பெண்களின் பாதுகாப்பிற்கு நிர்பயா வாட்ஸ்அப் எண் | பயன்பாட்டில் இருக்கிறதா ?

பரவிய செய்தி
மனைவி, மகள்கள், சகோதரிகள், நண்பர்கள் என உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் 98333 12222 என்ற நிர்பயா எண்ணை பகிருங்கள். ஆபத்தான சூழ்நிலையில் பெண்கள் இந்த உதவி எண்ணிற்கு ஒரு மெசேஜ் அல்லது மிஸ்டு கால் கொடுத்தால் போதும் போலீஸ் நீங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து உங்களுக்கு உதவி செய்ய உடனடியாக வருவர்.
மதிப்பீடு
சுருக்கம்
நிர்பயா எண் மும்பை ரெயில் நிலையத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட சேவை. ஆனால், தற்பொழுது அந்த சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
விளக்கம்
இந்தியாவின் மெட்ரோ சிட்டிகள் முதல் கிராமப்புறங்கள் வரை பெண்களின் பாதுகாப்பு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது. பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல்கள், கொலை, கொள்ளை என பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், தனிமையில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் உதவி தேவைப்படும் நேரத்தில் 98333 12222 என்ற எண்ணிற்கு மெசேஜ் அல்லது மிஸ்டு கால் கொடுத்தால் அப்பெண் இருக்கும் இடத்திற்கு போலீஸ் வந்து உதவி புரியும் என்று வாட்ஸ்அப் , ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த எண் வைரலாகி வருகிறது.
98333 12222 என்ற நிர்பயா உதவி தொலைப்பேசி எண் உண்மையெனினும், நாடு முழுவதும் இந்த தொலைப்பேசி எண் பயன்பாட்டில் இல்லை. அதேநேரத்தில் இந்த உதவி எண்கள் மும்பை நகரத்தில் ரெயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் உதவிக்காக தொடங்கப்பட்ட சேவை.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிர்பயா உதவி தொலைப்பேசி எண் சேவையை மும்பை ரெயில்வே போலீஸ் தொடங்கி வைத்தனர். இதில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை குறிக்கும் எந்தவொரு நிகழ்வை பற்றியும் இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம், வீடியோ, ஃபோட்டோ எடுத்து அனுப்பலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 98333 12222 என்ற எண் போலீஸ் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினியுடன் இணைக்கப்பட்டதால் 24*7 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.
Yes, Woman helpline ” NIRBHAYA ” no. 9833312222 is active.
— Mumbai Police (@MumbaiPolice) March 6, 2017
Advertisement
இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட நாளில் 150-க்கும் அதிகமான மெசேஜ்கள் பெறப்பட்டுள்ளன. அதில், சில பேர் உதவி எண்ணை சோதித்து பார்க்கவும், பலர் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவும் மெசேஜ்கள் அனுப்பியுள்ளனர். இரயில்வே போலீஸின் இத்தகைய முயற்சிக்கு பல பெண்கள் அமைப்புகள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
நிர்பயா உதவி தொலைப்பேசி எண் மும்பை நகரத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இது இந்தியா முழுவதும் பயன்பாட்டில் உள்ளது எனத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
Updated :
மும்பையில் ரயிலில் செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட நிர்பயா அவசர உதவி 98333 12222 சேவை 2018-ல் இருந்து பயன்பாட்டில் இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. தற்பொழுது நிர்பயா அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பயன்பாட்டில் இல்லை என்பதை அறியலாம்.
இந்த ஃபார்வர்டு செய்திகளை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். மேலும், அவசர நிலைக்கு 100-க்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை தெரிவித்து உள்ளனர்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.