தந்தி டிவி கருத்துக் கணிப்பில் தமிழ்நாட்டில் மோடிக்கு ஆதரவு அதிகரித்ததாக பொய் பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி
தந்தி டீவி தமிழ்நாட்டில் நடத்திய கருத்துகணிப்பில் மோடி அவர்களே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்கு ஜூலை 29% ஆக இருந்த ஆதரவு தற்போது 40% ஆக உயர்ந்துள்ளது. என் மண் என் மக்கள் யாத்திரையின் மாபெரும் வெற்றியை இது பறை சாற்றுகிறது.
மதிப்பீடு
விளக்கம்
தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் அடுத்த தேர்தலில் யார் பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு மோடி மீண்டும் பிரதமராக 29% ஆக இருந்த ஆதரவு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையால் 40% ஆக உயர்ந்துள்ளதாக தந்தி டிவியின் இரு நியூஸ் கார்டை பாஜகவைச் சேர்ந்த செல்வகுமார் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இதை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பாஜகவின் செல்வகுமார் பகிர்ந்த பதிவில், 2023 ஜூலை 18ம் தேதி வெளியான தந்திடிவி கார்டில், யார் அடுத்த பிரதமராக வர விரும்புகிறீர்கள்..? என்பதற்கு 70% பேர் ராகுல் காந்திக்கும், 29% பேர் நரேந்திர மோடிக்கும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 2023 ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான மற்றொரு கார்டில், உலகில் இந்தியாவின் புகழ் உயர யார் பிரதமராக வேண்டும் ? என்ற கேள்விக்கு 59% ராகுல் காந்திக்கும், 40% நரேந்திர மோடிக்கும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால், இரு கார்டிலும் உள்ள கேள்வி வெவ்வேறாக உள்ளதை அறிய முடிகிறது.
இதுகுறித்து தந்தி டிவி சேனலில் தேடுகையில், ஆகஸ்ட் 23ம் தேதி வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு பதிவில், யார் அடுத்த பிரதமராக வர விரும்புகிறீர்கள்..? என்ற கேள்விக்கு 70% ராகுல் காந்திக்கும், 29% நரேந்திர மோடிக்கும் ஆதரவு என்றே உள்ளது. நரேந்திர மோடிக்கு மே மாதம் 27% ஆக இருந்த ஆதரவு ஜூன் மாதம் 29% ஆக உயர்ந்தும், ஜூலையில் அது மாறாமலும் உள்ளதை பார்க்கலாம்.
இதேபோல், உலகில் இந்தியாவின் புகழ் உயர யார் பிரதமராக வேண்டும் ? என்ற கேள்விக்கு 59% ராகுல் காந்திக்கும், 40% நரேந்திர மோடிக்கும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 2023 மே மாதம் 39% ஆக இருந்த மோடிக்கான ஆதரவு ஜூன் மாதம் 40% ஆக உயர்ந்தும், ஜூலையில் அது மாறாமலும் உள்ளதை பார்க்க முடிகிறது.
கருத்துக் கணிப்பு தொடர்பாக தந்தி டிவி சேனலில் வெளியான வீடியோவிலும் இதே தகவல்கள் வெளியாகி இருப்பதை பார்க்கலாம். இதில் இருந்து, யார் அடுத்த பிரதமராக வர விரும்புகிறீர்கள்..? , உலகில் இந்தியாவின் புகழ் உயர யார் பிரதமராக வேண்டும் ? என்ற கேள்விகளுக்கு நரேந்திர மோடிக்கான ஆதரவு பெரிதாக உயரவில்லை என்பதை அறிய முடிகிறது.
மேலும், ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளே ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகி இருக்கிறது. ஆனால், அண்ணாமலையின் யாத்திரை தொடங்கப்பட்டதே ஜூலை 28ம் தேதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், தந்தி டிவி சேனல் தமிழ்நாட்டில் நடத்திய கருத்துகணிப்பில் மோடி அவர்களே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்கு ஜூலை மாதம் 29% ஆக இருந்த ஆதரவு தற்போது 40% ஆக உயர்ந்துள்ளது என பாஜகவினர் பரப்பும் தகவல் தவறானது. தற்போதும் நரேந்திர மோடிக்கு 29% ஆதரவே இருப்பதாக கருத்துக் கணிப்பில் வெளியாகி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.