ஹைட்ரோகார்பன் எடுத்ததால் பாதிக்கப்பட்ட நைஜீரிய ஆற்றுப்படுக்கையா ?

பரவிய செய்தி
ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட்டதால் நாசமான நைஜீரியாவின் வளமான நகர் ஆற்றுப்படுக்கை. எதிர்காலத்தில் காவிரி ஆற்றுப்படுக்கையும் மாறும். தற்பொழுது போராடவில்லை என்றால்..
மதிப்பீடு
சுருக்கம்
நைஜீரியாவில் உள்ள ஆற்றுப்படுக்கை கச்சா எண்ணெய் மற்றும் ஹைட்ரோகார்பன் ஆகியவற்றால் அதிக அளவில் மாசடைந்து உள்ளது. எண்ணெய் வளமிக்க நாட்டின் கச்சா எண்ணெய் மீது இருந்த பேராசை, எண்ணெய் நிறுவனங்களின் அதிகரிப்பு, பெட்ரோலிய கடத்தக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் என அனைவரின் தவறான செயல்கள் மண்ணை நாசப்படுத்தி உள்ளது.
விளக்கம்
ஆப்பிரிக்க நாடுகளில் அதிக பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடாக திகழ்வது நைஜீரியா. அங்கு முக்கிய தொழிலாக இருப்பதும் கச்சா எண்ணெயே. இதில், நைஜர் டெல்டா ஆனது பெட்ரோல் உற்பத்தியில் மிக முக்கிய மாநிலமாகும். இங்கு அலையாத்தி காடுகளுக்கு இடையே ஓடும் முக்கியமான ஆறு தான் NUN. ஆனால், இன்று அப்பகுதி அதிக மாசுபட்டால் உலக அளவில் சர்ச்சையாகி உள்ளது.
நைஜீரியாவில் 1950-களில் எண்ணெய் வளம் மிகுந்து இருப்பது கண்டறியப்பட்டு, அதனை எடுக்க ஆயில் நிறுவனங்கள் அம்மண்ணை நோக்கி படையெடுத்தனர். எங்கு எல்லாம் எண்ணெய் வளம் கண்டறியப்படுகிறோ அங்கெல்லாம் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டன. கிடைக்கும் கச்சா எண்ணெய்களை பைப் லைன்கள் மூலம் தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் சென்றனர்.
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் முக்கிய தொழிலாக மாறுவதற்கு முன்பு மீன்பிடி தொழில், விவசாயம் உள்ளிட்டவையை மக்கள் பெரிதும் நம்பி இருந்தனர். ஆனால், கச்சா எண்ணெய் அந்நாட்டு மக்களின் மனநிலையை மாற்றியது. கச்சா எண்ணெய் எடுக்க நினைக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது, ஊழலும் பெறுகிறது. மக்களும் தங்களின் கவனத்தை எண்ணெய் மீது திருப்பினார்கள்.
ஒரு பக்கம் அரசுக்கு வருமானம், அரசு அதிகாரிகளுக்கு பணம் என்ற பேராசையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டது. மறுபக்கம், தொழிற்சாலைகளுக்கு செல்லும் பைப் லைன்களை உடைத்து கச்சா எண்ணெய்யை பேரல்களை நிரப்பி சட்ட விரோதமாக அலையாத்தி காடுகளில் பெட்ரோலாக மாற்றி மக்கள் கடத்தி வந்தனர்.
தோராயமாக ஒவ்வொரு ஆண்டும் நைஜர் டெல்டா பகுதியில் இயந்திரவியல் கோளாறு, மூன்றாம் தரப்பினர் செயல்பாடுகள் மற்றும் அதிகளவில் காரணங்கள் தெரியாமல் 2,40,000 பேரல் கச்சா எண்ணெய் அம்மண்ணில் கசிவதாகக் கூறப்படுகிறது. அந்நாட்டில் எண்ணெய் பைப் லைன்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுகின்றன. அதனால், பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
எண்ணெய் நிறுவனங்களின் பைப் லைன்களில் இருந்து கோளாறுகள் காரணமாக வெளியாகும் எண்ணெய் கசிவுகள், கடத்தல்காரர்களின் செயல்களால் 50 ஆண்டுகளுக்கு முன்பு செழிப்பாக இருந்த மண், வனம், நீர் எண்ணெய் கலந்த நரகம் போன்று காட்சியளிக்கிறது. காற்றும் மாசடைந்தது குறிப்பிடத்தக்கது.
2011-ல் UNEP மூலம் வெளியான அறிக்கையில், நைஜர் டெல்டா உள்ளிட்ட பகுதியில் மண் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்த அளவானது தேசிய அளவை விட அதிகம் உயர்ந்து இருப்பதாக கூறப்பட்டது. இப்படி மண்ணில் கசியும் எண்ணெயால் மக்களின் ஆரோக்கியம் பல வழிகளில் பாதிக்கப்படுகிறது. நைஜீரியன் மெடிக்கல் ஜெர்னலில் 2013-ல் வெளியான ஒரு கட்டுரையில், எண்ணெய் கசிவால் உருவான மாசானது, மக்களின் உணவு பாதுகாப்பை 60% குறைந்துள்ளது மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டை 24% அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நைஜர் டெல்டா மாநிலத்தின் ஆற்றுப்படுக்கை பாதிக்கப்பட்டதற்கு முழு காரணம் எண்ணெய் வளமே !. அதிகாரிகளின் பேராசை, மக்களின் தவறான செயல்கள், தீவிரவாதம், எண்ணெய் நிறுவனங்களின் எண்னிக்கை அனைத்தும் ஒன்று சேர்ந்து நைஜீரிய மண்ணை நாசப்படுத்தி உள்ளது. எதிர்காலத்தை குறித்து சிந்திக்காமல் செய்த செயல்கள் இன்று அவர்களுக்கே வினையாக மாறியுள்ளது.
எண்ணெய் கசிவுகள் கடல் பகுதியையும் விட்டு வைக்கவில்லை. இபேனோ பகுதியில் மீன்பிடித்து வாழ்பவர்கள், ” கடலில் மீன் இருப்பதே தெரியவில்லை. கடலில் எண்ணெயே கலந்து இருக்கிறது ” என்கிறார்கள்.
இன்றைய எண்ணெய் தேவை, தனியார் நிறுவனங்களின் லாபத்தை முதன்மையாக கருத்தும் அரசாங்கத்தால் எந்தவொரு நாட்டின் எதிர்காலமும் இப்படி மாறக்கூடும் !