திரெளபதி முர்முவை விட எனக்கு தகுதிகள் அதிகமுண்டு என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
அரசியல், அனுபவம், குடும்ப பின்னணி என எல்லாவற்றிலும் முர்முவை விட எனக்கு தகுதிகள் அதிகமுண்டு. அதனால் புதிய பாராளுமன்றத்தை நான் திறந்து வைக்கமுடியுமா? பிரதமர் திறந்துவைப்பதுதான் முறை; மரபு. – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
டெல்லியில் வருகின்ற மே 28 அன்று புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடத்தை திறந்து வைக்குமாறு சமீபத்தில் மக்களவை சபாநாயகரான ஓம் பிர்மலா பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். மேலும் இதற்கான அழைப்பு எதிர்கட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத்தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்றும், சாவர்க்கரின் பிறந்தநாள் அன்று திறப்பதற்கான காரணம் என்ன? வேறு நாளில் திறப்பு விழாவை வைக்கலாமே என்றும்” எதிர்கட்சிகள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இந்த விழாவை 19 எதிர்கட்சிகளும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால் இதற்கும் முர்முவுக்கு ரோசம் வரவில்லையெனில் …..பாவம் குடியரசுத் தலைவருக்கு நாமாவது மரியாதை தருவோம். pic.twitter.com/rfczmqgnqY
— இரத்தினவேலு வசந்தா. (@vasantalic) May 25, 2023
இந்நிலையில் சமீபத்தில் “அரசியல், அனுபவம், குடும்ப பின்னணி என எல்லாவற்றிலும் திரௌபதி முர்முவை விட எனக்கு தகுதிகள் அதிகமுண்டு. அதனால் புதிய பாராளுமன்றத்தை நான் திறந்து வைக்க முடியுமா? பிரதமர் திறந்து வைப்பதுதான் முறை, மரபு” என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், இந்திய குடியரசுத் தலைவரின் அரசியல் அனுபவம் குறித்தோ, குடும்பப்பின்னணி குறித்தோ நிர்மலா சீதாராமன் கூறியதாக கடந்த மே 25 அன்று எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து நிர்மலா சீதாராமன் ஏதேனும் பேசியிருக்கிறாரா என்பது குறித்து அவர் சமீபத்தில் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் சேகர்பாபு, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் அவர்களுடன் கூட்டாக News 7 தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில், ” சுதந்திரத்தின் போது நாட்டின் பிரதமரான ஜவர்ஹலால் நேரு அவர்களுக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பான செங்கோல் செய்து அனுப்பி வைக்கப்பட்டது, இதை நினைவு கூறும் விதமாக தமிழ்நாட்டிலுள்ள 28 ஆதீனங்களை சேர்ந்தவர்களையும், இந்த செங்கோல் செய்தவர்களையும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம்” என்று பேச ஆரம்பித்துள்ளதை காண முடிந்தது.
மேலும் சரியாக 25:48 நிமிடத்தில் குடியரசுத் தலைவர் முர்மு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசியவர், “குடியரசுத் தலைவர் முர்முவை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளார்கள், அதை என் வாயால் கூட விவரிக்க விரும்பவில்லை, குறிப்பாக ரப்பர் ஸ்டாம்ப் என்றும், அவர் தீய சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்றும் கூட சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தற்போதைய மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அதிக மரியாதை அளிக்கிறது” என்று கூறினார்.
அதேபோன்று 37:36 நிமிடத்தில் குடியரசுத் தலைவர் முர்மு திறந்து வைக்காமல் ஏன் பிரதமர் திறந்து வைக்க உள்ளார் என்ற கேள்விக்கு, இதற்கு முன்னர் சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிதாக கட்டிய சட்டசபையை திருமதி சோனியாகாந்தி அவர்கள் தான் திறந்து வைத்தார். எனவே இதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி தனது உரையை முடித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தந்தி டிவியின் ஃபேஸ்புக் பக்கத்தில் மே 25 அன்று நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் “ஜனாதிபதி முர்முவை கடுமையாக விமர்சித்தவர்கள், இன்று நாடாளுமன்றத்தை அவர் தான் திறக்க வேண்டும் என கோருகிறார்கள்- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று குறிப்பிட்டுள்ளதை காண முடிந்தது.
இதன்மூலம், நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் குறித்து பேசியது தொடர்பாக வெளியான தந்தி டிவி நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : புதிய பாராளுமன்றத்தை திறக்க சங்கராச்சாரியாரே தகுதியானவர் என துக்ளக் குருமூர்த்தி கூறினாரா ?
முடிவு :
நம் தேடலில், அரசியல், அனுபவம், குடும்ப பின்னணி என எல்லாவற்றிலும் முர்முவை விட எனக்கு தகுதிகள் அதிகமுண்டு என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவி வரும் தந்தி டிவி நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.