புதிய பாராளுமன்றத்தை திறக்க சங்கராச்சாரியாரே தகுதியானவர் என துக்ளக் குருமூர்த்தி கூறினாரா ?

பரவிய செய்தி

பாரத தேசத்தின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றும் பொறுப்பைத் தகுதியற்றவர்களிடம் நாத்திகரான நேரு ஒப்படைத்ததன் பலனை இன்று வரை அனுபவிக்கிறோம். அது போல இந்த முறையும் நடக்கக்கூடாது. பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு ஆகியோரை விட புதிய பாராளுமன்ற வளாகத்தைத் திறந்து வைக்க சங்கராச்சாரியார்களில் ஒருவரே தகுதியானவராக இருப்பார். ஜூனியர் – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி
Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்புவிடுத்த நிலையில், வரும் (மே மாதம்) 28ம் தேதி கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைக்க சங்கராச்சாரியார்களில் ஒருவரே தகுதியானவராக இருப்பார் என்றும், அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இருந்த டாக்டர்.அம்பேத்கர் தகுதியற்றவர் என்றும் துக்ளக் குருமூர்த்தி கூறியிருப்பதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

உண்மை என்ன ? 

பரவக் கூடிய நியூஸ் கார்டில் ‘24.05.2023’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஜூனியர் விகடனின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடியதில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பது தொடர்பாக பல்வேறு நியூஸ் கார்டுகளை நேற்றைய தினம் (மே 24ம் தேதி) அவர்கள் பக்கத்தில் பதிவிட்டிருப்பதைக் காண முடிகிறது. ஆனால், அவற்றில் குருமூர்த்தி பற்றிப் பரவும் நியூஸ் கார்டு இடம்பெறவில்லை.

வேறு ஏதேனும் ஊடகங்களில் இது தொடர்பாகச் செய்திகள் வெளியாகியுள்ளதா என தேடினோம். அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.

துக்ளக் குருமூர்த்தியின் டிவிட்டர் பக்கத்திலும் அவ்வாறு எந்த ஒரு கருத்தையும் அவர் பதிவிடவில்லை. மேலும் பரவக் கூடிய செய்தி போலியானது என அவரே தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Archive link 

இவற்றிலிருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சங்கராச்சாரியார் திறக்க வேண்டுமென துக்ளக் குருமூர்த்தி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

நாடாளுமன்ற புதிய கட்டிடம் : 

தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. இதற்குப் பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஒன்றிய அரசு முடிவு செய்து, 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.970 கோடி செலவில் கட்டப்படும் அந்த வளாகத்தில் பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை குடியரசுத் தலைவருக்கான புதிய மாளிகை, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கூடுதல் இருக்கைகள் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனை சாவர்க்கர் பிறந்த நாளன்று (மே, 28ம் தேதி) திறக்க உள்ளதாகச் செய்திகள் வெளியானபோதே,  பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் எழத் தொடங்கின. மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தினை குடியரசுத் தலைவரான திரெளபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு எதிர்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்நிகழ்வைப் புறக்கணிப்பதாக 19 எதிர்க் கட்சிகள் கூட்டு அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் “ஜனாதிபதி பாராளுமன்றத்தைத் திறந்து வைக்காததும், விழாவிற்கு அழைக்காததும் நாட்டின் உயரிய அரசியலமைப்பு பதவியை அவமதிக்கும் செயலாகும். பாராளுமன்றம் என்பது ஈகோ என்ற செங்கற்களால் கட்டப்பட்டது அல்ல, மாறாக அரசியலமைப்பினால் கட்டப்பட்டது”  எனப் பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க: கர்நாடகாவில் சோனியா காந்தி உட்கார சொல்லாததால் கார்கே நிற்பதாக துக்ளக் குருமூர்த்தி பகிர்ந்த எடிட் வீடியோ !

முன்னதாக குருமூர்த்தி பரப்பிய பல்வேறு போலி செய்திகளின் உண்மைத் தன்மையினை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.

மேலும் படிக்க: நாட்டுப்புற நடனம் ஆடிய கலெக்டர் எனத் தவறான தகவலைப் பகிர்ந்த துக்ளக் குருமூர்த்தி !

முடிவு : 

நம் தேடலில், பிரதமரை விட புதிய பாராளுமன்ற வளாகத்தைத் திறந்து வைக்க சங்கராச்சாரியார்களில் ஒருவரே தகுதியானவராக இருப்பார் என துக்ளக் குருமூர்த்தி கூறியதாகப் பரவும் செய்தி போலியானது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader