கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு பிரித்து கொடுத்தாரா நைஜீரியா அதிபர் ?

பரவிய செய்தி
ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு தருவேன் என்ற நைஜீரியா பிரதமர் முகமது புகாரி. சொன்னது போல் ஆட்சிக்கு வந்து சுவிஸ் வங்கியில் முதற்கட்டமாக 2000 கோடி கருப்பு பணத்தை மீட்டு தன் நாட்டு மக்கள் 3 லட்சம் பேருக்கு பகிர்ந்து அளித்துள்ளார். இவர் தான் பிரதமர். சொன்ன வார்த்தையை காப்பாற்றியுள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இந்திய மதிப்பில் 2000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள நாட்டின் மீட்கப்பட்ட சொத்துக்களை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. சோசியல் மீடியாவில் கூறுவது போன்று கருப்பு பணத்தை மக்களுக்கு பிரித்து கொடுத்தார் என்பதெல்லாம் உண்மை அல்ல. ஆனால், ஊழலை ஒழிப்பதற்கு கடுமையாக முயற்சித்து வருகிறார். மற்ற நாடுகளின் தலைவர்களை ஒப்பிடும் போது சிறந்த தலைவராக இருந்து வருகிறார்.
விளக்கம்
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த ஊழல் முறைகேடுகளை சுட்டிக்காட்டி தங்களின் ஆட்சி அமைந்தால் ஊழலுக்கு எதிராக போராடுவோம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவோம் மற்றும் நல்ல அரசாங்கம் அமையும் என்று வாக்கு அளித்தனர் ஆளும் மத்திய அரசு. குறிப்பாக, வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்றும் வாக்குறுதிகளை அளித்தது நரேந்திர மோடி அரசு.
ஆட்சியே முடியப் போகிறது, இன்னும் கருப்பு பணத்தை மீட்கவில்லை, வளர்ச்சி, பொருளாதாரம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் பிரதமர் மோடியின் அரசு மீது உள்ளது. ஆனால், தனது ஆட்சி அமைந்தால் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு தருவேன் என வாக்குறுதி அளித்த நைஜீரியா பிரதமர் முகமது புகாரி, சொன்னது போன்று கருப்பு பணத்தை மீட்டு 3 லட்சம் மக்களுக்கு பகிர்ந்து அளித்துள்ளார் என்ற செய்தி சோசியல் மீடியாவில் சமீபத்தில் வைரலாகி வருகிறது.
நைஜீரியா பிரதமர் :
2015-ல் நைஜீரியாவில் நடைபெற்ற தேர்தலில் All Progressives congress கட்சி வெற்றிப் பெற்று முகமது புகாரிஅதிபரானார். தேர்ந்தேடுக்கப்பட்ட அதிபர் புகாரி முன், நாட்டின் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும், அரசாங்கத்தில் இருக்கும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும், எண்ணெய் மாஃபியா கட்டுப்படுத்துவது மற்றும் மதவாத தீவிரவாதிகளை ஒடுக்குவது என பல பணிகள் குவிந்து இருந்தன. முகமது புகாரி நைஜீரியாவின் முன்னாள் ராணுவப்படைத் தலைவராக இருந்தவர்.
முந்தைய அரசின் ஆட்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கோடிக்கணக்கான பணத்தை ஐரோப்பிய வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர். 2016-ல் நைஜீரியாவின் ஊழல் நிறைந்த முன்னாள் தலைவர் சனி அபசாக்கு சொந்தமாக சுவிஸ்-ல் இருக்கும் 320 மில்லியன் டாலரை திரும்ப கொண்டு வர உலக வங்கியின் உதவியை நாடினார். அமீரகம், அமெரிக்கா மற்றும் சுவிஸ் நாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த ஆண்டு மே மாதம், சுவிட்ஸர்லாந்து, உலக வங்கி மற்றும் நைஜீரிய அரசு மூன்றும் உலகவங்கி மேற்பார்வையிட்டு உதவிசெய்யும் திட்டத்தின் மூலம் நீதியானது தாய்நாட்டுக்கு செல்ல இருப்பதாக சுவிஸ் அரசாங்கம் கூறியது. “இந்த திட்டம் நைஜீரியாவில் இருக்கும் மக்களுக்கு சமூக பாதுகாப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் மீட்கப்பட்ட நிதியிலிருந்து பணம் அளிப்பதை சரிப்பார்ப்பதோடு ஊழல் மற்றும் தவறான பயன்பாட்டிற்கு உறுதியான நடவடிக்கைகளை கொண்டுள்ளது.” என்றும் கூறியது. இப்போது 1.2 பில்லியன் டாலர்களை தருவதாக உறுதி அளித்துள்ளது. நைஜீரிய அரசு பல நாடுகளில் இருக்கும் நாட்டின் திருடப்பட்ட சொத்துக்களை மீட்டு கொண்டு வரும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
நைஜீரியா அதிபரின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் கூட சிக்கியுள்ளனர். இதுமட்டுமன்றி முறைகேடுகள் செய்து வாங்கிய உயர்தர கார்கள், நகைகள், வீடுகள் மற்றும் மருத்துவமனையில் இருக்கும் MRI ஸ்கேனர் கூட அரசால் கைப்பற்றப்பட்டது. கருப்பு பணம் பரிமாற்றத்திற்கு உதவும் வங்கிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் விசாரணை நடைபெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.
“ அரசின் நடவடிக்கையால் நைஜீரியா நாட்டில் ஊழல்கள் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அரசின் மீது நம்பிக்கை உள்ளதாகவும் மக்கள் நல சார்ந்த ஆர்வலர் கேமி ஒகேன்யோடோ தெரிவித்துள்ளார் “.
இந்தியாவை விட நைஜீரியா பொருளாதாரத்தில் முன்னணி நாடாக இல்லாவிட்டாலும் முகமது புகாரி அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால் அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் என யாரையும் விட்டு வைக்கவில்லை. அதேபோன்று ஊழல் பணத்தை மீட்கும் முயற்சிலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கருப்பு பணத்தை மக்களுக்கு பகிர்ந்து அளித்தார் என்று கூறுவது தவறாக இருந்தாலும், முகமது புகாரின் சிறந்த நடவடிக்கையால் அவர் மற்ற நாடுகளின் பிரதமர்களை ஒப்பிடும் போது சிறந்த தலைவராக இருந்து வருகிறார்.
ஆதாரம்
Muhammadu Buhari: Nigeria’s anti graft-president
what should modi learn from nigerian president muhammadu buhari
Nigeria: President Buhari’s Fight to Recover Nigeria’s Stolen Assets – allafrica.com
Switzerland returns $1.2bn looted from Nigeria – The East African
Swiss to return $321 million in stolen funds to Nigeria – Reuters