This article is from Dec 30, 2019

நியூஸ் 18 சேனலின் நெறியாளர் செந்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டாரா ?

பரவிய செய்தி

எங்கள் மண்ணின் மைந்தனை RSS பாஜக கும்பலின் மிரட்டலுக்கு பயந்து செய்திபிரிவில் இருந்து நீக்கிய News 18 செய்தி சேனலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

Facebook link | archived link

மதிப்பீடு

விளக்கம்

சில நாட்களுக்கு முன்பாக நியூஸ் 18 தமிழ் செய்தி சேனலில் ” இந்தியா ஒரு இந்து நாடு “.. இங்கு வசிக்கும் 130 கோடி மக்களும் இந்துக்கள் ” என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்து தொடர்பாக விவாத நிகழ்ச்சியாக நடைபெற்றது. அந்த விவாத நிகழ்ச்சியை நெறியாளர் செந்தில் தொகுத்து வழங்கி இருந்தார்.

இந்த விவாத நிகழ்ச்சியில், விசிக தலைவர் திருமாவளவன், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி , பாஜக சார்பில் கே.டி.ராகவன் மற்றும் மூத்தப் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது, நெறியாளர் கேள்வி கேட்கும் பொழுது பேசவிடாமல் கே.டி.ராகவன் இடைமறித்த பொழுது, அவரிடம் நீங்களே ” கதாகாலக்ஷேபம் ” செய்யுங்கள் என நெறியாளர் கூறி இருந்தார்.

இதையடுத்து, கே.டி.ராகவன் விவாதத்தில் தொடர்ந்து பேசமாட்டேன் என எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஆனால், நெறியாளர் செந்தில் தன்னுடைய பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார். எனினும், அந்த பிரச்சனை அதோடு முடியவில்லை.

Twitter link | archived link 

பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ” News 18 நெறியாளர் என்கிற போர்வையில் இருந்து கொண்டு திரு.கே.டி.ராகவன் அவர்களிடம் நீங்கள் கதாகாலக்ஷேபம் செய்யுங்கள் என்று செந்தில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இம்மாதிரி அநாகரிகமான ஒரு நபரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் ” என தன் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளும், ஆதரவும் உண்டானது. ஓர் செய்தி ஊடகத்தின் நெறியாளரை கட்சியைச் சேர்ந்தவர்கள் நீக்க சொல்வது எப்படி சரியான செயல் என எதிர்ப்புகள் எழுந்தது.

இந்நிலையில், நியூஸ் 18 தமிழ் செய்திப்பிரிவில் இருந்து நெறியாளர் செந்தில் நீக்கப்பட்டு உள்ளதாக முகநூலில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அது தவறான தகவல். இன்று நடைபெற்ற ” முதல் கேள்வி ” நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி உள்ளார்.

யூடர்ன் ஆசிரியர், நியூஸ் 18 நெறியாளர் செந்தில் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய பொழுது, பரவி வரும் செய்திக்கு மறுப்பு தெரிவித்து பதில் அளித்து உள்ளார். ஆகையால், தவறான தகவல்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




Back to top button
loader