This article is from Sep 30, 2019

9 வங்கிகளை நிரந்தரமாக மூடுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததா ?

பரவிய செய்தி

இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 9 வங்கிகள் நிரந்தரமாக மூடப்பட உள்ளன. அந்த அந்த வங்கிகளில் யாரேனும் பண பரிவர்த்தனை வைத்து இருந்தால் அதனை முழுமையாக எடுத்து விடவும். வங்கிகளின் விவரங்கள், கார்ப்பரேஷன் வங்கி, யூசிஓ வங்கி, ஐடிபிஐ , பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஆந்திர வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 9 வங்கிகள் மூடப்பட உள்ளன.  இந்த வங்கிகளில் கணக்குகள் இருந்தால் உங்கள் பணத்தை பாதுகாத்து கொள்ளுங்கள் மற்றும் அனைவரும் பகிரச் செய்யுங்கள். இது உச்ச நீதிமன்ற உத்தரவு.

மதிப்பீடு

விளக்கம்

ந்தியாவில் உள்ள 9 முக்கிய வங்கிகளை நிரந்தரமாக மூடப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன.

சமூக வலைதளத்தில் வைரலாகும் செய்தியில் ரிசர்வ் வங்கி ஆனது ஐடிபிஐ, பேங்க் ஆஃப் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என பலரும் நன்கு அறிந்த 9 வங்கிகளை நிரந்தரமாக மூடுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆர்பிஐ தரப்பில் அப்படியொரு தகவல் இல்லை. மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எனக் கூறினால் தான் பலரும் பகிர்வார்கள் என இறுதியில் அதனை குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த செய்தி குறித்த கேள்விகள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிய காரணத்தினால் ரிசர்வ் வங்கி அது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளது.

செப்டம்பர் 25-ம் தேதி ரிசர்வ் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில், ” ஆர்பிஐ சில வணிகமயமான வங்கிகளை நிரந்தரமாக மூட உள்ளதாக சில சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய நிதி செயலாளர் ராஜிவ், ” ஆர்பிஐ சில வங்கிகளை மூடப்போவதாக சமூக ஊடகங்களில்(கீழே உள்ள படம்) வதந்திகள் பரவி வருகிறது. எந்தவொரு பொதுத்துறை வங்கிகளையும் மூடப்போவதாக கேள்விகள் வேண்டாம். அரசு பொதுத்துறை வங்கிகளை மறுகட்டமைப்பு மூலம் வலிமைப்படுத்துகிறது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்க மூலதனத்தை அளித்து வருகிறது ” என செப்டம்பர் 25-ம் தேதி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

2019 ஆகஸ்ட் மாதம் இந்திய அரசாங்கம் 10 முக்கிய பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 பெரிய வங்கியாக மாற்ற உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. இதில், சில வங்கிகள் முன்பே இணைக்கப்பட்டு உள்ளன.

மேலும் படிக்க : 12 பொதுத்துறை வங்கிகளை நிரந்தரமாக மூட அரசு திட்டமிட்டுள்ளதா ?

ரிசர்வ் வங்கி பொதுத்துறை வங்கிகளை மூடப்போவதாக வதந்திகள் வெளியாவது முதல்முறை அல்ல. 2017-ல் இதேபோன்று 12 முக்கிய வங்கிகளை ரிசர்வ் வங்கி மூடப்போவதாக வதந்திகள் பரவியது. அப்பொழுது ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகள் தொடர்பாக தவறான செய்திகள் பரவி வருவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம்முடைய தேடலில், 9 முக்கிய வங்கிகளை ரிசர்வ் வங்கி மூடப்போவதாக பரவும் தகவல் வதந்தியே. மக்களை அச்சமடையச் செய்ய தவறான தகவலை பரப்பி வந்துள்ளனர். பொதுத்துறை வங்கிகள் மூடப்படுவதாக பரவும் செய்திகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி பதில் அளித்து உள்ளது.

இதற்கு முன்பாக, 2017-ல் இதே போன்ற வதந்திகள் பரவி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகளை இணைக்கும் முயற்சியையே மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader