This article is from Jun 18, 2018

Fake News போட்ட தனியார் நியூஸ் சேனல்..!

பரவிய செய்தி

மதுரவாயலில் போக்குவரத்து காவலர் தள்ளியதில் இதயக்கோளாறு இருந்த முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் பொழுதே உயிரிழந்தார்.

மதிப்பீடு

விளக்கம்

ஜூன் 12-ம் தேதி(நேற்று) சென்னை  பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ராமலிங்கம் என்ற காவலர் இருந்துள்ளார். அவ்வழியாக காரில் வந்த  மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்ற 56 வயது முதியவர், பணியில் இருக்கும் பொழுது செல்போன் பேசுகின்றீர்கள் என காவலரிடம் கேட்கப் போய் அது வாக்குவாதத்தில் முடிந்தது.

அதன்பின்னர் காரில் இருந்த சதீஸ்குமார் கீழே இறங்கி போக்குவரத்து காவலருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளார் முதியவர். இதையடுத்து, காரில் இருந்த சதீஸ்குமாரின் மகன் மற்றும் போக்குவரத்து காவலர் ஆகியோர் மயங்கி விழுந்தவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிறகு அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள்.

சதீஸ்குமார் என்ற முதியவர் போக்குவரத்து காவலர் தாக்கியதில் இறந்து விட்டார் என ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. மேலும், தனியார் நியூஸ் சேனலின் ஃபேஸ்புக் பக்கத்தில் காவலர் தள்ளியதில் முதியவர் மாரடைப்பு வந்து இறந்ததாக தவறான செய்தியை வெளியிட்டனர். ஆகையால், இதை உண்மை என நினைத்து அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், காவலர் தாக்கியதாகக் கூறி பரவுவது வதந்தி என நிரூபிக்க அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவை வெளியிட்டு நடந்ததை போலீசார் விளக்கியுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சியில், “ சதீஷ்குமார் காவலர் ராமலிங்கம் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. திடீரென சதீஸ்குமார் மயங்கி விழும் பொழுது காவலர் அவரை தூக்க முயற்சி செய்வது, சதிஷ்குமாரின் மகன் அவரை காரில் ஏற்றுவது போன்ற காட்சிகள் ” அதில் தெளிவாக பதிவாகி உள்ளன.

15 ஆண்டுகளாக இதய நோயால் முதியவர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். மேலும், திடீரென ஏற்பட்ட மாரடைப்பே அவரின் இறப்புக்கு காரணம். அவருடன் காவலர் வாக்குவாதம் மட்டுமே செய்துள்ளார், தாக்க வில்லை.

தனியார் நியூஸ் பக்கத்தில் தவறாக வெளியானதை அடுத்து பலரும் உண்மை என நினைத்து உள்ளனர். ஆனால், உடனடியாக காவல்துறை கண்காணிப்பு கேமரா காட்சியை வெளியிட்டு நடந்த சம்பவத்தை விளக்கியுள்ளது.

Please complete the required fields.




Back to top button
loader