நியூசிலாந்தில் இந்தியக் கலாச்சாரம் என பரவும் கேரளா புகைப்படம் !

பரவிய செய்தி
இது நியூசிலாந்தில் இருந்து வந்த காட்சி… நாம் நமது கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கிறோம். வெளி நாட்டில் நம் கலாச்சாரத்தை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்..! வாழ்த்துக்கள்.
மதிப்பீடு
விளக்கம்
அசோக் வி எனும் முகநூல் பக்கத்தில், நியூசிலாந்து நாட்டில் இந்து மதத்தை தழுவி நம் கலாச்சாரத்தை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என வெளிநாட்டினர் அமர்ந்து வாழை இலையில் உணவு உண்ணும் புகைப்படம் பகிரப்பட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களைப் பெற்று வைரலாகி வருகிறது. இந்திய அளவில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
இந்தியாவிற்கு வெளியே அயல்நாடுகள் பலவற்றில் இந்து அமைப்புகள் ஆசிரமங்களை அமைத்து மத போதனைகளையும், வழிபாடுகளையும் செய்து வருவதை அறிந்ததே. தற்போது வைரலாகும் புகைப்படம் அப்படி எடுக்கப்பட்டதாக நினைத்தே பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், பலரும் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படம் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தது அல்ல, இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தது என அறிய முடிந்தது.
tripadvisor இணையதளத்தில் கேரளாவில் உள்ள சிவானந்தா யோகா வேதாந்தா தன்வந்தரி ஆசிரமத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு வெளியாகி இருந்தது. அதில், தரையில் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படத்திற்கும், வைரலாகும் புகைப்படத்திற்கு இடையே உள்ள ஒற்றுமையை கீழே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
மேலும் படிக்க : நியூசிலாந்து பிரதமர் கொரோனா இல்லாத நாடு என அறிவித்த பிறகு கோவிலுக்கு சென்றாரா ?
இதற்கு முன்பாக, நியூசிலாந்து நாட்டின் பிரதமர் கோவிலுக்கு சென்ற வீடியோவை வைத்து கொரோனா இல்லாத நாடு என அறிவித்த பிறகு இந்து கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடன் செலுத்தினார் என வதந்தியைப் பரப்பினர்.
முடிவு :
நம் தேடலில், நியூசிலாந்தில் இருந்து வந்த காட்சி மற்றும் வெளிநாட்டில் நம் கலாச்சாரத்தை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள் எனப் பரப்பப்படும் புகைப்படம் கேரளாவில் உள்ள ஆசிரமத்தில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.