இந்தி கற்றுத்தரக் கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் நடனம் ஆடியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ !

பரவிய செய்தி

ஹிந்தி படிக்கரேன் சொல்லிக்கொடு ஸ்கூல் விழாவில் டேன்ஸ் 

Twitter link | Archive twitter link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தி மொழி கற்பிக்கப்படுவதில்லை. தங்களுக்கு இந்தி சொல்லித்தர வேண்டும் எனப் பள்ளியில் நடைபெற்ற விழா ஒன்றில் மாணவர்கள் நடனம் ஆடியதாக 1 நிமிடம் 37 வினாடிகள் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வீடியோவின் கடைசியில் “We want to learn Hindi மாமு” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

உண்மை என்ன ? 

பரவக்கூடிய வீடியோவில் நடனம் ஆடும் மாணவர்களுக்குப் பின்னால் உள்ள சுவரில் “அரசினர் மேல்நிலைப்பள்ளி, எடக்காடு, நீலகிரி” என எழுதப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. 

அந்த பள்ளியின் பெயரைக் கொண்டு ‘Yedakadu school dance’ என யூடியூபில் தேடினோம். 3 நிமிடம் கொண்ட முழுமையான வீடியோ கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி GHSS YEDAKADU” என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

4 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான அவ்வீடியோவினை சுமார் 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஆனால், அதில் இந்தி கற்றுத்தரக் கோரி மாணவர்கள் நடனம் ஆடவில்லை. சினிமா பாடல்களுக்கு மட்டுமே நடனம் ஆடி உள்ளனர்.

பள்ளி மாணவர்கள் நடனம் ஆடிய வீடியோவில் உள்ள பாடலை நீக்கிவிட்டு, இந்தி கற்றுத்தரக் கோரும் வேறு ஒரு பாடலை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். எடிட் செய்யப்பட்ட பாடலுக்கு ஏற்றவாறு மாணவர்களின் நடனமும் slow motion-ல் எடிட் செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. 

பள்ளி மாணவர்கள் நடனம் ஆடிய வீடியோவில் “We want to learn Hindi மாமு” என்பதும் இல்லை. ஆடியோவை எடிட் செய்தவர்களே இந்த வசனத்தையும் எடிட் செய்து இடம்பெற செய்துள்ளனர்.

தமிழ்நாட்டு பள்ளியின் கலை நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆடிய வீடியோவினை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு எழும் பிரச்சனைகளுக்கும், அதனால் வரும் மன உளைச்சலுக்கும் யார் பொறுப்பேற்பது ?

முடிவு : 

நம் தேடலில், பள்ளி மாணவர்கள் இந்தி கற்றுத்தரக் கோரி நடனம் ஆடியதாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல. அது 2018ம் ஆண்டு பள்ளி விழா ஒன்றில் மாணவர்கள் நடனம் ஆடிய வீடியோவை  எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader