This article is from Jun 04, 2021

13,000 கோடியில் 32% மட்டுமே தனக்கு கொடுக்கப்பட்டது என நீரவ் மோடி கூறினாரா ?

பரவிய செய்தி

நான் இந்தியாவிலிருந்து தப்பி ஓடவில்லை. நாடு கடத்தப்பட்டேன். 13 ஆயிரம் கோடி எடுத்துக் கொண்டு ஓடினேன் என்ற பணத்திலிருந்து என்னுடைய பங்காக 32 விழுக்காடே எனக்கு வழங்கப்பட்டது. மீதத்தை பிஜேபி தலைவர்கள் பிரித்துக் கொண்டார்கள் – லண்டன் நீதிமன்றத்தில், நிரவ் மோடி. சிபிஐ சத்தமில்லாமல் இருக்கிறது.

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் ஈடுபட்டு இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய அரசு முயன்று வருவதாக செய்திகளை படித்து இருப்போம். எனினும், அதுதொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் இருக்கிறது.

இந்நிலையில், ” 13,0000 கோடியில் 32% மட்டுமே எனக்கு வழங்கப்பட்டது, மீதம் உள்ளதை பாஜக கட்சி தலைவர்கள் எடுத்துக் கொண்டதாக ” லண்டன் நீதிமன்றத்தில் நீரவ் மோடி வாக்குமூலம் அளித்ததாக Aditi Munshi என்பவர் ட்விட்டரில் பதிவிட்டது தமிழ் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

Aditi Munshi எனும் ட்விட்டர் பக்கம் குறித்து தேடுகையில், வைரல் செய்யப்படும் ட்வீட் பதிவு காண்பிக்கப்பட்டது. ஆனால், அந்த ட்வீட் நீக்கப்பட்டு இருக்கிறது. எனினும், அந்த ட்வீட் Google Cached-ல் இடம்பெற்றுள்ளது

Aditi Munshi ட்விட்டரில் பதிவிட்ட தகவலை ட்விட்டர் வாசிகள் பலரும் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இணைக்கப்படாமலே பலரும் பகிர்ந்து இருக்கிறார்கள்.

இதேபோல், நீரவ் மோடி இந்தியாவில் இருந்து தப்பி செல்லும் முன் அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக தகவல்கள் பரப்பப்படுவது முதல்முறையல்ல.

2019-ல் நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது 13,000 கோடியில் 32% மட்டுமே தனக்கு கொடுக்கப்பட்டது, மீதமுள்ளவை காங்கிரஸ் தலைவர்களுக்கு வழங்கியதாகவும், பாஜக தலைவர்களுக்கு வழங்கியதாகவும் மாறி மாறி சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார்கள்.

Archive link 1 | Tweet link 2

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இரு கட்சியின் ஆதரவாளர்களும் ஒரே பொய்யான தகவலை மாற்றி மாற்றி பரப்பி இருக்கிறார்கள். அதே தகவல் தற்போது 2021ம் ஆண்டிலும் பரவி இருக்கிறது.

2019-ல் தொடங்கி லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் நீரவ் மோடி இந்திய அரசியல் கட்சி தலைவர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறினார் என இதுநாள் வரை இந்திய செய்தியோ அல்லது சர்வதேச செய்தியோ என எந்தவொரு செய்தியும் வெளியானதில்லை. அரசியல் காரணங்களுக்காகவே, நீரவ் மோடி கூறியதாக பொய்யான தகவலை கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், நான் இந்தியாவிலிருந்து தப்பி ஓடவில்லை. நாடு கடத்தப்பட்டேன். 13 ஆயிரம் கோடி எடுத்துக் கொண்டு ஓடினேன் என்ற பணத்திலிருந்து என்னுடைய பங்காக 32 விழுக்காடே எனக்கு வழங்கப்பட்டது. மீதத்தை பிஜேபி தலைவர்கள் பிரித்துக் கொண்டார்கள் என பரப்பப்படும் தகவல் தவறானது. கடந்த 2 ஆண்டுகளாக இதே பொய்யான தகவலை காங்கிரஸ் மற்றும் பாஜக என மாற்றி மாற்றி பரப்பி வந்துள்ளனர் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader