டோல் கேட்களில் 12 மணி நேரத்தில் திரும்பினால் கட்டணம் இல்லையா ?

பரவிய செய்தி
டோல் கேட் பயன்படுத்தும் வாகன ஒட்டிகளுக்கான அறிவிப்பு !
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் பொழுது ஒரு முறையா அல்லது இருமுறையா( செல்வதற்கும், திரும்புவதற்கும்) என கேட்பார்கள். இனி அவர்களிடம் 12 மணி நேரத்திற்கு மட்டும் எனக் கூறுங்கள். நீங்கள் 12 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் அதற்கான சுங்கவரி ஏதுமில்லை. டிக்கெட்டில் அதற்கான நேரம் குறித்த முத்திரை இடப்படும்.
விதிமுறைகள் பற்றி மக்கள் பெரும்பாலும் அறியாதக் காரணத்தினால் சுங்கவரி வசூலிக்கும் நிர்வாகம் குடிமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை ஏமாற்றுகிறது. இதைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் – நிதின் கட்கரி (மத்திய அமைச்சர், இந்தியா)
மதிப்பீடு
சுருக்கம்
டோல் கேட்களில் சுங்கவரிக் கட்டணம் செலுத்துவதில் பரவும் பல தவறான தகவல்களில் 12 மணி நேரப் பயணம் என பரவும் செய்தியும் ஒன்று. நிதின் கட்கரி கூறியதாக அதிகாரப்பூர்வ செய்திகள் எதுமில்லை.
விளக்கம்
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பாக நாடு முழுவதும் மக்களுக்கு வெறுப்பு மனநிலை நிலவுகிறது.
சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சுங்கச்சாவடி கட்டண விதிகளில் உள்ள 12 மணி நேரம் பயணம் குறித்து தெளிவுப்படுத்தியதாக ஓர் பதிவு வைரலாகி வருகிறது. இது உண்மையா என பலரும் கேட்கின்றனர்.
National Highway Authority of India(NHAI)-வின் விதிமுறைகளில் 12 மணி நேரத்தில் வாகனங்கள் திரும்பினால் அதற்கு சுங்க கட்டணம் இல்லை என்ற நடைமுறை விதிகள் உள்ளதா என்றால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளத்தில் அதைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை என்ற பதில்.
NHAI-வின் திட்ட இயக்குனரின் கூற்றின்படி, “ ஒருமுறை மட்டும் என எடுக்கும் சீட்டுகள் சுங்கச்சாவடியை வாகனங்கள் கடந்தால் முடிந்து விடும். பலமுறை வருகை சீட்டு என்பது 24 மணி நேரத்தில் சென்று மீண்டும் திரும்புவதைக் குறிக்கும். மேலும், மாதம் ஒருமுறை மட்டும் கட்டணம் கட்டி பயன்படுத்தும் விதிமுறைகளும் உள்ளன. ஆனால், NHAI பயன்படுத்துபவர் கட்டண ஒப்பந்தத்தில் 12 மணி நேரம் சீட்டு முறை என எதுவும் இல்லை “ என்றுள்ளார்.
சுங்கசாவடியில் காத்திருந்தால் பணம் செலுத்த தேவையில்லையா ?
இதுகுறித்து மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்தாரா எனத் தேடுகையில், சுங்கச்சாவடி கட்டணத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 12 மணி நேர பயணம் குறித்து பேசியதாக அதிகாரப்பூர்வ செய்திகள் ஏதும் வெளியாகவில்லை என அறிய முடிந்தது.
ஆக, சுங்கச்சாவடியில் 12 மணி நேரம் மட்டும் பயன்படுத்தும் வகையில் கட்டண சீட்டு முறை உள்ளதாக பரவும் தவறானச் செய்திகளை வாகன ஓட்டிகள் நம்ப வேண்டாம். சுங்கச்சாவடிகளின் விதிகளில் மாற்றம் இருந்தால் உடனடியாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகும்.