நியூஸ்18 நிர்வாக இயக்குனராக்க பாண்டே உடன் பேச்சுவார்த்தை என வதந்தி!

பரவிய செய்தி
பேச்சுவார்த்தையை தொடங்கியது ரிலையன்ஸ்.! நியூஸ்18 நிர்வாக இயக்குனர் ஆகிறாரா ரங்கராஜ் பாண்டே?
மதிப்பீடு
விளக்கம்
அவதார்நியூஸ் எனும் இணையத்தில், ” பேச்சுவார்த்தையை தொடங்கியது ரிலையன்ஸ்.! நியூஸ்18 நிர்வாக இயக்குனர் ஆகிறாரா ரங்கராஜ் பாண்டே? ” என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதில், ” மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ விவகாரமானது நியூஸ்18 உடைய தலைமை நிர்வாகமான ரிலையன்ஸ் வரை சென்றுள்ளதாகவும், அதன் காரணமாக அங்குள்ள பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாவும், ரங்கராஜ் பாண்டே அவர்களை நியூஸ்18-க்கு நிர்வாக இயக்குனர் பொறுப்பை வழங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இடம்பெற்று உள்ளது.
ஆதாரமில்லாத, பொய் தகவல்களை வைத்து இக்கட்டுரையை எழுதி உள்ளார்கள் என்றேதான் கூற வேண்டும். காரணம், நேற்றுதான் நியூஸ்18 தரப்பில் இருந்து மாரிதாஸ்-க்கு இமெயில் அனுப்பியதாக ஓர் ஸ்க்ரீன்ஷார்டை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். அதை வைத்தே இக்கட்டுரையில் ரிலையன்ஸ் நியூஸ்18-ல் நடத்திய விசாரணையில் நடத்தியதாக, குறிப்பிட்ட சித்தாந்தம் உடையவர்களை கண்டறிந்து உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்கள்.
விரிவாக படிக்க : மாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.
நியூஸ்18 தரப்பில் இருந்து பதில் வந்துள்ளதாகவும், இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி என மாரிதாஸ் கூட வீடியோ வெளியிட்டு இருந்தார். ஆனால், அந்த இமெயில் மோசடியானது என யூடர்ன் ஆதாரத்துடன் வெளியிட்டு இருந்தோம். வினய் சராவகியும் தன்பெயரில் மோசடி மெயில்கள் பரவி வருவதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
நியூஸ்18 தமிழில் குணசேகரன் அவர்களை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக இவரை நியமிப்பதாக வைத்துக் கொண்டாலும் கூட அவர் ஆசிரியரே, நிர்வாக இயக்குனர் அல்ல. நிர்வாக இயக்குனர் என்பது நிர்வாகத்தின் உச்சபட்ச பதவியாக கருதப்படுகிறது. ஆக, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அடிப்படை புரிதலே இல்லாமல் போடப்பட்ட கட்டுரை இது.
நியூஸ்18 இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ராகுல் ஜோஷி ஆவார். பரவிய மோசடி இமெயிலை வைத்துக் கொண்டு ரங்கராஜ் பாண்டே உடன் நியூஸ்18 தொடர்பாக ரிலையன்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், நிர்வாக இயக்குனர் பதவி கூட தர தயாராக இருப்பதாக பொய் கதையை பரப்பி வருகிறார்கள்.