மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அலுவலங்கள் மற்றும் வசதிகளும் இருப்பதால் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக
அறிவிக்க வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
ஆனால், உறுதியான தகவல்கள் இல்லாமல் கும்பகோணம் புதிய மாவட்டமாக அமைய உள்ளதாக பரவும் செய்திகள் தவறான தகவல்களாகும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.